*ஸ்ரீ நரஸிம்ம வைபவம்
Radhe Krishna 01-08-2025
ஸ்ரீ நரஸிம்ம வைபவம்
Radhe Krishna 01-08-2025
Radhe Krishna. 01-08-2025
*ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 1 வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்*
அஹோபிலே கருட சைல மத்யே
க்ருபாவசாத் கல்பித சன்னிதானம்
லஷ்ம்யா சமாலிங்கித வாமபாகம்
லஷ்மி ந்ருஸிம்மம் சரணம் பிரபத்யே
ஸ்ரீயத் பதியான சர்வேஸ்வரன் ஸ்ரீமன் நாராயணன் சம்சாரிகளின் உஜ்ஜீவனத்துக்காக எத்தனையோ அவதாரங்களைப் பண்ணி அருளுகிறான். பலப்பல அவதாரங்களை ஆழ்வார்களும் அனுபவித்திருக்கிறார்கள். சாஸ்திரம் சொல்லுகிறது.
‘அஜாயமானஹா பஹுதா விஜாயதே’ பிறப்பே இல்லாதவனான பெருமான் பல பிறவிகளாகப் பிறக்கிறான். நம்மைப் போலக் கர்மத்தாலே உந்தப்பட்ட பிறப்பு பகவானுக்குக் கிடையாது. அவன் இச்சையாலே அவன் ஆசைப்பட்டு, பிறக்கிறானே தவிர நம்மைப் போலே நிர்பந்திக்கப்பட்டு அவன் பிறப்பது கிடையாது. பிறப்பில்லாத அவன் பல படிகளாகப் பிறக்கிறான்.
‘பிறப்பில் பல்பிறவிப் பெருமான்’ என்பதும், ‘சென்மம் பலப்பல செய்து’ என்பதும் நம்மாழ்வாருடைய திருவாக்கு. இத்தனையும் பிறந்தது எதற்காக?
சம்சாரி சேதனனாக ஜீவாத்மாவை திருத்தி, பணி கொண்டு தன் திருவடிகளில் சேர்த்துக் கொள்வதற்காகத்தான் இத்தனை அவதாரங்களையும் பண்ணினார். தான் வைகுந்தத்திலே மட்டுமிருந்தால் கீழே கிடக்கிறவனைக் கைதூக்கிவிட முடியாது. கிணற்றுக்குள்ளே ஒருவன் விழுந்துவிட்டான். சகதிக்குள்ளே ஒருவன் விழுந்துவிட்டால், எவ்வளவு தூரம் ஒருவனால் கைகொடுக்க முடியும்? கை எட்டுகிற அளவுதான் நீட்ட முடியுமே தவிர, அதற்கு மேல் கிணற்றில் விழுந்தவனைக் கைகொடுத்துத் தூக்கிவிட வாய்ப்பில்லை. நாமும் அந்தப் பள்ளத்துக்குள்ளே குதித்தாலொழிய நம்மால் அவனைத் தூக்க முடியாது.
அதேபோன்ற செய்கைதான் பகவானுடையது. நாமெல்லாம் பள்ளத்திலே விழுந்திருக்கிறோம். அதை ‘தூராக்குழி’ என்கிறார்கள் ஆழ்வார்கள். ‘அகங்கார மமகார காம க்ரோத லோப மதம் மாச்சர்யம்’ இவை ஒவ்வொன்றும் நாம் இருக்கும் பெரிய குழிகள். முப்பது அடி நாற்பது அடி கிணறு பார்க்கிறோம். கோவை பக்கம் போனால், கிணறுகள் 200 அடி 250 அடி என்று ஆழமிருக்கும். வடக்கே போனோமென்றால் ஆயிரம் அடி போட்டிருக்கிறார்கள். நாம் கிடக்கும் பள்ளம் ஆயிரமில்லை; பத்தாயிரமில்லை; லட்சமில்லை; அடி காண முடியாத மகாக் குழி, இந்த சம்சாரம் என்னும் மகார்ணவம்.
ஆளவந்தார் என்ற மகான் தெரிவிக்கிறார் ‘அபராத சஹஸ்ர பாஜனம்.’ அதாவது, ‘ஹே பகவன், பாவக் கடன்களை ஆயிரம் ஆயிரமாக சேர்த்து வைத்திருக்கிறேன். பயங்கரமான பெரியதான சம்சாரக் கடலின் நடுவில் விழுந்துவிட்டேன்.’
கடலின் மேல் பகுதியில் விழுந்திருந்தால் கூடப் பரவாயில்லை. அதன் ஆழத்தில் போய் விழுந்துவிட்டால் கை பிடித்துத் தூக்கக்கூட முடியாதே. அவ்வளவு ஆழத்திலே நாம் இருக்கிறோம். அவனோ, எவ்வளவோ உயரத்தில் இருக்கிறான். உயரத்தில் இருக்கிறவன் ஆழத்தில் இருக்கிறவனைக் கைபிடித்துத் தூக்க, இறங்கினால்தான் முடியும். அப்படி இறங்குவதைத்தான், அவதாரம் என்று சொல்கிறார்கள்.
பரந்தாமன் எடுத்தது ஆயிரம் ஆயிரம் அவதாரங்கள். அவற்றில் ஒரு பத்தை மட்டும் எடுத்து பெரியவர்கள் எல்லாம் அனுபவித்திருப்பதால், பத்து மட்டும்தான் அவனுடைய அவதாரங்கள் என்று சொல்ல முடியாது. யாருமே பத்து என்றும் சொல்லவில்லை. இருபது என்றும் சொல்லவில்லை. ஜென்மம் பலப்பல என்றும், ஜென்மங்கள் ஓடிப்போயின என்றும்தான் சொல்லியிருக்கிறார்கள். அத்தனையும் எதற்கு? அடியவர்களை ரக்ஷிப்பதற்காக. துட்டர்களை நிரசனம் பண்ணுவதற்காக. அப்படியொரு அவதாரம்தான் நரசிம்மாவதாரம்!
அந்தப் பத்து அவதாரங்களுக்குள்ளே, முதல் ஐந்து அவதாரங்களான, மத்ஸ்யாவதாரம், கூர்மாவதாரம், வராகாவதாரம், நரசிம்மாவதாரம், வாமன அவதாரம் இவை ஐந்தும் முதல் யுகத்தில் நடந்தவை. அடுத்துப் பரசுராம, ராமாவதாரங்கள் த்ரேதா யுகத்தில் நடந்தவை. பலராம கிருஷ்ணாவதாரங்கள் த்வாபர யுகத்தில் நடந்தவை. கடைசியாகக் கலி யுகத்தில் கல்கி அவதாரம் இனிமேல் நடக்கப் போகிறது. அப்படியானால், முதல் யுகத்துக்கானப் பெருமை, ஐந்து அவதாரங்களும் அந்த யுகத்தில் நடந்தன என்பதுதான்.
அதிலும் ஸ்ரீ நரசிம்மாவதாரத்துக்குத் தனிச்சிறப்பு உண்டு. யாதெனில், நரசிம்மப் பெருமானுக்கு முன்னே இருந்தவர்களெல்லாம் மிருகமாக மட்டும் அவதரித்தவர்கள். நரசிம்மருக்குப் பின்னே இருந்தவர்கள் எல்லாம் மனுஷ்யர்களாகவோ தேவர்களாகவோ அவதரித்தவர்கள். ஆனால் நரசிம்மாவதாரம்தான் மிருகத்வம் நரத்வம் மிருகமான தன்மை, மனிதனான தன்மை இந்த இரண்டும் சேர்ந்திருக்கிற அவதாரம். இதை ‘சிதாக்ஷீர நியாயம்’ என்று சொல்வார்கள்.
வைபவம் வளரும்…
*ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 2 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்*
‘சிதாஷீர நியாயம்’னா என்ன?
பாலில் சர்க்கரை போட்டு நாம் சாப்பிடுகிறோம். சர்க்கரையே சேர்க்காமல் ஒருவர் பாலே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
சர்க்கரையே தெரியாது. சரியென்று பாலையே குடித்துக் கொண்டிருப்பார்.
பாலே தெரியாது. சர்க்கரை மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் இன்னொருவர். அவர் சர்க்கரையை சாப்பிடுவார். ஆனால், பாலில் ஒரு நாள் சர்க்கரையைக் கலந்து சாப்பிட்டுவிட்டார் என்றால், அப்புறம் தனித்தனியாக சாப்பிடுவதற்கு எண்ணமே போகாது. சர்க்கரை இல்லாத பாலை சாப்பிடுவோமா? பால் இல்லாத சர்க்ரையைத்தான் சாப்பிடுவோமா?
அதுபோல, மத்ஸ்யாவதாரம் மீனான அவதாரம். கூர்மாவதாரம் ஆமையான அவதாரம். வராகாவதாரம் பன்றியான அவதாரம். இவை மூன்றும் மிருகமாக மட்டுமே பிறந்தவை. நரசிம்மப் பெருமானுக்குப் பிற்பட்ட முதல் அவதாரம் வாமனாவதாரம். தேவனாகப் பிறந்தார். இந்திரனுக்குத் தம்பிதான் வாமனாவதாரம். பரசுராம, ராம, பலராமன், கல்கி இவை எல்லாமே மனுஷ்யனான அவதாரங்கள்.
நர – சிம்ஹர். அவர் மட்டுமே, ஒரு பக்கத்திலே மிருகமாக இருந்தார். மறுபக்கத்திலே மனிதனாக இருந்தார்.
கழுத்துக்கு மேலே சிங்க உரு. கழுத்துக்குக் கீழே மனித உரு. சேராத இரண்டைச் சேர்த்தார் எம்பெருமான் – பாலும் சர்க்கரையும் சேர்த்தாற்போலே. சேர்த்து அனுபவித்து விட்டோமென்றால் தனியாக மிருகாவதாரத்துக்கும் புத்தி போகாதாம்; தனியாக மனுஷ்யாவதாரத்துக்கும் புத்தி போகாதாம்.
இந்த நரசிம்மாவதாரத்தை, ஆழ்வார்கள் அனைவரும் ஆச்சர்யமாக அனுபவித்துள்ளார்கள். முக்கியமாக எம்பெருமான் அஹோபில திவ்யதேசத்திலே சேவை சாதிக்கிறார்.
அந்த நரசிங்கரையும் லக்ஷ்மி நரசிம்மராகப் பல இடங்களில் வணங்குகின்றோம். யோக நரசிம்ம சுவாமியாகப் பல இடங்களில் சேவை சாதிக்கிறார். என்றோ நடந்த நரசிம்ம அவதாரத்தை நாம் இழந்துவிட்டோம். அன்றைக்கு நாம் சேவிக்கவில்லையே என்ற குறை இருக்கிறதே அந்தக் குறை தீரத்தான், விக்கிரக வடிவில் எத்தனையோ திவ்ய தேசங்களில் எம்பெருமான் சேவை சாதிக்கிறார். அதில், பிரதான திவ்யதேசம் என்று பார்த்தால் அஹோபிலம்.
அஹோபிலம், நவ நரசிம்ம க்ஷேத்ரம் என்று பெயர்பெற்ற திவ்யதேசம். கீழ் அஹோபிலம்; மேல் அஹோபிலம். ஜ்வாலா நரசிம்மர், பாவன நரசிம்மர். பார்க்கவ நரசிம்மர், சத்ரவட நரசிம்மர்… என்று ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நரசிம்மராக பகவான் அங்கே சேவை சாதிக்கிறார்.
அதோடு மட்டுமில்லாமல் ‘சோள சிம்மபுரம் கடிகாசலம்’ – ஒரு நாழிகைப் பொழுது அந்த மலையில் நாம் நின்று விட்டோமானால் அனைத்துப் பாபங்களும் நீங்கிப்போகும். அதிலும், கார்த்திகை மாதத்து ஞாயிற்றுக்கிழமை என்று சொன்னால் அவ்வளவு கூட்டம். கால் வைக்க இடம் இருக்காது. நாற்பது ஐம்பதாயிரம் பேர் ஞாயிற்றுக்கிழமை தோறும் சேவிக்கிறார்கள்.
திருமங்கையாழ்வார் பாடினார்
‘மிக்கானை மறையாய்த் தெரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலி கின்னாப் பொன்மலையைத்
தக்கானைக் கடிகத் தடம் குன்னின் மிசை இருந்த
அக்காரக்கனியை அடைந்துய்ந்து போனேனே.’
அக்காரம் என்றால் சர்க்கரை. அந்த சர்க்கரையில் கனி செய்தால் எப்படி இருக்கும்?
கர்நாடகத்தில் கல்யாணம் போன்ற விசேஷங்களுக்கு சர்க்கரையால் ஆன பொம்மையாகப் பழம் செய்து சீர் வைப்பார்கள். திருமங்கையாழ்வார் இதைத்தான் சொல்லியிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு இவ்வளவுதானா பெருமாள் என்று நினைத்துவிட வேண்டாம். சர்க்கரையை விதையாக விதைக்க வேண்டுமாம்.
சர்க்கரையே மரமாக முளைக்க வேண்டுமாம். அந்த சர்க்கரை மரம் பழுக்க வேண்டுமாம். அந்தப் பழம்தான் சர்க்கரைப் பழமாம்! அதாவது அக்காரக்கனி! இது மாதிரி நடக்குமா என்று அடியேனைக் கேட்க வேண்டாம்.
சர்க்கரையை விதைத்து அது மரமாகிப் பழுக்க வேண்டுமானால், அந்தக் கனி எவ்வளவு மதுரமாக (இனிமையாக) இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இதற்கு ‘அபூதோபமா’ என்று பெயர். இல்லாததை உவமையாகச் சொல்வது. அப்படிப்பட்ட அக்காரக்கனி பெருமாள் கடிகாசலத்திலே எழுந்தருளியுள்ளார்.
அதேபோலக் காஞ்சிபுரத்திற்கு அருகிலே வந்தால் வேளுக்கை ஆளரி. வேளுக்கை என்பது அந்த ஊரின் பெயர். ஆள் என்றால் மனிதன். அரி என்றால் சிங்கம். ஆளரி, கோளரி என்ற இரண்டும் கலந்த வடிவிலே அங்கு சேவை சாதிக்கிறார்.
திருநாங்கூருக்கருகிலே திருவாலி திருநகரி. அங்கு பஞ்ச நரசிம்மர்கள் சேவை சாதிக்கிறார்கள்.
இதுபோல் அடியார்கள் தன்னை சேவிக்க வேண்டும் என்றும், தன் தரிசனத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காகவும்தான் லக்ஷ்மி நரசிம்மனாய், யோக நரசிம்மனாய் பற்பல திவ்ய தேசங்களில் பெருமாள் சேவை சாதிக்கிறார்.
பிரதானமாய் சென்னைப் பட்டினத்துக்குப் போகிறோம். திருவல்லிக்கேணியில் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். அங்கு பார்த்தசாரதி மூலமூர்த்தி. நின்ற திருக்கோலம். அவருக்கு நேர் பின்புறம் தெள்ளிய சிங்கப் பெருமான்.
‘தெள்ளிய சிங்கத் தேவை திருவல்லிக் கேணி கண்டேனே’ என்பது திருமங்கையாழ்வார் பாசுரம். பெருமாள் ரொம்பவும் தெளிவாய் இருக்கிறாராம்.
லக்ஷ்மி நரசிம்மனாய் இருக்கிறார்; யோக நரசிம்மனாய் இருக்கிறார்; தெள்ளிய சிங்கப் பெருமானாய் இருக்கிறார். அவருடைய பெருமை யாருக்குத் தெரியும்? ஒருத்தருக்கும் தெரியாது. சிங்கப் பெருமான் பெருமை சொல்லி முடியாது என்றே நம்மாழ்வார் ஆனந்தப்படுகிறார்.
எங்குமுளன் கண்ணனென்ன மகனைக்
காய்ந்திங்கில்லையாலென்று இரணியன் தூணுடைப்ப
அங்கப்போதே அவன் வீயத் தோன்றிய
என் சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே
ஒவ்வொரு ஆழ்வாரும் இந்தப் பெருமானை ஒவ்வொரு கோணத்திலிருந்து அனுபவித்திருக்கிறார்கள். பல கோணங்கள். தொடர்ந்து பார்ப்போம்…
(வைபவம் வளரும்)
*ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 3 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்*
சிங்கம் என்று நினைத்தாலே நமக்கு என்ன தோன்றும்? பயங்கர உருவத்தோடு இருக்கும்; வாய் பிளந்திருக்கும்; பிடரி சிலிர்த்திருக்கும்; கண்கள் எரிதழலைப் போல இருக்கும் ; நாக்கைச் சுழற்றினாலே பிராணிகள் உயிர்போய்விடும் என்றுதானே உடனே நினைக்கிறோம்? இல்லை! இல்லை! பிரியங்கரமான உருவம். நரசிம்மப் பெருமானுடைய உருவம் அழகானது இது ஒரு ஆழ்வாரின் கோணம்.
அடுத்தவர் சொன்னார்: அழகு இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அழகு ஒரு பக்தனுக்கு எப்போது பிடிக்கும்? திருமேனி அழகு மட்டுமல்ல உடல் அழகாய் இருப்பது கூடப் பெரிதல்ல. ஆனால், உள்ளம் அழகாய் இருக்க வேண்டுமே? மனசு அழகாய் இருக்க வேண்டுமே? திருமேனி மட்டும் அழகாய் இருந்து, உள்ளம் அழகாய் இல்லாமல் போய்விட்டால் என்னாகும்? நரசிம்மப் பெருமானுக்கு அப்படி அல்ல. திருவுள்ளமும் ரொம்ப அழகாய் இருக்கிறது. அப்படி என்னதான் அந்தத் திருவுள்ளத்திற்கு ஏற்றம் என்று கேட்டால், ஒரு சிறு குழந்தைக்கு ஆபத்து வந்தபோதும் அவனையும் ரக்ஷிப்போம் என்று ஓடோடி வந்தான் அல்லவா? அதுதான் உள்ளத்தில் இருக்கும் அழகு.
ஒரு குழந்தை கூப்பிட்டால் வரவேண்டிய அவசியம் பகவானுக்கு இல்லையே? அப்படி ஓடோடி வந்ததுடன், அவன் கைகாட்டிய இடத்தில் ‘பிரஹ்லாத வரதனாய்’க் காட்சி அளித்தானல்லவா? இவர் எங்கேயோ காண்பிக்க அவர் எங்கேயோ தோன்றவில்லை! பிரஹ்லாதன் என்ற சிறுவன் எங்கு கைகாட்டினானோ, அதே இடத்தில் தோன்றினார்!
இன்னும் ஒரு அழகும் உள்ளது.
சேராத இரண்டை சேர்த்த பெருமை! அதாவது, மனிதனும் சிங்கமும் ஒன்றிணைந்த திருக்கோலம்.
ஒவ்வொரு அவதாரத்துக்கும் இப்படி தனிச்சிறப்பு உள்ளது. மத்ஸ்யாவதாரத்துக்குத் தனிச்சிறப்புள்ளது. கூர்மாவதாரத்துக்குத் தனிச் சிறப்புள்ளது. அதேபோல் இப்போது நாம் அனுபவிக்கப்போகும் நரசிம்மாவதாரத்துக்கும் தனிச்சிறப்புள்ளது. மற்ற எந்த அவதாரத்தையும்விட இதில் உள்ள தனிச்சிறப்பு, இது நமக்கென்று ஏற்பட்ட அவதாரம். எப்போதும் அடியவர்களுக்குக் கதை கதையாக வேதாந்த அர்த்தங்களாக சொல்லிக் கொண்டுபோனால், பிரயோஜனம் கிடையாது. எனக்கு அதில் ஏதாவது இருக்கிறதா என்றுதானே முதலில் கேட்போம்! நான் வெளிவருவதற்கு ஏதாவது உண்டா என்றுதானே கேட்போம்!
விஸ்வாமித்திரர், ராம லக்ஷ்மணர்களைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு மிதிலா தேசத்துக்குச் சென்றார். அப்போது சீதா கல்யாணம் நடக்க வேண்டும். வில்லை முறிக்க வேண்டும். அப்படியானால் அழைத்து வந்த குழந்தைகளை யாரென்று அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும் இல்லையா? ஒவ்வொருவரிடமாக அறிமுகம் செய்துகொண்டே வருகிறார். அப்போது அங்கே சதாநந்தர் என்ற பெரியவர் அமர்ந்திருந்தார். அவரிடம் ராமனைப் பற்றி, “வில்வித்தையைப் பிரமாதமாகக் கற்றவன். அயோத்தியின் சக்கரவர்த்திக்குத் திருமகன்” என்ற பெருமையைச் சொன்னால் அவர் அனாதரத்துடன் இருந்துவிட்டார். சதாநந்தர் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. பார்த்தார் விஸ்வாமித்திரர். இவருக்கு என்ன பிடிக்குமோ அதைச் சொன்னால், தான் கவனிப்பார் என்று புரிந்து கொண்டு மாற்றினார்.
‘நின் அன்னை சாபம் முடித்தனன்’ – அகல்யையின் சாபத்தைப் போக்கினவன் இந்த ராமன்தான், என்று புரியவைத்தார் (அகல்யையின் மைந்தன்தான் சதாநந்தர்). துணுக்கென்று எழுந்துவிட்டார் சதாநந்தர். நமக்கு என்ன வேண்டுமோ, அதைத்தான் எடுத்துக்கொள்வோம். இதைத்தானே எல்லோருமே பண்ணுகிறார்கள்!
ஆக, பத்து அவதாரங்களிலே நமக்கென்று ஏற்பட்டிருக்கும் அவதாரம் நரசிம்மாவதாரம்.
இந்த அவதாரத்தின்போது, பகவான் எழுந்தருளியிருந்தது வெகு குறைவான நேரம். ஒரு முஹூர்த்தகாலம்தான் பகவான் இருந்திருக்கிறார். அதற்குள்ளே பக்த பிரஹ்லாதனுக்கு அனுக்ரஹித்தார்; ஹிரண்ய கசிபுவை முடித்தார்.
பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
என்று கண்ணன் கீதையிலே சாதித்தாற்போலே, மூன்று பிரயோஜனங்களையும் நரசிம்மர் முடித்தார். பகவான் அவதரிக்கிறான் என்று சொன்னாலே, அது இந்த மூன்று பயன்களுக்காக!
சாதுக்களை ரக்ஷிக்க வேணும். ப்ரஹ்லாதன் என்னும் சாதுவை ரக்ஷித்துவிட்டார். துஷ்டர்களை முடிக்க வேணும். ஹிரண்யகசிபு என்ற துஷ்டனை முடித்தார். தர்மத்தை நிலை நிறுத்த வேணும். ஒரு சிறுவன் கூப்பிட்டாலும், பகவான் உடனே ஓடோடி வருகிறார். எங்கும் இருக்கிறார். இது முதலான தர்மங்களையெல்லாம் நிலை நிறுத்திக் கொடுத்தார்.
நரசிம்மாவதாரம் வெகு குறைச்சலான நேரத்துக்கு இருந்தாலும் மூன்று பயன்களையும் பகவான் முடித்தார். வைகுந்தத்துக்குத் திரும்ப எழுந்தருளினார்.
ஆனால், இன்றைக்கு இருக்கும் நாம் எப்படி சேவிக்க முடியும்? அது புரிய வேண்டும் என்றால், ‘நமக்கு’ என்பதன் அர்த்தம் என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும்.
‘நாம்’ என்றால் அசுரர்கள்; ராட்சதர்கள். எந்த விதமான புண்ணிய சிந்தனையும் இல்லாதவர்கள். நல்வழியில் போகாமல், இந்த சரீரம் நம்மை எந்த வழியில் பிடித்து இழுக்கிறதோ அந்த வழியில் செல்பவர்கள். இதுதான், ‘நமக்கு’ என்கிற வார்த்தைக்குச் சரியான விளக்கம்.
ஆழ்வார் தெரிவித்தார் ‘அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்’ அதாவது சரீரம் போனபடி தான் நான் போவேனே ஒழிய, நீ சாத்திரத்தில் சொன்னபடி, நான் போன நாளே கிடையாது.
‘அகிருத்திய கரணம்; கிருத்திய அகரணம்’ அதாவது, ‘எதையெல்லாம் பண்ணு என்று நீ சொல்லியிருக்கிறாயோ அதையெல்லாம் நான் பண்ணப் போவதில்லை. எதையெல்லாம் பண்ணாதே என்று சொல்லியிருக்கிறாயோ, அதையெல்லாம் நிச்சயமாகப் பண்ணுவேன்.’ இதைத்தான் நாம் வைத்துக் கொண்டிருக்கிறோம்.
“நீ இந்த அனுபவங்களை இந்த உலகத்தில் கொடுக்காமல், வைக்காமல் இருந்திருந்தால் அந்தப் பக்கமே நான் போயிருக்கமாட்டேனே” என்று தெய்வத்திடம் புலம்புகிறோம். அதற்கும், தெய்வத்தின் தலையிலே குற்றம் ஏற்றிக் கொண்டிருக்கிறோம் நாம்! ஓடக்காரன் ஓடத்தைக் கொடுத்தான்; துடுப்பையும் கொடுத்தான். இவன் துடுப்புப் போடத் தெரியாமல் பிரவாகத்தில் அடிபட்டு விழுந்து பிராணனை விட்டால் ஓடத்தைக் கொடுத்தவனைக் குற்றம் சொல்ல முடியுமா?
முடியாது; ஆனால், நாம் அதைச் சொல்லாமல் இருக்கிறோமா?
(வைபவம் வளரும்)
*ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 4 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்*
சேராததைச் சேர்ப்பவன்!
பகவான் கொடுத்த ஓடம்தான் இந்த சரீரம். துடுப்பு சரியாகப் போட்டு மோக்ஷத்துக்குச் சென்று சேர்வதற்காகத்தான் இந்த சரீரம் உள்ளது. நாம் அனர்த்தப்பட்டுப் போனால் சரீரத்தைக் கொடுத்தவனைக் குற்றம் சொல்ல முடியாது.
அதேபோல் பகவான் சாத்திரமும் கொடுத்து, ஞானமும் கொடுத்து, நல்லது எது தீயது எது என்று விவேகிக்கிற சக்தியையும் கொடுத்து, சரீரத்தையும் கொடுத்தானென்றால் நாம் அந்த வழியில் போகிறவர்கள் கிடையாது!
அசுர சுபாவத்தோடு இந்த பூமண்டலத்திலே உழலுகிறோம். கீதையிலே பகவான் சொல்கிறான். ‘அர்ஜுனா, தெய்வ சுபாவம் இருந்தால் மோக்ஷம் கிடைக்கும். ஆசுர (அசுர) சுபாவம் இருந்தால் சம்சாரம்.’ எது ஆசுர சுபாவம்?
கோரைப் பற்கள் இரண்டு நீட்டிக் கொண்டு தலையை சிலுப்பிக் கொண்டு கையில் பெரிய கத்தி சூலங்களுடன் “ஹா ஹா” என்று சிரித்துக்கொண்டு போய்க் கொண்டிருந்தால்தான் அது ஆசுர சுபாவம் என்று நாம் நினைப்போம். கிருஷ்ணன் சொன்னது அப்படி அல்ல. “அர்ஜுனா நான் வேதத்தில் எதை விதித்தேனோ, அதை மீறி எவன் நடந்தாலும் அவன் அசுரன். வேதத்தில் சொன்னதை யார் ‘ஆம்’ என்று ஒத்துக்கொண்டு அதன்படி நடக்கிறானோ, அவர்கள் எல்லோரும் தேவர்கள்.” பிறப்பால் தேவர்கள் என்றும் அசுரர்கள் என்றும் கீதையிலே கண்ணன் பிரிக்கவில்லை.
தேவர்கள் என்பதும் அசுரர்கள் என்பதும் நடத்தையாலே விதிக்கப்படுபவை தான். நாம் வேதத்தை ஒத்துக் கொள்கிறோமா? முதலில் நமக்கு வேதமே தெரியாதே! தெரிந்தாலன்றோ, ஒத்துக் கொள்வதும் ஒத்துக்கொள்ளாமல் போவதும். அத்யயனத்தின் பக்கம் நாம் போனதே கிடையாது.
சரி; நாம்தான் பண்ணவில்லை என்றாலும் அறிந்தவர்கள் வாய்மொழியைக் கேட்டாவது தெரிந்து கொள்ளலாம் இல்லையா? பெரியோர்கள் எத்தனையோ பேர் அத்யயனம் பண்ணியிருக்கிறார்கள். அவர்கள் சொல்படி கேட்டாவது நடக்கலாமே என்றால், பெரியோர் சொல்படி கேட்பது என்பதே கிடையாது.
ஒருவனுக்கு துர்த்தசை (கெட்டநேரம்) வந்துவிட்டது என்றால், அதற்கான முதல் லக்ஷணம் என்ன தெரியுமா? பெரியோர் வாய்ச்சொல்படி கேட்பதை நிறுத்திவிடுவான். அப்படி நிறுத்திவிட்டானென்னால் அடுத்தது அவனுக்கு அனர்த்தம்தான் என்பது நிச்சயப்பட்டுவிடும்.
ஆக, வேதத்தையும் கற்காமல் கற்றவர்களையும் கேட்டு நடக்காமல் இருப்பவர்கள்தான் அசுரர்கள். அப்படியானால் நாம் யார்? சுலபமாய்ச் சொல்லிவிடலாம் நாம் அசுரர்கள்தான்.
ஒருவன் ஆசார்யனிடத்தில் போய்ச் சொன்னானாம், “ராமாயணமெல்லாம் கதை. பாகவதமெல்லாம் கற்பனை. மகாபாரதம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. யாரோ ஒருவர் வால்மீகியையெல்லாம் தூண்டிவிட்டுக் கற்பனைக் கதை எழுத வைத்துவிட்டார்கள். சாத்திரம் அத்தனையும் பொய்” என்றானாம். அதற்கு ஆசார்யன் சொன்னாராம், “வாஸ்தவம்தான். ராவணன் என்பவன் கிடையாது. சிசுபாலன் என்று ஒருவன் இல்லவே இல்லை. ஹிரண்யகசிபு வாழவே இல்லை. ஆனால், அதற்கெல்லாம் சேர்த்து வைத்து நீ ஒருவன்தான் இருக்கிறாயே!” என்றாராம்.
சாத்திரம் அத்தனையும் பொய் என்று எவன் ஒருவன் சொல்கிறானோ அவன் தான் ராவணன் கும்பகர்ணன் ஆவானே தவிர வேறு யாருமில்லை!
ஆக, சம்சாரிகளான நாம் ஒவ்வொருவரும், பகவானுடைய வைபவத்தை மறந்து அவனாலே சரீரம் கொடுக்கப்பட்டது என்பதை மறந்து அவனைச் சென்று சேர்வதுதான் நமக்குக் கடமை என்பதையும் மறந்து அவனுக்குக் கைங்கர்யம் என்றால் இன்னது என்பதையே ஞாபகத்தில் கொள்ளாமல் வாழ்கிறோம்.
வென்றிய வேண்டி வீழ்பெருக் கிணங்கி வேர்க்கனார்க்கலவியே கருதி
நின்னவானெல்லாம் நெஞ்சென உடையேன்
வேத நூல் பிராயம் நூறு மனிஷர்தான் புகுவரேலும்
பாதியும் உறங்கிப்போகும் நின்னையிப்பதினையாண்டு
பேதை பாலகன் அதாகும் பிணி பசி மூப்பு துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே
என்று ஆழ்வார் சாதித்தார்:
“இன்னும் எத்தனை காலம்தான் இந்த சம்சாரத்தில் உழலப்போகிறேன் என்று தெரியவில்லை. மறுபடியும் மறுபடியும் இப்பிறவி வேண்டாம்’ என்கிறார். ஆழ்வார்கள் கதறுகிறார்கள். நமக்கோ இதுதான் சௌக்கியமாக இருக்கிறது.
நாம் வெளுத்த ஆடையுடன் வந்துவிடுகிறோம். ரொம்பவும் அழகாக சிரித்துக் கொண்டு இருந்துவிடுகிறோம். சுபாவம் அத்தனையும் அசுரர்களுக்கும் ராட்சதர்களுக்கும் உள்ள சுபாவம்தான். நாம் அசுரர்கள் என்றால், எவ்வளவு தாழ்ந்து போய்விட்டோம். அப்படித் தாழ்ந்து போய்விட்டோம் என்றால், பகவானை அடைவதற்கு வழியே கிடையாதா? அவன் திருவடிகளே கிடைக்காதா?
தவறு செய்தது உண்மை. ஆனால், ‘ஐயோ நாம் தவறிழைத்துவிட்டோமே…இனி நாம் இதுபோல் இருக்கக்கூடாது’ என்கிற நல்லெண்ணம் தோன்றிவிட்டால், அவர்களுக்காவது வழி கிடைக்குமா கிடைக்காதா? என்கிற சந்தேகத்தைப் போக்குவதற்காக ஏற்பட்ட தனிச்சிறப்பான அவதாரம் ஸ்ரீ நரசிம்ம அவதாரம்.
நாமெல்லாம் ரிஷிகளை சேவிக்கப்போகிறோம். ரிஷிகளைப் பற்றிய சித்திரங்களை… படங்களை எழுதி வைத்திருப்பார்களல்லவா? ஒரு பக்கம் ஒரு மான் இருக்கும். இன்னொரு பக்கத்தில் ஒரு புலிக்குட்டி படுத்துக் கொண்டிருக்கும். நமக்குத் தோன்றும்… மானும் புலியும் என்றைக்காவது சேர்ந்து இருந்து நாம் பார்த்திருக்கிறோமா? உடனே பிடுங்கிக் கடித்து விடும் அல்லவா? ஆனால், அந்த ரிஷியின் பக்கத்தில் இருக்கும் போது, மான் குட்டியும் பேசாமல் இருக்கிறது. புலியும் பேசாமல் இருக்கிறது.
அதைப் போலத்தான் யோகேஸ்வரனான பகவான், சேராத இரண்டை சேர்த்தான். இதைத்தான் ‘அகடிதகடணா சாமர்த்தியம்’ என்று சொல்வார்கள். நரசிம்மப் பெருமானிடம் ஆச்சர்யப்பட்டதே இந்த ‘சேராததை சேர்க்கும் தன்மை’தான்.
நல்குரவும் செல்வம் நரகமும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்
திருவிண்ணகர் ஒப்பிலாத அப்பன்
ஒப்பிலியப்பன் பற்றி, ஆழ்வார் ஆறாம் பத்தில் பாடும்போது, எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்துவிட்டார்.
சுகம் - துக்கம், லாபம் – நஷ்டம், வெற்றி – தோல்வி, அமுதம் – விஷம், பணம் - தாரித்ரியம் என்று எதிரெதிராக என்னென்ன உண்டோ, அவை மொத்தத்தையும் சேர்க்கிறார். ‘சேராததை சேர்க்கும் தன்மை’ நரசிம்மரின் பெருமை. இது ஒரு கோணம்.
இன்னொன்று, ‘தாரக தார்ய பாவம்!’ அதென்ன?
(வைபவம் வளரும்)
ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 5 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்
பக்திக்கு அடங்கிய கோபம்!
பகவான், சர்வ வியாபி. நம் ஒவ்வொருவருக்குள்ளேயும் வியாபிக்கிறார். நமக்கு வெளியேயும் வியாபிக்கிறார்.
நமக்கு வெளியே வியாபிக்கிறார் என்றால், அவர் நம்மைத் தாங்குகிறார் என்று அர்த்தம்.
என்னிடம் ஒரு கைக்கடிகாரம் இருக்கிறது. அதை நான் கையில் எடுத்துக் கைகளால் மூடிவிடுகிறேன் என்று வைத்துக் கொள்வோம். அப்போது, என் கைகள் அதைச் சுற்றி வியாபித்திருக்கிறது என்று அர்த்தம். என் கைகள் அதைத் தாங்குகிறது.
அதேபோல்தான் பெருமாளும். முழுக்க வெளியில் வியாபித்து, நம் அனைவரையும் அவர்தான் தாங்குகிறார்.
இதைத்தான் தாரக தார்ய பாவம் என்று சொல்வார்கள். பகவான் தாரகனாக இருக்கிறார். நாம் அனைவரும் தரிக்கப்படுபவர்களாக (அணியப்படுபவர்களாக) இருக்கிறோம். அவர் தாங்குகிறார். நாம் தாங்கப்படுபவர்களாக உள்ளோம். அதற்காகத்தான் வெளியில் வியாபித்திருக்கிறார்.
கையில் வைத்திருக்கும் கைக்கடிகாரத்துக்குள் நான் போக முடியுமா? அது என்னால் முடியாது. ஆனால், பகவான் நமக்குள்ளும் வியாபிக்கிறார். வெளியிலும் வியாபிக்கிறார். வெளியில் எங்கும் இருக்கிறார் என்றால் தாங்குகிறார் என்று அர்த்தம். நமக்குள்ளே வியாபிக்கிறார் என்றால், அவர்தான் ஆணை செலுத்துகிறார் என்று அர்த்தம்.
நமக்குள் புகுந்துகொண்டு பெருமாள் நியமிக்கிறார். சர்வ வியாபகனாய் சர்வ நியந்தாவாய் இருக்கிறார். இதை நாம் எவ்வாறு தெரிந்து கொள்கிறோம்? இங்கிருக்கிறார் என்று கைகாட்டியவுடன் அந்த இடத்தில் தோன்றிவிட்டார் அல்லவா!
எங்கிருக்கிறார் என்பது தானே ஹிரண்யகசிபுவின் சந்தேகம்! எங்கிருக்கிறார் என்று கேட்டான். எங்குமிருக்கிறார் என்று பிள்ளை சொல்லிவிட்டான்.
‘எங்குமுளன் கண்ணனென்ன மகனைக்காய்ந்து’ என்று ஆழ்வார் இதைத்தான் சொன்னார். ‘எங்குளன்’ என்பது கேள்வி. ‘எங்குமுளன்’ என்பது பதில். சின்னக் கேள்வி. சின்ன பதில். அவனுக்கு அந்த பதில் புரியவில்லை. யாராயிருந்தாலும் ஓர் இடத்தில்தானே இருக்க முடியும்? வேண்டுமானால் பெருத்துப் போய் இருக்கலாம். எல்லா இடத்திலும் ஒருவரால் இருக்க முடியுமா!
எங்குமிருக்கிறார் என்று பிள்ளை சொல்லியதும் தந்தைக்கு சந்தேகம். இங்கிருக்கிறானா என்று கேட்டான். அதற்கு ‘இங்கிருக்கிறான்’ என்ற பதிலைத்தானே அவன் சொல்ல வேண்டும். ஏனோ அந்த பதிலை அவன் சொல்ல மாட்டேன் என்கிறான். திரும்பத் திரும்ப எங்குமிருக்கிறார் என்று தான் அவன் சொல்லிக் கொண்டேயிருக்கிறான்.
ஒருவேளை பிரஹ்லாதன் அந்தத் தூணில் இருப்பதாகச் சொல்லிவிட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆயிரம் வருஷம் கழித்து ஒரு நாத்திகன் வந்து “பிரஹ்லாதனே அந்தத் தூணில் இருப்பதாக ஒத்துக் கொண்டு விட்டான். அதனால், பக்கத்துத் தூணில் இல்லை என்று அர்த்தம்” என்று வாதாட வருவான் அல்லவா! இதற்கு எந்த ரூபத்தில் எதிர்ப்புக் கிளம்பும் என்றே சொல்ல முடியாது. ஓர் இடத்தில் இருக்கிறான் என்று சொல்லிவிட்டால், அடுத்த இடத்தில் இல்லை என்று தானே அர்த்தம் வருகிறது? யாராவது இதைச் சொல்லிவிடுவார்களோ என்று குழந்தைக்கு பயம். அதனால்தான் ‘எங்குமுளன்’ என்றே சொல்லிக்கொண்டிருக்கிறான்.
ஆனால், ஹிரண்யகசிபுவுக்கு புத்தி போதவில்லை. “இங்கிருக்கிறானா?” என்று கேட்க, “இங்குமுண்டு. தந்தையே இங்குமுண்டு” என்றான். இவ்வாறு சொன்ன பிற்பாடுதான், பகவான் அவ்விடத்திலே தோன்றினான். ‘எல்லா இடத்திலும் பெருமான் இருக்கிறான்; சர்வ வியாபகன்’ இது ஒரு கோணம்.
ஆக, உருவத்திலும் அழகன். உள்ளத்திலும் அழகன், சேராத இரண்டை சேர்த்தவன், எங்கும் இருப்பவன் என்று எத்தனை கோணங்கள்!
இது மட்டுமல்ல இன்னொரு கோணம் இருக்கிறதே. எதையும் ஆயுதமாகப் பயன்படுத்துவார். சங்கல்பத்தாலே ஜகத்தை ரக்ஷிக்கிறார். பகவானுக்கு ஒரு ஆயுதத்தைக் கொண்டுதான் ரக்ஷிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஜகத்தை சிருஷ்டிப்பதோ, காப்பதோ அழிப்பதோ இவை அனைத்தையும் தன்னுடைய சங்கல்ப சக்தியாலே செய்கிறார்.
அவர் கண்ணால் பார்த்துக் கையால் ஜகத்தை சிருஷ்டிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. அவர் சிரமப்பட்டு எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சாந்தோக்ய உபனிஷத்தில் சத்வித்துயாப்ரஹரணம் சொல்வது என்னவென்றால் பிரம்மம் அப்படியே சங்கல்பித்துக் கொள்கிறதாம். ‘எல்லாமாக ஆகக்கடவேன்; எல்லாவற்றையும் படைக்கக் கடவேன்’. மனதுதான் நினைக்கும். நினைத்த மாத்திரத்திலே பண்ணுகிறான். கை கொண்டு கால் கொண்டு வியாபரிப்பதில்லை.
சங்க சக்ரம் இருந்தால்தான் ஜெயிக்க முடியும் என்பதில்லை. அதற்காகத்தான் நகம் என்கிற ஆயுதத்தைப் பயன்படுத்தினான். நரசிம்மாவதாரத்துக்கு ஆயுதம் சங்குமல்ல, சக்கரமுமல்ல, கதையுமல்ல, வாளுமல்ல, வில்லுமல்ல! வெறும் நகம்தான். ‘உகிர் நுதி’யாலேயே மொத்தத்தையும் கிழித்துவிட்டார் பெருமாள். இந்தக் கோணத்திலும் நாம் அனுபவித்துக் கொள்ளலாம்.
இப்படி ஒவ்வொரு ஆழ்வாரும் ஒவ்வொரு கோணத்தில் பகவானை அனுபவித்துள்ளார்கள். நூற்றுக்கணக்கான பாசுரங்களில் நரசிம்மப் பெருமானை அனுபவித்துள்ளார்கள்.
இந்த நரசிம்மப் பெருமான்தான் லஷ்மி நரசிம்மப் பெருமான். அப்போது பிராட்டி இருந்தாளோ? பிரஹ்லாதனுக்காக அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவைக் கொன்றுவிட்டார். அவருடைய கோபத்தை ஆற்ற வேண்டும் அல்லவா? அந்தக் கோபத்தை ஆற்றுவதற்கு யாராலும் முடியவில்லை.
சாக்ஷாத் மகாலக்ஷ்மியாலேயே முடியவில்லையாம்! அப்போது பிரம்மா பிரஹ்லாதனிடம் வந்து “பிரஹ்லாதா… யாராலும் பெருமாளுடைய கோபத்தை அடக்க முடியவில்லை. நீ ஒருத்தன்தான் பக்த பிரஹ்லாதன். பகவான் பக்தனிடம்தான் அடங்குவார். உன்னால்தான் அவருடைய கோபத்தைத் தணிக்க முடியும்” என்றாராம். பக்தர்களுக்காகவே பகவான் இருக்கிறார். பிரஹ்லாதன் ஒருத்தன்தான் அவருடைய கோபத்தைத் தணித்தான். அவனுடைய கோபத்தை மாற்ற நம் சக்தி கொண்டு மாற்ற முடியாது. நாம் கோபப்பட்டு மாற்ற முடியாது. பக்தியால்தான் அவனை மாற்ற முடியும். ஆகவேதான் அவன் பக்த பிரஹ்லாதன். பக்தி, அன்பு, பாசம், அடிமைத்தனம் இவற்றைக் காண்பித்துத்தான் நரசிம்மப் பெருமானுடைய கோபத்தைத் தணிக்க முடிந்ததாம்.
அவ்வாறு கோபம் மாறி, பிரஹ்லாத வரதனாய், அனுகிரஹ விசிஷ்டனாய் பகவான் எழுந்தருளியிருக்கிறார்.
இவ்வாறு, நரம் கலந்த சிங்க உருவாக பகவான் அவதாரம் பண்ணினது யாருக்காக? நம்மைப் போன்ற ஒரு அசுரப் பிள்ளைக்காக. தவறைத் திருத்திக் கொண்டால் ரக்ஷிப்பான் என்பதை நிரூபிப்பதற்காக. அசுரன் போன்ற நம் போன்றவர்களுக்காகக்கூட பகவான் தோற்றம் அளிப்பான்! அதற்காக பிரஹ்லாதனும் நாமும் ஒன்றாகி விடப் போவது கிடையாது. பிறப்பால் உயர்வு தாழ்வு வராது. நடத்தையால்தான் வரும். பிராமணன் என்று சொல்கிறோம். க்ஷத்ரியன் என்று சொல்கிறோம். வைஸ்யன் என்று சொல்கிறோம். இவையெல்லாம் பிறப்பால் வந்து விடப் போகிறதா?
(வைபவம் வளரும்
ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 6 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்
குளிர்விக்கும் கண்கள்!
கீதையில் கண்ணன் சொல்கிறான் அர்ஜுனா இந்த நாலு வர்ணத்தையும் நான்தான் உண்டாக்கினேன்.
சாதுர் வர்ண்யம் மயா சிருஷ்டம்
குணகர்ம விபாதச:
தஸ்ய கர்த்தாரபிமாம் வித்தே
அகர்த்தாமவ்யயம்
நமக்கு வேண்டியவாறு இருக்கும் சுலோகங்களை கீதையிலிருந்து எடுத்துக் கொண்டு, வேண்டாததை சிலபேர் தள்ளப் பார்ப்பார்கள். அவ்வாறெல்லாம் செய்ய இயலாது. அவ்வாறு கீதையில் செய்யவும் முடியாது. வேதத்திலும் செய்ய முடியாது. முதல் மூன்று வரிகளில் ‘நான்தான் நான்கு வர்ணங்களை உண்டாக்கினேன்’ என்று சொன்ன கிருஷ்ணன், நான்காவது வரியிலே ’அகர்த்தாமவ்யயம்’ என்று ஒரேயடியாக ’நான் சிருஷ்டி பண்ணவே இல்லை’ என்று சொல்லிவிட்டான். நாம்தான் முன்னுக்குப் பின் முரண்பட்டுப் பேசுவோம்! இது அப்படியல்லவா இருக்கிறது?
கண்ணன் நேர் விரோதமாய்ப் பேசுகிறானே என்ன அர்த்தம் என்று கேட்டால் ‘நான்கையும் நான் உண்டாக்கினேன் அர்ஜுனா – ஆனால், அதில் உயர்வு தாழ்வை நான் சிருஷ்டி பண்ணவே இல்லை’ என்று சொல்கிறான். இதில் உயர்வு தாழ்வு எதுவும் இருப்பதாக நான் எப்போது சொன்னேன்? நான் எப்போதுமே சொல்லவில்லையே? என் திருமேனியிலிருந்துதான் இத்தனை பேருமே தோன்றியிருக்கிறார்கள்.
ப்ராம்மணோத்ய முகமாதீது
பாஹூராஜன்யக்ருத:
ஊரூததஸ்யத்ய வைஸ்யவ:
பத்யாஹம் சூத்ரோ அஜாயத
விராட் சொரூபனான பகவானிடத்தில் முகத்திலிருந்து பிராமணனும், தோள்களிலிருந்து க்ஷத்ரியனும், தொடைகளிலிருந்து வைஸ்யனும், பாதங்களிலிருந்து சூத்ரனும் தோன்றினான். பிராமணனின் கடமை என்ன? முகத்திலிருக்கும் வாயைக் கொண்டு பேசிப் பேசித் தீர்க்க வேண்டும். அதனால் பிராமணன் முகத்திலிருந்து தோன்றினான். ராஜா தோள் வலியால் எதிரிகளை வென்று நாட்டை ஆள வேண்டும். அதனால் க்ஷத்ரியன் தோள்களிலிருந்து தோன்றினான். தொடையைக் கொண்டு அமர்ந்து வாணிகம் செய்யும் வைஸ்யன் தொடைகளிலிருந்து தோன்றினான். சூத்ரனின் கடமை என்ன? கால்களால் நடந்து நடந்து சென்று, வேலை செய்ய வேண்டும். மற்ற பேருக்குப் பணிவிடைகள் செய்ய வேண்டும். எனவே அவன் பாதங்களிலிருந்து தோன்றினான்.
இவர்களில் ஒருவன் உயர்ந்தவன் ஒருவன் தாழ்ந்தவன் என்றால் என்ன அர்த்தம்? பகவான் ‘என் திருவடிகள் தாழ்ந்தது. என் முகம்தான் உயர்ந்தது. என் தோள்தான் உயர்ந்தது’ என்று சொல்வதற்கு ஒப்பாகும். கால் இல்லையென்றால் என்ன ஆகும் என்பது நமக்குத் தெரியும். கையில்லை என்றால் என்ன ஆகும் என்பது நமக்குத் தெரியும். நம் சரீரத்தில் ஒரு மயிர்க்கால்கூடத் தாழ்ந்தது என்று சொல்லவே முடியாது. நம் சரீரத்திலேயே சொல்ல முடியாது என்றால் பகவானின் திருமேனியில் சொல்ல முடியுமோ?
அவன் முகத்துக்கு எந்த அளவு ஏற்றம் உண்டோ அந்த அளவு திருவடிக்கும் உண்டு. இன்னும் கேட்கப் போனால் அவன் திருவடிகளுக்கு இருக்கும் ஏற்றம் மற்ற எதற்குமே கிடையாதே! அதுதான் வைதிக முறை. அவன் திருவடிகளைத் தானே பிடித்துக் கொள்ள வேண்டும்? ஆக, நான்கையும் உண்டாக்கியவன் பகவானே தவிர உயர்வு தாழ்வுகளை உண்டாக்கியவன் அவனன்று. அது மட்டுமில்லை… அவன் நான்கைத்தான் உண்டாக்கினான். ஆனால் இன்றைக்கு ஒவ்வொன்றுக்குள்ளும் நானூறு அல்லவா ஏற்படுத்திவிட்டோம்! இதை எந்த கீதாச்சார்யன் உருவாக்கினான்? எந்தக் கண்ணன் சொல்லிக் கொடுத்தான்?
அவனுக்கு எந்த வேறுபாடும் இல்லை. அதனால்தான் சிறு குழந்தை அழைத்து ஓடி வந்தான். சரி அந்தக் குழந்தை அழைத்தபோது நரமும் சிங்கனும் கலந்து வந்து ரக்ஷித்தானல்லவா? அவனை ஏன் லக்ஷ்மி நரசிம்மன் என்கிறோம்? லக்ஷ்மி எங்கிருந்து அங்கு வந்தாள்?
லக்ஷ்மி திடீரென்று அங்கு முளைத்து வந்துவிடவில்லை. தாயாரைப் பெருமான் பிரிவதே கிடையாது. நாம் ஸ்ரீமன் நாராயணன் என்று சேவிப்பதெல்லாம் லக்ஷ்மி நாராயணனே! ஸ்ரீமன் நாராயணனே…
செல்வ நாராயணனே… லக்ஷ்மி நாராயணனே ஸ்ரீபதியே என்று பிராட்டியை சேர்த்து சேர்த்துத்தான் சேவிக்கிறோம்! பெயரிலேயே பாருங்களேன், லக்ஷ்மி நாராயணன் என்றும் லக்ஷ்மி ஹயக்ரீவன் என்றும் ஸ்ரீயஹ்பதி என்றும் திருமகள் கேள்வன் என்றும் திருமால் என்றும் பிராட்டி பெயரை சேர்த்து சேர்த்துத்தான் சொல்கிறோம். எல்லாவற்றிலும் ஸ்ரீயின் பெயர் முன்னாலேயே வருகிறது. பெருமாளின் பெயர் பின்னால் வருகிறது.
அப்படியானால் பெருமை யாருக்கு? லக்ஷ்மிக்குத்தான். அவளுக்காகத்தான் அனைத்து நன்மைகளையும் பெருமாள் செய்கிறார். குழந்தைகளை பகவான் ரக்ஷிப்பதே பிராட்டி சிபாரிசு செய்கிறாள் என்பதற்காகத்தான். லக்ஷ்மிதேவியை எப்போதும் விட்டுப்பிரியாத எம்பெருமான், திருமார்பிலேயே அவளை வைத்திருக்கும் எம்பெருமான் தன் மடியிலே வைத்துக் கொண்டு சேவை சாதிக்கிறான்.
அஹோபிலக்ஷேத்திரத்துக்கு கருட சைலம் என்கிற பெயர் உண்டு. அங்கு தனக்கென்று ஒரு சன்னிதானத்தைப் பெருமாள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். ‘லக்ஷ்ம்யா சமாலிங்கித வாம பாகம்’- லக்ஷ்மியாலே அணைக்கப்பட்ட இடது திருப்பக்கத்தை உடையவன். இடது திருமடியிலே அவளை வைத்துக் கொண்டிருக்கிறார். இவர் தன்னுடைய இடது கையினாலே பிராட்டியின் திரு இடையை அணைத்துக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட லக்ஷ்மி நரசிம்மரை வணங்குகிறேன்.
லக்ஷ்மிதேவி எப்போதும் பெருமானை விட்டுப் பிரியாமல் இருக்கிறாள். அவளைத் தன் மடியில் வைத்து அணைத்துக் கொண்டிருக்கும் சேவையை அஹோபிலத்தில் சேவிக்கிறோம். இதுபோல் பலப்பல க்ஷேத்திரங்களில் சேவிக்கிறோம். ஆனால் இப்போது நாம் பார்க்க விருக்கிற பெருமான், மைசூர்ப்பட்டணத்தில் எழுந்தருளி உள்ள யதுகிரி யதிராஜ ஜீயர் மடத்தைச் சார்ந்த லக்ஷ்மி நரசிம்மருடைய சன்னிதி.
ஆச்சர்யமாய் எழுந்தருளியிருக்கிறார். வாயைப் பிளந்துகொண்டு ஒரு பிலத்து வாரத்தைப் போலே; குகைத் துவாரத்தைப்போலே திறந்திருக்கிற வாய். அதில் நெருப்பைப் போலே, கங்கைப் போலே, வெளியில் தொங்கிக் கொண்டிருக்கும் நாக்கு. சிரித்துக் கொண்டிருக்கற திரு உதடுகள். சிரிப்பு ஒரு பக்கத்தில் உள்ளது. கோபம் ஒரு பக்கத்தில் உள்ளது. அருள் ஒரு பக்கத்தில் உள்ளது. பெரிய திருக் கோலத்தில் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். ஆச்சர்யமான கவசம் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறார்.
சௌம்யமான திவ்யமான திருமுக மண்டலத்தோடே பிராட்டி சேவை சாதிக்கிறார். பிராட்டியின் இரண்டு திருவடிகளும் நன்றாக சேவையாகிறது. எனில், அவர் என்ன சொல்கிறார் என்று அர்த்தம்? என்னுடைய திருவடிகளைப் பற்ற வேண்டுமென்றால் அதற்கு முன்பாக இதோ இந்த இரண்டு திருவடிகளைப் பற்று. அதைப் பற்றினால் அவள் சிபாரிசு பண்ணுவாள். அப்போதுதான் என்னுடைய திருவடிகளை உன்னால் பற்ற முடியும். பெருமாளோ கோபக்காரராக இருக்கிறார். கோபக்காரரின் முன்னால் போய் நின்றால், நம்முடைய பாபங்கள் அவர் கண்ணில் பட்டுவிடும். அவருடைய கண் சுமாராய்த் தெரிந்தால் பரவாயில்லை. அதுவோ மிகவும் தீக்ஷண்யமாய்த் தெரிகிறது அவருக்கு இருக்கும் ஞானத்துக்கு ஒரு பாவத்தைக்கூட அவர் விட்டே வைக்கப்போவதில்லை. அப்படியானால் என்னதான் வழி? இந்தப் பாவங்களை மறைப்பதற்கு ஒருத்தி வேண்டுமே!
தண்ணீர் கொதிக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை ஆற்றினால்தான் குளிக்க முடியும். அதை ஆற்றுவதற்குக் குளிர்ந்த நீர் வேண்டுமல்லவா? கோபம் என்ற கொதிநீரை ஆற்றுவதற்குத்தான் லக்ஷ்மி. அவளுடைய திருக்கண்களை சேவித்தோமென்றாலே, அவ்வளவு அருள் பொழிகிறாள். கோபக் கனல் பொறிக்க உள்ளன நரசிங்கப் பெருமானின் திருக் கண்கள். அப்படியே சேவித்தால் நாம் தாங்கமாட்டோம். லக்ஷ்மியுடன் சேவித்தால் கோபம் என்ற கொதிநீரை ஆற்றி விடுவாள். அதுவே அருட்பார்வையாக மாறிவிடுகிறது.
(வைபவம் வளரும்)
ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 7 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்
லக்ஷ்மிக்குப் பிடித்தவன்
எம்பெருமானின் இடது புறம் இருக்கும் லக்ஷ்மிதேவியின் திருவடிகளைப்பற்றினால், பெருமானின் திருவடிகளைப் பற்றிவிடலாம். அவர் தனது இடது திருவடியை மடித்துக் கொண்டிருக்கிறார். வலது திருவடியைக் கீழ்நோக்கி நீட்டிக் கொண்டிருக்கிறார்.
லஷ்மியின் திருவடிகளைப் பற்றிய பிற்பாடு, நம்முடைய திருவடிகளைப் பற்றுங்கள். அப்படிப் பற்றினால் பேரின்ப வாழ்க்கை கிட்டும். இவ்வுலக இன்பமும் கிட்டும்; அவ்வுலக இன்பம் கிட்டும். மோக்ஷானந்தத்தையே பெறலாம் என்று சொல்லிக்கொண்டே இந்தத் திருத்தலத்தில் – மைசூரில் உள்ள யதுகிரி யதிராஜ மடத்தில் – பெருமான் எழுந்தருளியிருக்கிறார்.
எல்லா ஆழ்வார்களுமே ஸ்ரீநரசிம்மனைப் பாடியிருக்கிறார்கள். மணவாள மாமுனிகள் தனது உபதேச ரத்தினமாலையில் தெரிவிக்கிறார்.
ஐப்பசியிலோணம் அவிட்டம் சதயமிவை
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்
பொதுவாக நம்மை மாதங்களை எண்ணச் சொன்னால் நாம் சித்திரை, வைகாசி என்று எண்ணிவிடுவோமாம். ஆனால், ஐப்பசி என்று ஆரம்பிக்க வேண்டுமாம். ஏனெனில் ஆழ்வார்களில் முதல்வர் ஐப்பசியில் அல்லவா அவதரித்தார்? நட்சத்திரங்களை எண்ணச் சொன்னால் அஸ்வினி, பரணி, கார்த்திகை, என்று… எண்ண ஆரம்பிப்போம் அல்லவா? அப்படி எண்ணாமல் திருவோணம் என்று ஆரம்பித்து எண்ண வேண்டுமாம்!
ஏனென்றால், ஐப்பசித் திருவோணத்தில் தான் பொய்கையாழ்வாருடைய திருஅவதாரம்.
திருக்கோவிலூர் என்ற ஊரிலே இடைகழியில் மூன்று ஆழ்வார்களும் சந்தித்துக் கொண்டார்களாம். இவர்கள் மூன்று பேரும் வெவ்வேறு இடத்திலே திருஅவதாரம் பண்ணினவர்கள். முதலாமவர் காஞ்சியில் அவதரித்தார். இரண்டாமவர் திருக்கடல் மல்லையிலே அவதரித்தார். மூன்றாமவர் மைலாப்பூரில் அவதரித்தார். அவர்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார். அவர்கள் மூவரும் திருக்கோவிலூரில் போய்ச் சேர்ந்தார்கள். மூன்று பேரும் மூன்று திருவந்தாதிகள் பாடினார்கள். முதல் திருவந்தாதி பொய்கையாழ்வார் பாடினார்.
‘வையந்தகளியா வார்கடலே
நெய்யாக
வெய்யகதிரோன் விளக்காக
செய்ய சுடராழியான் அடிக்கே
சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குக’
என்றார்.
நம் பாபங்கள் அத்தனையும், இடர்கள் அத்தனையும் நீங்குமாம். அதற்காக இதோ விளக்கேற்றினேன் என்ற பொய்கையாழ்வார் ஏற்றிவிட்டார்.
அடுத்து பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி பாடுகிறார்.
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா
நன்புருகி ஞானச்சுடர்
விளக்கேற்றினேன் நாரணர்க்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்
இரண்டு பேருமாகச் சேர்ந்து பெரிய விளக்காக ஏற்றிவிட்டார்கள்.
மூன்றாவதாக, பேயாழ்வார் பாடினார்
திருக்கண்டேன்; பொன்மேனி
கண்டேன்; திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்;
செருக்கிளறும்
பொன் ஆழி கண்டேன் புரி சங்கம்
கைக் கண்டேன்
என் ஆழி வண்ணன்பால் இன்று
என்று சேவித்தார் பேயாழ்வார்.
இந்த மூன்று ஆழ்வார்களும் ஐப்பசி திருவோணம், அவிட்டம் மற்றும் சதய நட்சத்திரத்தில் அவதரித்ததால்தான், ஐப்பசியில் ஆரம்பிப்பார்கள்.
அப்படியானால் கடைசி மாசம் எது என்ற கேட்டால் கார்த்திகை மாசம். திருமங்கையாழ்வார் அவதரித்த மாதம். அப்படியானால் கடைசி நட்சத்திரம் எது என்று கேட்டால், கிருத்திகா நட்சத்திரம். அவர் கார்த்திகையில் கிருத்திகையில் திரு அவதாரம் பண்ணினார் திருமங்கையாழ்வார். இவர்கள் நரசிம்மரை எப்படி தரிசனம் பண்ணினார்கள்?
பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதியில் சொல்கிறார்.
தழும்பு இருந்த சார்ங்கநாண் தோய்ந்தவாம் அங்கை
தழும்பு இருந்த தாள் சகடம் சாடி தழும்பு இருந்த
பூங்கோதையாள் வெருவ பொன் பெயரோன் மார்பு இடந்த
வீங்கு ஓத வண்ணர் விரல்
கடல் போன்ற நீல வர்ணம் படைத்த பெருமானின் விரல் என்றால் சக்தி! அழகிய இடது தோளில் எப்போதும் வில் இருக்குமாம். அது தேய்ந்து தேய்ந்து அவரது இடது தோளில் தழும்பு ஏற்பட்டு விட்டதாம். சொரசொரப்பு இருக்கும். எப்போது லக்ஷ்மிதேவி பெருமாளை ஆலிங்கனம் பண்ண வந்தாலும் அந்த சொரசொரப்பு இருந்தால்தான் அணைப்பாளாம். ஏனெனில் மழுமழுவென்றிருந்தால் அந்த ஆணுக்கு வீரமில்லை என்று அர்த்தமாம்.
ஒரு ராஜாவை அவனுடைய தர்மபத்தினி கைப்பிடிக்க வேண்டுமானால் அங்கங்கே அடிபட்டுத் தழும்பு இருக்க வேண்டுமாம். நாட்டை, ஜகத்தை ரக்ஷிக்கும்போது அந்தத் தழும்பு ஏற்பட்டிருக்க வேண்டுமாம். அப்படி இருந்தால்தான் பத்தினிக்குப் பிடிக்குமாம்.
வில் தேய்ந்து தேய்ந்து, அவரது இடது தோளில் தழும்பு ஏற்பட்டு விட்டதாம்.
(வைபவம் வளரும்
*ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 8 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்*
வரதன்!
கணவரின் தழும்பை விரும்புவதுதான் வீரபத்தினிக்கு அழகு!
‘கோட்டுக்கால் கட்டில்மேல்’ என்ற ஆண்டாள் பாசுரத்தில் வருகிறதே கட்டில். அந்தக் கட்டில் எப்படி செய்யப்பட்டதாம் தெரியுமா?
கட்டிலுக்குக் கால் செய்ய மரம் இல்லையாம். கண்ணன் பத்து வயசில் மதுரை நகரத்துக்குப் போய், அங்கிருக்கும் குவலயாபீடம் என்ற பெரிய யானையின் தந்தத்தை முறித்து எடுத்து வந்தாராம். அது எவ்வளவு பெரிய வீரச்செயல்! அந்த தந்தத்தைக் கொண்டு கட்டில் செய்து கொடுத்தால்தான் நப்பின்னை படுத்துத் தூங்குவாளாம்! ஏனெனில், அப்போது தான் நம் பர்த்தாவீரன் என்ற நம்பிக்கை அவளுக்கு வருமாம்.
அதுபோல இங்கேயும் ‘தழும்பு இருந்த சார்ங்கநாண் தோந்தவாம் அங்கை’ என்கிறார். அடியார்களை ரட்சிக்க வில் ஏந்தி, அதனால் சொரசொரப்பாகிய ஒரு தழும்பைச் சொன்னார். இது திருத்தோளின் மேல் உள்ள தழும்பு. மற்றொரு தழும்பு உள்ளது. அது திருவடியில் உள்ள தழும்பு.
ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் சகடாசுரனாக வந்தான் ஒரு அசுரன். வண்டிச் சக்கரத்தின் மேல் ஆவேசித்து தொட்டிலில் படுத்திருக்கும் குழந்தையைக் கொல்வதற்காக வருகிறான். அப்போது கண்ணன் ஓங்கி உதைத்தார். கண்ணன் யாரையும் கொல்வதற்காக சண்டையெல்லாம் போடவேமாட்டார். ராமாவதாரத்தில் தான், சண்டையிட்டு ஜெயிப்பதெல்லாம்! கிருஷ்ணாவதாரத்தில், அவர் குழந்தைத் தனத்துக்குத் தகுந்தாற்போலே ஏதாவது பண்ணுவார். அப்படிப் பண்ணும்போது நாலு பேருக்குப் பிராணன் போகும்.
கூரத்தாழ்வார் சொல்கிறார்: ‘விளக்கு ஏற்றி வைக்கிறோம். ஏற்றிய விளக்கில் விட்டில் பூச்சிகள் அதுவாக வந்துவிழும்.’ விளக்கு அதைக் கூப்பிடவே கூப்பிடாது. ஆனால், விட்டில் பூச்சி தானாக விழுந்து உயிரை விட்டுவிடும் அல்லவா? அதுபோல், ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கு! கண்ணனே விளக்கு! பூதனை ஒரு விட்டில் பூச்சி. அகாசுரன் ஒரு விட்டில் பூச்சி. அரிஷ்டாசுரன் ஒரு விட்டில் பூச்சி. தேனுகாசுரன் ஒரு விட்டில் பூச்சி. பகாசுரன் ஒரு விட்டில் பூச்சி. அவர்களாக வந்து விழுந்தார்கள். கண்ணன், வா வா… சண்டை போடுகிறேன்” என்றா அழைத்தார்? அவர் ஏதோ குழந்தைத்தனம் செய்தார். செய்யும் போது அவர்கள் இறந்து போனார்கள். தன் திருவடித் தாமரைகளாலே சகடாசுரனை உதைத்து விரோதிகளை அழித்தார். இதனால் திருவடியில் ஒரு தழும்பு உள்ளதாம்.
ஆக, ஒரு தழும்பு தோளில் உள்ளது. ஒரு தழும்பு தாளில் உள்ளது. ஒன்று பரத்வத்தை சொல்லியது. ஒன்று சௌலப்யத்தை சொல்லியது. பெருமாளுக்குப் பெருமையும் உண்டு; எளிமையும் உண்டு. பெருமையும் எளிமையும் யார் சம்பந்தத்தாலே ஏற்படுகிறது? அடுத்ததாக இன்னொரு தழும்பைப் பற்றி சொல்கிறார். மகாலட்சுமி அமர்ந்து அமர்ந்து மார்பில் ஒரு தழும்பு ஏற்பட்டு விட்டதாம்! இது மூன்றாவது அடையாளம். முதலில் தோளில் பெருமையும், தாளில் எளிமையும் சொன்னாரே, அந்தப் பெருமைக்கும் எளிமைக்கும் யாருடைய சம்பந்தம் காரணம்? இதோ திருமார்பில் தழும்பிருந்த பூங்கோதையாள். அவள் திருமார்பை விட்டு விலகாதிருக்கும் ஸ்ரீமகாலக்ஷ்மி தாயார். வக்ஷஸ்தலம் என்று சொல்வார்கள். மகாலக்ஷ்மி அமர்ந்து அமர்ந்து பெருமாளுடைய திருமார்பில் முக்கோண வடிவில் ஒரு மரு ஏற்பட்டுவிட்டதாம். திருவரங்கத்தில் சேவித்தாலும், வேறு எங்கு சேவித்தாலும் அதைப் பீடமாகக் கொண்டுதான் லக்ஷ்மி எழுந்தருளியிருப்பாராம். அதனால்தான் நித்ய ஸ்ரீ, அஜயா:, சாஸ்வத: என்றெல்லாம் மண்டோதரியின் வாக்கியமாக, வால்மீகி பகவான் ராமாயணத்தில் எழுதி வைத்துள்ளார்.
பெருமாளின் திருமார்பில் லக்ஷ்மி தேவி அமர்ந்திருப்பாள் அல்லவா? அவள் கால்களைத் தொங்கப் போட்டுக் கொண்டிருப்பாள் அல்லவா? அந்தக் கால்களுக்கு அர்ச்சனை செய்து, அடியார்கள் குங்குமம் சமர்ப்பிப்பார்கள் அல்லவா? அந்தக் குங்குமம் பட்டுப் பட்டுப் பெருமாளின் திருமார்பில் தழும்பு ஏற்பட்டுவிட்டதாம்!
தொழும் அடியார்களைக் கடைத்தேற்றுவதற்கு பகவான் பாடுபடுவானே தவிர, தள்ளிவிடுவதற்கு அவன் நினைக்கவே மாட்டான். நாமெல்லாம் பிறப்பாலே எப்படி இருந்தாலும், நடத்தையாலே அசுரர்களாகத் தாழ்ந்து போய்க் கிடக்கிறோம்.
நமக்கு வரம் கொடுக்க வேண்டும் என்ற ஆசை பெருமாளுக்கு. அவருடைய பெயரே வரதன் அல்லவா? இன்றைக்கும் வரதனாகக் காஞ்சிபுரத்திலே சேவை சாதிக்கிறார் பகவான். வரதன் என்ற பெயருக்கு என்ன அர்த்தம்? ‘வரம் ததாதீதி வரதஹ.’ அதாவது வரத்தை வாரி வாரிக் கொடுக்கிறான். நீங்கள் எல்லாரும் காஞ்சிபுரத்துக்குப் போய் வரதனை சேவித்திருக்கலாம். வரத்தை வாரி வாரிக் கொடுப்பவர் அவர். அவர் அப்படி ஒரு விரதம் வைத்திருக்கிறாராம். யார் யார் என்னென்ன வந்து கேட்டாலும், அதைக் கொடுத்தே தீர வேண்டும் வேண்டும் என்று வைத்திருக்கிறாராம்! இப்படி ஒரு தீக்ஷை பகவானுக்கு உண்டு. ஆனால், அதில் என்ன கஷ்டம் என்றால், அர்ச்சாவதாரமாக சிலை ரூபத்தில் நின்று கொண்டிருந்தால், சிலை வாய் திறந்து பேசுமா? நாம் அதன்கிட்டே போய் நின்றால் சிரிக்குமா? அதற்காக ஒருவனைத் தேர்ந்தெடுப்போம்’ என்று நினைத்தாராம். அவன் பிறப்பால் அசுரனாக இருந்தாலும், தன் நடத்தையாலும் வளர்ப்பாலும் பாகவதோத்தமனாக இருப்பவனைப் பிடிப்போம். அவன் வாக்காலே நாமும் வந்து அவதரிப்போம்’ என்று முடிவு பண்ணினார் பகவான்.
அதற்காகத் தோன்றிய அவதாரம் ஸ்ரீ நரசிம்மப் பெருமான் அவதாரம். ஆக, வரத்தைக் கொடுப்பவன் வரதன். நரம் கலந்த சிங்கமாக – நரசிம்மமாக, பிரஹ்லாதனுக்கு வரம் கொடுத்தவர் நரசிங்கப் பெருமான்.
(வைபவம் வளரும்)
*ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 9 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்*
ஹிரண்யன் கேட்ட வரம்!
ஆக நரசிம்மருக்கு என்ன பெயர்? பிரஹ்லாத வரதன். பிரஹ்லாதன் என்னும் குழந்தைக்கு வரத்தைக் கொடுத்து வரதனாக இருந்தான். ஹ்லாத (ஆஹ்லாத) என்றால் மகிழ்ச்சி; இன்பம்; ஆனந்தம்; குளிர்ச்சி என்று அர்த்தம். பிரஹ்லாத என்றால் அபாரமான இன்பத்தைக் கொடுப்பவன். நிரம்ப ஆனந்தத்தைக் கொடுப்பவன் என்று ஆகிறது. அவனுடைய சரித்திரத்தைக் கேட்பவர்களுக்கெல்லாம் துக்க சாந்தியை ஏற்படுத்துபவன்.
சந்திரனை (நிலாவை)ப் பற்றி சொல்லும்போது, ஆஹ்லாதகரம் என்பார்கள். அப்படியென்றால் குளிர்ச்சி ஏற்படுத்துபவன், இன்பத்தைக் கொடுப்பவன் என்று அர்த்தம். பிரஹ்லாத என்றால், நிறைய ஆனந்தத்தை வாரிக் கொடுப்பவன் என்பது அர்த்தம். அந்த இன்பமாகிய வரத்தை நமக்கு வாரி வழங்குகிறபடியால் பிரஹ்லாதனும் வரதன்தான். அவன் ஆஹ்லாதத்தைக் கொடுக்கிறபடியால் அவன் பிரஹ்லாத வரதன். இப்படி ஒரு அர்த்தம்.
பகவான் நமக்கு வரம் அளிப்பதற்கு உதவியவன் பிரஹ்லாதன். இப்படி ஒரு அர்த்தம். நரசிம்மப் பெருமான், பிரஹ்லாதனுக்கு வரம் கொடுத்ததால் பிரஹ்லாத வரதன். ஆக, இப்படி இரண்டு விதமாகவும் பார்க்கலாம்.
நரசிம்மப்பெருமான் எதற்காகத் தோன்றினான்? இந்த சரித்திரம் எல்லோரும் அறிந்ததுதான். கஸ்யபருக்கு மகனாகப் பிறந்தான் ஹிரண்யகசிபு. மிகுந்த வரம் பெற்றவன்.
வரத்தினில் சிரத்தை மிக்க வாள் எயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர்த்தலத்தை ஊன்றினா
இரத்தி நீ இது என்ன பொ இரந்த மண் வயிற்றுளே
கரத்தி உன் கருத்தை யாவர் காண வல்லர்? கண்ணனே
ஹிரண்யகசிபு அசுர குலத்தில் பிறந்தவன். வரத்தின் மீது மிகுந்த சிரத்தை வைத்துவிட்டானாம். இந்த வரத்தினால் சுப்ரீதனாக, சுப்பிரசன்னனாக பிரம்மா வந்து நின்றுவிட்டாராம். அவர் ஆனந்தப்பட்டுவிட்டால், எதையும் எடுத்துக் கொடுத்துவிடுவாராம்.
இன்றைக்கு இருக்கும் உலக வழக்கில், ‘மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்போது யாருக்கும் எதுவும் கொடுக்கிறேன் என்று ஒத்துக்கொள்ளாதே’ என்பார்கள். ‘ரொம்பவும் துக்கமாக இருக்கும்போது, எந்த முடிவையும் எடுக்காதே’ என்றும் சொல்வார்கள். இந்த இரண்டும் தப்பாகிவிடுமாம்.
நம்மை யாராவது புகழ்ந்துகொண்டே இருப்பார்கள். அப்போது எதைக் கேட்டாலும் கொடுக்கலாம் என்ற இறுமாப்பு நமக்குள் எழும். ஒத்துக்கொண்டுவிடுவோம். பிறகுதான் தெரியும்; அதில் உள்ள அத்தனைக் கஷ்டங்களும். எல்லாம் விபரீதமாக முடியும். சரியாக முடிவெடுக்க துக்கம் அனுமதிக்காது.
பிரம்மாவிடம் உள்ள பெரிய கஷ்டம் இதுதான். யாராவது வந்து நன்றாக ஸ்தோத்திரம் பண்ணிவிட்டார்களென்றால், அவர்கள் கேட்டதை ஒத்துக் கொண்டு கொடுத்து விடுவார். ஹிரண்யகசிபு கேட்க ஆரம்பித்துவிட்டான். ‘எதெதனால் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது’ என்று கேட்க ஆரம்பித்தான்.
‘வாசலில் மரணம் கூடாது. உள்ளுக்குள் மரணம் கூடாது. ஆகாசத்தில் மரணம் கூடாது. பூமியில் மரணம் கூடாது. பிராணன் இருப்பவற்றால் மரணம் கூடாது. பிராணன் இல்லாதவற்றால் மரணம் கூடாது. இப்படி எதெல்லாம் சாத்தியமோ, அதையெல்லாம் சொல்லிக் கேட்டானாம். பிரம்மாவோ, ‘கொடுத்தேன் கொடுத்தேன்’ என்று சொல்லிக் கொண்டே வந்தார். இப்படிக் கேட்டுக் கொண்டே வந்தபோது, பிரம்மா பயந்து விட்டாராம். இப்படி எல்லாவற்றையும் கேட்டால், இவனுக்கு முடிவு என்பதே கிடையாதா? என்று நினைத்தபோது, கடைசியாக அந்த வாக்கியத்தை சொன்னானாம்.
உங்களால் படைக்கப்பட்ட எதனாலும் எனக்கு மரணம் கூடாது” என்று கேட்டானாம். இந்தக் கடைசி வார்த்தையைக் கேட்டபிறகுதான், மூச்சு விட்டார் பிரம்மா. ‘நல்லவேளையாக நமக்கு ஒரே ஒரு இடைவெளி கொடுத்திருக்கிறான் ஹிரண்யகசிபு’ என்று நினைத்தாராம். ‘என்னால் படைக்கப்பட்டவற்றினால்தானே கொல்லக் கூடாது என்று கேட்டான். அப்படியானால், என்னைப் படைத்தவர் கொல்லலாம் அல்லவா!’ என்று நிம்மதி ஏற்பட்டதாம் பிரம்மாவுக்கு. பிரம்மாவைப் படைத்தவர் யார்? நாராயணன் அல்லவா? நான் முகனை நாராயணன் தனது உந்தித் தாமரையில் படைத்தான். நாராயணனுடைய நாபிக்கமலத்தில்தானே பிரம்மா முதல் முதலில் தோன்றினார்? நாபியில் கமலம் இருப்பதால், அவர் பெயர் பற்பநாபன் - பத்ம நாபன்.
இப்போது பிரமன் ஆசுவாசப்படுத்திக் கொண்டுவிட்டான். ‘நம்மைப் படைத்தவர் இருக்கவே இருக்கிறார். இந்தக் கஷ்டத்தையெல்லாம் கொண்டுபோய் அவரிடத்தில் சொல்லிவிடுவோம்’ என்று நினைத்தார். அதற்குத் தகுந்தாற்போல் பார்த்து, அவர் பிறப்பு எடுப்பார் என்ற நம்பிக்கை அவருக்கு.
அபாரமான வரத்தைப் பெற்ற ஹிரண்யகசிபு, பிராம்மணர்களையும், பசுக்களையும், நல்லோர்களையும் துன்புறுத்த ஆரம்பித்தான். விஷ்ணு புராணத்திலும், பாகவதத்திலும், இதைப்பற்றி மிகவும் அழகான சில நுட்பங்களையெல்லாம் உணர்த்தியிருக்கிறார்கள். அவற்றையும் சேர்த்து இந்தக் கதையில் நாம் பார்ப்போம்.
(வைபவம் வளரும்)
ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 10 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்
அரண்மனையில் ஒரு நாடகம்!
எந்த வகையிலெல்லாம் தனக்கு மரணம் சம்பவிக்கக்கூடும் என்று ஹிரண்ய கசிபு நம்பினானோ, அதையெல்லாம் வரிசையாகக் கேட்டு, அதன் மூலமாகவெல்லாம் தனக்கு மரணம் கூடாது என்று கேட்டு விட்டான். சேற்றிலே தாமரை முளைப்பது போல, அந்த ஹிரண்ய கசிபுவின் வயிற்றிலேயும் பாகவதோத்தமனான ஒரு பிரஹ்லாதன் தோன்றினான்.
இந்த பிரஹ்லாதனை எவ்வாறு விவரிக்கிறார் பராசரர்?
‘தஸ்ய புத்ர : மஹாபாக:’ அதாவது பரம பாகவதன்… என்கிறார்கள். அப்படிப்பட்ட ஹிரண்யனுக்கு மகனாகப் பிறந்தவன் என்று பொருள். பாகவதர்கள் ஒரு வார்த்தையைப் போட்டால் அதற்கு ஆழ்ந்த அர்த்தம் இருக்கும்.
‘தஸ்ய புத்ர : பரம பாகவதன்’ என்கிற இரண்டையும் நாம் சேர்த்துப் பார்ப்போம். அவ்வளவு துராசாரத்துடன், அசுர குணங்களுடன், கேவலமான குணங்களுடன் துன்புறுத்தும் எண்ணத்துடன் இருப்பவன் ஹிரண்யன். ‘தஸ்ய’ என்பதன் அர்த்தம் இதுதான்.
இதற்கு நேர் எதிரான அர்த்தம் ‘மஹாபாக:’ என்ற வாக்கியத்துக்கு. மேலே சொன்ன எந்த எண்ணமும் அற்றவன்.
அவனுக்கு அசுர சுபாவம். இவனுக்கு தேவ சுபாவம். அவனுக்குத் துன்புறுத்தும் எண்ணம். இவனுக்கு இன்புறுத்தும் எண்ணம். அவன் எல்லோரையும் கொலை செய்கிறான். இவன் எல்லோரையும் வாழ வைக்கிறான். அவனுக்கு பிராம்மணர்களைக் கண்டாலே ஆகாது. இவனோ அவர்களைப் பூஜிக்கிறான்.
அவன் வேத விரோதமாக நடப்பான். இவன் வேதத்தை ஒழுகி நடப்பான்.
எல்லாவற்றிலும் எதிர்மறை! அதனால் தான் ‘தஸ்ய’ என்று சொன்னவர் ‘மஹாபாக :’ என்று கொண்டாடுகிறார். பராசரர் மகா ஞானி. அப்படிப்பட்ட ஞானி ஒரு அசுரப் பிள்ளையைக் கொண்டாடியிருக்கிறார் என்றால், அவன் சாதாரணப் பிள்ளையாக இருக்கவே முடியாது.
‘தஸ்ய புத்ர : மஹாபாக : பிரஹ்லாதோ நாம நாமத:’ என்கிறார்.
சின்னக் குழந்தை பிறந்தபிறகு தகப்பனார் பள்ளிக் கூடத்துக்குப் போய் என்று அனுப்பி வைக்கிறார். என்ன சொல்லி அனுப்பினாராம் தெரியுமா?
குழந்தாய், யார் விரோதி… யார் நண்பன் என்பதைத் தெரிந்துகொண்டு வா” என்று சொல்லி வழியனுப்பி வைத்தாராம்.
ராஜ்ஜியத்தை நடத்த வேண்டுமானால் இது ரொம்பவும் முக்கியம். நண்பர்கள் யார், விரோதிகள் யார்… இவர்களை எவ்வாறு வசப்படுத்தலாம்; அவர்களை எவ்வாறு முடிக்க வேண்டும் என்பதெல்லாம் தெரிய வேண்டும்.
குழந்தையும் புறப்பட்டுப் பள்ளிக்குப் போனான். அவன் திரும்பி வந்த பிறகு அவனிடம், தந்தையார் கேள்வி கேட்டார்.
குழந்தைகள் பள்ளிக்கூடம் போய் விட்டு வந்தால் அவர்கள் என்ன கற்றுக் கொண்டு வந்தார்கள் என்ற கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியது தகப்பனின் கடமை. அப்படித் தெரிந்து கொள்ளாவிட்டால், அவன் என்ன கற்றுக் கொண்டான் என்றே புரியாமல் போய்விடும்.
என்ன கற்றுக் கொண்டு வந்தாய் குழந்தாய்? நீ தெரிந்து கொண்டு வந்தவற்றையெல்லாம் சொல்லு” என்று கேட்கிறான். குழந்தை சொல்கிறான்,
“அநாதி மத்ய அந்தம் அஜம்” என்று தொடங்கி…
ஆதி, நடு, அந்தம் எதுவும் இல்லை என்று தெரிந்து கொண்டுவிட்டேன். வளர்ச்சி தாழ்ச்சி இல்லை என்று தெரிந்து கொண்டுவிட்டேன். பிறப்பு இல்லவே இல்லை என்று தெரிந்து கொண்டுவிட்டேன். ஜகத் காரணம் யார் என்பதைப் புரிந்து கொண்டுவிட்டேன்” என்று பிள்ளை சொன்னவுடன், ஒன்றுமே புரியவில்லை யாம் ஹிரண்யகசிபுவுக்கு. என்ன இது? நாம் எதுவும் படிக்கவே இல்லை என்பது போல் இந்தக் குழந்தை பேசுகிறதே?
ஆரம்பம் தெரியாது; மத்தி தெரியாது; அந்தம் தெரியாது! யாரைப் பற்றி சொல்கிறான்?
பிறப்பே கிடையாது; இறப்பே கிடையாது யாரைப் பற்றி சொல்கிறான்? அபாரமான ஆனந்தன் என்று யாரைப் பற்றிச் சொல்கிறான்?
பிரஹ்லாதனோ பெருமாளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறான். அதனால் தான் ஹிரண்யகசிபுவுக்கு ஒன்றுமே புரியவில்லையாம்!
ஏனெனில் அவன் நினைத்தது வேறு. பிரஹ்லாதன் தன்னைப் பற்றி (அதாவது தந்தையாகிய ஹிரண்யகசிபுவைப் பற்றி) சொல்லப் போகிறான் என்று பெருமிதமாகக் காதைத் தீட்டிக் கொண்டு காத்துக் கொண்டிருந்தானாம். ஒரு வார்த்தைகூட வரவில்லை!
வாய்க்கு வந்த படியெல்லாம் வைய ஆரம்பித்துவிட்டான் ஹிரண்யகசிபு. அவனுக்குக் கற்றுக் கொடுத்த உபாத்யாயர்களையெல்லாம் பிடித்துக் கொண்டு வரச் சொன்னானாம்.
நீங்களெல்லாம் வேண்டுமென்று எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியிருக்கிறீர்கள். என் குழந்தைக்கு ஏதேதோ சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டியது இது இல்லை. எதைச் சொல்லிக் கொடுக்க வேண்டுமோ அதைவிட்டுவிட்டீர்களே!” என்று, இவன் வசவு பாடத் தொடங்க அவர்கள் எல்லாம் பயந்து நடுங்கத் தொடங்கிவிட்டார்களாம்.
இவற்றில் எந்த ஒரு வார்த்தையையும் நாங்கள் அவனுக்கு சொல்லிக் கொடுக்கவே இல்லை” என்றார்களாம்.
இதை நாம் கொஞ்சம் ஊன்றி கவனிக்க வேண்டும். சொல்ல வேண்டிய நல்ல வார்த்தைகளையெல்லாம் ஒரு பிள்ளை சொல்கிறான். இதைப் போய் சொல்லிக் கொடுக்கிறீர்களே” என்று ஒருவன் கேட்கிறான். இதை நாங்கள் சொல்லிக் கொடுக்கவேயில்லை” என்று அவர்கள் சொல்கிறார்கள்! இதுதான் ஹிரண்யகசிபுவின் அரண்மனையில் நடந்த நாடகக் காட்சி.
(வைபவம் வளரும்
ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 11 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்
பிரகலாதனின் கவலை!
நல்லவற்றைக்கூட சொல்லிக் கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள் பாருங்கள்! இது எங்காவது ஒரு பாகவதனுக்கு ஒத்து வருமா! ஹிரண்யன் கேட்டான், யாரோ உன் மனத்தில் உள்ளிருந்து கொண்டு என் பெயரை சொல்லவிடாமல் வேறு யார் பெயரையோ சொல்லும்படி தூண்டுவதுபோல் தெரிகிறது. அவன் யார் என்று எனக்குக் காட்டிக் கொடுத்துவிடு பிரஹ்லாதா. அப்புறம் அவனை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றான்.
குழந்தைக்கு சிரிப்பு வந்துவிட்டது. “உன்னை இந்தக் கேள்வி கேட்கச் சொல்லி எவன் தூண்டினானோ, அவனே தான் தன் திருநாமத்தைச் சொல்லச் சொல்லி என்னைத் தூண்டியவன்” என்றான். “உன்னைத் தூண்டுபவன் ஒருவனாகவும், என்னைத் தூண்டுபவன் வேறு ஒருவனாகவும் இருக்க முடியுமா என்ன? எல்லோருக்கும் சாஸ்வதம் பகவான் ஒருவன்தானே? அவனே எல்லோருக்கும் உரியவன். அவனைத் தவிர இந்த உலகம் யாரால் நடத்தப்படுகிறது தகப்பனே?” என்றான்.
விஷ்ணு விஷ்ணு என்று சொல்கிறாயே. அந்த விஷ்ணு எப்படி இருப்பார் என்று கொஞ்சம் சொல்லு” என்று கேட்டான் ஹிரண்யன். இவ்வளவு நேரம் ஆனந்தமாக விவரித்துக் கொண்டு வந்து பிரஹ்லாதனுக்கு வருத்தம் வந்துவிட்டது. ஐயோ நான் எதை வைத்துக்கொண்டு அவனை விளக்கப்போகிறேன் என்று எனக்குப் புரியவில்லையே. ஒரு சப்தத்தை வைத்துக் கொண்டு விஷ்ணுவை விளக்கலாம் என்று பார்த்தால், மற்ற சப்தங்கள் எல்லாம் கோபித்துக் கொள்கின்றன. ஏன்? என்னை வைத்துச் சொல்லக்கூடாதா என்று அவை கேட்கின்றன. இன்னொன்றைத் தொடப்போனால் அதைத்தவிர மற்றதெல்லாம் கோபித்துக் கொள்கின்றன. அதே போல் மற்றொன்றைத் தொடப்போனால் அதைத் தவிர மற்றதெல்லாம் கோபித்துக் கொள்கின்றன என்று தவிக்கிறான் பிரகலாதன்.
ராமாயணத்தில் ஒரு காட்சி. ஹனுமன் சீதையைத் தேடிக் கொண்டு அசோக வனத்துக்குப் போய்ச் சேர்ந்தான். சீதை முன்னால் நின்றான். நான்தான் ராமனுக்கு தூதனாக வந்தேன் என்று சொன்னான். “ராம தூதோஹம்” என்று சொல்லி மோதிரத்தை சீதையின் கையில் கொடுத்தான். சீதைக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. ‘என் ராமன் எப்படி இருப்பான் என்று உன்னாலே விளக்க முடியுமா?’ என்று கேட்டாள்.
“படியெடுத்துரைத்துக் காட்டும் படிக்கல்லா அவன் படிவம். சீதையே நீ கேள்வி கேட்டுவிட்டாய். எந்த சப்தத்தை வைத்து என் ராமனின் உருவத்தை நான் விளக்குவேன்? படியெடுத்துரைத்துக் காட்டும் - அதாவது ஒரு வடிவத்தை எடுத்துக் காட்டி, தாமரையைப் போன்ற கண்கள் என்று சொன்னால், ஊரில் இருக்கும் மற்ற எல்லா புஷ்பங்களும் என்னுடன் சண்டைக்கு வருகின்றன. ஏன்? என்னைப்போல இருக்காதா ராமருடைய கண்கள்? என்னை உதாரணமாக சொல்லக் கூடாதா?” என்று கேட்கின்றன. பகவானுடைய தோள்கள் பெருத்த உலக்கையைப் போல இருக்கின்றன என்று சொன்னால் மலை சண்டைக்கு வருகிறது. ஏன் என்னைப் போல இல்லையா ராமருடைய தோள்கள் என்று கேட்கின்றன. எதை நான் உதாரணமாகச் சொன்னாலும் மற்றது கோபித்துக் கொள்கிறது. எந்த சப்தத்தையும் கொண்டு பகவான் இது போல் இருப்பான் என்று உரைக்க முடியாது. ‘ந சப்தகோசரம் யஸ்ய’ – ஒரு சப்தத்தாலே அவனை உரைக்க முடியாது.
நம்மாழ்வார் அழகாக அவருடைய பாசுரத்தில் குறிப்பிட்டார்: ‘புகழுநல் ஒருவன் என்கோ, பொருவில் சீர் பூமி என்கோ’ என்றார். அவனை பூமி என்று சொல்வதா, ஆகாசம் என்று சொல்வதா அக்னி என்று சொல்வதா, அல்லது நீர் என்று சொல்வதா, எதைச் சொன்னாலும் அது அவனைத்தான் குறிக்கப் போகிறதே தவிர மற்றவர்களைக் குறிக்கப் போவதில்லை. அவ்வளவு பெருமைகள் அவருக்கு இருக்கின்றபடியால் – வாசாம் அகோசரம், அதாவது வாக்குக்கு எட்டாதவன்.
அதைத்தான் குழந்தை சொன்னான்: நான் எதை வைத்து விளக்கப் போகிறேன் விஷ்ணு யார் என்பதை?
ஒரு பெரிய மண்டபம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கு ஒரு சின்ன குண்டூசி விழுந்துவிட்டது. குண்டூசியைக் காணோம் என்று சொன்னார் தொலைத்தவர். உடனே, என் கண்ணில் அது தென்பட்டுவிட்டது. இதோ இருக்கிறது என்று எடுத்துக் கொடுக்கிறேன். கொஞ்ச நேரத்தில் அங்கு ஒரு யானை வந்து நிற்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். யானையைக் காணோமே காணோமே என்று தொலைத்தவன் தேடுவானா? குண்டூசியைத் தொலைத்துவிட்டுத் தேடுவதில் நியாயம் இருக்கிறது. யானையைத் தொலைத்துவிட்டுத் தேடுவது நியாயமா? யானையைத் தேடி எடுத்துக் கொடுக்க வேண்டியது அவசியமா?
உலகத்தில் விஷ்ணு யார் என்று விளக்க முடியுமா? அப்படிக் கேட்ட உன்னை நொந்து கொள்வதா? என்னை நொந்து கொள்வதா? அறிந்த விஷயத்தைப் பற்றிச் சொல் என்றால், என்னால் ஒருநாளும் முடியாது.
எதைப் பற்றிச் சொன்னாலும் பேசியிருப்பேன். விஷ்ணு யார் என்று கேட்டு விவரிக்கச் சொன்னால், தலையில் இடித்துக் கொள்வது தவிர, வேறு என்ன செய்ய முடியும்? என்று நொந்து கொண்டானாம் பிரகலாதன்.
(வைபவம் வளரும்
ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 12 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்
ஹிரண்யன் செய்த தவறு!
பகவானைக் கண்ணாலே கண்டு அனுபவிக்க முடியாது. காதாலே கேட்டு அனுபவிக்க முடியாது. கைகளாலே தொட்டு உணர முடியாது. பக்தி என்னும் உணர்வினாலேதான் அவனை உணர முடியுமே தவிர, வேறு எதாலும் முடியாது.
கண்ணாலே பார்க்க வேண்டுமானால் எதைப் பார்ப்பது? அத்தனை இடங்களிலும் பரந்து விரிந்திருக்கிறான். எதைப் பார்ப்பது? இந்தக் கோடியை அடுத்து இருப்பது என்னவென்பதே நமக்குத் தெரியாது. ஜகத் முழுவதும் வியாபித்திருக்கும் ஒருவரை நம்மால் பார்க்கத்தான் முடியுமா? அறியத்தான் முடியுமா? பத்தடி தள்ளிப் பேசினாலே காது கேட்க மாட்டேன் என்கிறது? பரமபதத்தில் இருப்பவனைப் பற்றியா காது கேட்கப் போகிறது? காதால் கேட்கவும் முடியாது. கண்ணால் பார்க்கவும் முடியாது. ஆனால் உணரலாம். அவனை உணர்ந்துதான் அறிய முடியுமே தவிர பார்த்தோ, கேட்டோ அறிவது என்பது ஒரு நாளும் நடவாது.
ஆக, பிதாவே… நீங்கள் பாட்டுக்கு விஷ்ணு யாரென்று கேட்டுவிட்டீர்கள். என்னாலே. பதில் சொல்வதற்கு இயலாது. எதற்காக அந்தப் பெரியவரிடத்தில் கோபம் கொள்கிறீர்கள்?” என்கிறான் பிரகலாதன்.
நாம் யாரைப் பார்த்துக் கோபம் கொள்ளலாம் தெரியுமா? நம் பெருமைக்கு அருகில் உள்ள பெருமை கொண்டவர்களிடம் கோபமோ பொறாமையோ கொள்ளலாம். அதுவே தவறு. கூடாது. போனால் போகிறது என்று விட்டுவிடட்டும்.
இப்போது அடியேனையே எடுத்துக் கொள்ளுங்கள். அடியேனுக்கு ஏதோ ஞானம் இருக்கிறது. வசிஷ்டாச்சார்யார் மகாஞானி. அவரைப் பார்த்து, “ஏதோ இந்த வசிஷ்டர் பெரிய ஞானியாமே?” என்று அடியேனால் கோபம் தான் பட முடியுமா? அல்லது பொறாமை தான் பட முடியுமா? எனக்கும் வசிஷ்டருக்கும் எத்தனை ஏணி வைத்தாலும் எட்டுமோ? அவரைப் பார்த்துப் பொறாமைப் படுவதில் என்ன பிரயோஜனம்? கிடையவே கிடையாது.
ஹிரண்யனே, அவன் இருப்பது எங்கேயோ. நீர் இருப்பது இங்கே. நீர் எதற்காக அவரைப் பார்த்துக் கோபப்படுகிறீர்கள்? அதனால் எந்த லாபமும் கிடையாது. அவன்தான் எல்லாவற்றையும் தாங்குகிறான். எல்லாவற்றையும் படைக்கிறான். (தாதா…விதாதா). ஆகையினாலே அவரைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமானால், உங்கள் மனத்திலே பக்தி வேண்டும்” என்று குழந்தை சொன்னவுடன் ஹிரண்ய கசிபு கேட்டான்.
“யார் உன்னுடைய ஹ்ருதயத்துக்குள்ளே புகுந்து கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டுவிட்டேன். இந்த விஷ்ணு கிஷ்ணு என்று நாலு முறை ஏதோ பேர் சொன்னாயே… அவன்தான் உன்னுடைய ஹ்ருதயத்துக்குள்ளே புகுந்து கொண்டிருக்கிறான்” என்றான்.
அதற்கு பிரஹ்லாதன் சொன்னான் “என் இதயத்துக்குள்ளே மட்டும் இல்லை. யார் இதயத்துக்குக்குள்ளே பார்த்தாலும் அவன்தான் இருப்பான். பிதாவே நீர் இந்தக் கேள்வி கேட்கிறீர்களே. இந்தக் கேள்வி உங்களைக் கேட்க வைப்பவரே அவர்தான். அவர் இல்லை என்றால் இந்தக் கேள்வி உங்கள் வாயில் இருந்து வந்தே இருக்காது” என்றான்.
ஆழ்வார் சொன்னார், ‘நின்றனர், கிடந்தனர், திரிந்தனர். நின்றிலர் கிடந்திலர், திரிந்திலர்.’
பகவத் கீதையில் பகவான், ‘ஞாபகம் வருவதற்கு நான்தான் காரணம்’ என்று சொல்கிறார்.
பத்து வருடங்களுக்கு முன்னால் ஒருவரைப் பார்த்திருப்போம். அவரை இன்றைக்கு வீதியில் பார்க்கும்போது பத்து வருடங்களுக்கு முன் பார்த்தேனே… அவர் தானே நீர்” என்று சரியாகக் கேட்கிறோம் அல்லவா? அப்படி ஞாபகம் வருவதற்கு தானே காரணம் என்கிறார் பகவான். நான் உள்ளே இருந்து கொண்டுதான் அந்த ஞாபகத்தை உனக்கு ஊட்டுகிறேன். ஸ்ம்ருதிஹி.
அடுத்ததாக ஞானம். முதல் முறையாக ஒரு வஸ்துவைப் பார்க்கிறோம். அதைப் பற்றி நமக்கு ஒரு அறிவு ஏற்படுகிறது அல்லவா. அதற்குப் பெயர்தான் ஞானம் என்பது.
அதாவது, ஏற்கனவே இருப்பதை மறுபடியும் பார்க்கும்போது புரிந்து கொண்டால் அது ஸ்ம்ருதி. புதிதாக ஒன்றைத் தெரிந்துகொண்டால் அது ஞானம்.
அடுத்ததாக அபோஹனம். மறதி. நேற்றைக்கு ஒருவரைப் பார்த்திருப்போம். அவரை இன்றைக்கு நினைவுபடுத்திக் கொள்ள இயலவில்லை. அதற்கும் நான்தான் காரணம் என்கிறார் பகவான்.
“உனக்கு ஞாபகம் வந்தாலும், ஞானம் ஏற்பட்டாலும், மறதி ஏற்பட்டாலும் மூன்றுக்கும் தானே காரணம்” என்கிறார்
“உனக்குள்ளும் எனக்குள்ளும் அவன் ஒருவன்தான் இருக்கிறானே தவிர, மற்ற யாரும் கிடையாது.” என்று சொன்ன பிரஹ்லாதன் சொல்கிறான்.
“ஜகத்துக்கெல்லாம் காரணம் அந்த நாராயணன். புரிந்து கொள்ளுங்கள். அவனிடத்தில் கோபம் கொள்ள வேண்டாம். அவனிடத்தில் பொறாமை கொள்ள வேண்டாம்” என்றெல்லாம் எவ்வளவோ நல்ல வார்த்தைகள் சொன்னான் பிரஹ்லாதன். எல்லோர் காதிலும் நல்ல வார்த்தைகள் ஏறிவிடுமா?
விபீஷணன் எவ்வளவோ நல்லவன். அவன் ராவணனுக்கு எவ்வளவோ நல்ல வார்த்தை சொன்னான். அது ஒன்றும் அவன் காதில் ஏறவில்லை. ராவணனுக்கு சீதை எத்தனையோ நல்ல வார்த்தை சொன்னாள். காதில் ஏறவில்லை. பிரஹ்லாதன் ஹிரண்யனுக்கு எத்தனையோ நல்ல வார்த்தைகள் சொல்கிறான். அதுவும் ஏறவில்லை.
கடைசியில் என்ன முடிவு பண்ணினான் ஹிரண்யன். ‘நம் குலத்துக்கே கோடரிக் காம்பாய் அமைந்திருக்கிறான். இவனை அழித்து விட வேண்டியதுதான்’ என்ற முடிவுக்கு வந்தான்.
உண்மையில் அந்தப் பிள்ளை சொன்னது அழகான வார்த்தை. ஆனால், அதைப் பார்த்து ஹிரண்யனுக்குக் கோபம் வந்துவிட்டதாம். உண்மையில் பார்த்தால் நம் பிள்ளை சொல்வது உளறலா இருந்தாலும், அதைக் கேட்க வேண்டும் என்று நமக்கு ஆசையாக இருக்கும். நம் குழந்தை காகா என்று ஏதோ சொன்னவுடன் ‘ஆஹா நம் குழந்தை என்ன அழகான வேதம் கற்றுக் கொண்டு சொல்கிறது’ என்போம்.
இதுவே மற்றொரு வீட்டுக் குழந்தை கஷ்டப்பட்டு வேதத்தைக் கற்றுக் கொண்டு சொனாலும்கூட, “அது என்னமோ உளறுகிறது” என்போம். காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பர். குழந்தை சொல்லிவிட்டால், அது தப்பாகவே இருந்தாலும் அதை சரி என்று எடுத்துக் கொள்வது வழக்கம். மற்றொரு குழந்தை சொன்னாலும், வேறு யார் சொன்னாலும் விஷயம் உயர்ந்ததாக இருந்தால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு வகையில் எந்த வகையில் பார்த்திருந்தாலும் இதை எடுத்துக் கொண்டிருப்பான். தன் பிள்ளை என்பதற்காகவாவது எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் அல்லது விஷயம் உயர்ந்தது என்பதனாலாவது எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
யார் சொன்னாலும் அதில் விஷயம் இருந்தால் ஏற்றுக் கொள்ள வேண்டும். இங்கே என்ன ஆச்சர்யம் என்றால், சொன்னது உயர்ந்த விஷயம். சொன்னவன் தன் வயிற்றுப் பிள்ளை. இரண்டையுமே துறந்தான் ஹிரண்யகசிபு. ஆக, இரண்டு விதங்களிலும் தப்பு செய்துவிட்டான்.
(வைபவம் வளரும்
ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 13 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்
கண்ணன் காட்டிய வழி!
இரண்டு வகைகளிலும் தவறிழைத்துவிட்டான் ஹிரண்ய கசிபு என்று பார்த்தோம்.
இந்தப் பிரஹ்லாதனும் ஒரு தப்பு செய்தான். அந்தத் தப்பு என்ன தெரியுமா? ‘எங்கும் உளன் கண்ணன்’ என்று கீதாசார்யன் கீதையில் சொன்னதைத் திருப்பிச் சொன்னதுதான் அவன் செய்த ஒரே தப்பு. கண்ணன் கீதையில் என்ன சொன்னான்? ‘என்னால் எல்லா ஜகங்களும் வியாபிக்கப்பட்டிருக்கின்றன. ஜகங்களை நான்தான் தாங்குகிறேன்’ என்றான் அல்லவா? அதைத்தானே குழந்தை அப்படியே திருப்பிச் சொன்னான்! அதுதான் அவன் செய்த தப்பு. கண்ணன் சொன்னதைத் திருப்பிச் சொல்வது தப்பு என்று இப்போதுதான் முதல் முறையாகத் தெரிந்து கொள்கிறோம்.
கீதையில் கண்ணன் சொன்னதுதான் தவறாகுமா அல்லது அதை மறுபடியும் பிரஹ்லாதன் சொன்னதுதான் தப்பாகுமா? ‘எங்கும் உளன் கண்ணன்’ என்ற மகனைக் காய்ந்து… என்கிறார் ஆழ்வார். மகன் மீது ரொம்பவும் கோபப்பட்டானாம். வியாக்யானம் செய்கின்ற பெரியவாச்சான் பிள்ளை என்கின்ற பெரியவர், ‘மகன் என்றும் சொல்கிறார் பிள்ளை என்றும் சொல்கிறாரே ஆழ்வார். யாருக்கு மகன் யாருக்குப் பிள்ளை என்று கேள்வி எழுப்புகிறார்?’
ஏற்கனவே ஹிரண்யகசிபுவுக்குப் பிள்ளையாக இருந்தானாம். கண்ணன் எங்கும் உளன் என்று பிரஹ்லாதன் சொன்னவுடன், அவன் என் பிள்ளை இல்லை என்று தள்ளிவிட்டானாம் ஹிரண்யகசிபு. உடனே பார்த்தார் நம்மாழ்வார். ‘ஹிரண்யன், தன் மகன் இல்லை என்று சொன்னால் உடனே, பிரஹ்லாதனை என் பிள்ளையாக ஸ்வீகாரம் செய்துகொண்டு விடுகிறேன்’ என்று தீர்மானம் பண்ணிக் கொண்டுவிட்டாராம்.
ஹிரண்யகசிபு தன் பிள்ளை இல்லை என்று சொல்லிவிட்டானானால், கதையைக் கேட்கும் நாம் ஒவ்வொருவரும், நம் பிள்ளையாக பிரஹ்லாதனை நினைக்க வேண்டும். பகவானை பந்து என்று, எவன் ஒத்துக் கொண்டாலும் அவன் நமக்கும் உறவு. அவனை பந்து இல்லை என்று எவன் சொன்னாலும், அவன் நமக்கும் பந்து இல்லை. இப்படி இருப்பவன்தான் ஸ்ரீவைஷ்ணவன்… பாகவதோத்தமன்.
பிரஹ்லாதன் மீது ஆயுதங்களையெல்லாம் ஏவிவிட்டார்கள். ‘இந்த ஆயுதங்களுக்குள்ளும் விஷ்ணு இருப்பது உண்மையானால் எனக்குள்ளும் விஷ்ணு இருப்பது உண்மையானால், இவை என்னை எதுவும் செய்யாமல் போகட்டும்’ என்று பிரார்த்தித்தான் பிரஹ்லாதன். அவனை அந்த ஆயுதங்கள் ஒன்றுமே பண்ணவில்லை. உடைந்து போயின. எந்த சிரமமும் குழந்தைக்கு ஏற்படவே இல்லையாம்.
பொதுவாக நாகாஸ்திரத்துக்கு (ஸர்ப்பத்துக்கு) எது பிரதி அஸ்திரம் என்று பார்த்தால், கருடாஸ்த்திரம். வருணாஸ்திரத்துக்கு பிரதி அஸ்திரம் ஆக்னேயாஸ்திரம் (அக்னி). இப்படி ஒவ்வொரு அஸ்திரத்துக்கும் ஒரு பிரத்யஸ்திரம் உண்டு. மகாபாரத யுத்தத்தில், அர்ஜுனன் பேரில் நாராயணாஸ்திரத்தைப் பிரயோகம் பண்ணிவிட்டான் பகதத்தன். நாராயணாஸ்திரத்துக்குப் பிரத்யஸ்திரம் என்னவென்று அர்ஜுனன் தெரிந்துகொண்டது கிடையாது. எதைப் பிரத்யஸ்திரமாகப் பண்ணலாம் என்று கண்ணனைப் பார்த்து அர்ஜுனன் கேட்டான். கண்ணன் சொன்னான்: தவறான ஆராய்ச்சி பண்ணுவதற்கு இறங்கியிருக்கிறாய் அர்ஜுனா. நாராயணனுக்குப் பிரதி இருந்தாலல்லவா அவன் அஸ்திரத்திற்குப் பிரதி இருப்பதற்கு? “அப்படியானால் அவ்வளவுதானா? நான் வில்லைக் கீழே போட வேண்டியது தானா?” என்று பதறினான் அர்ஜுனன்.
இதற்குத்தானா நான் இத்தனை பாடுபட்டேன்?” என்று கேட்டான் கிருஷ்ணன். உன்னை விட்டுவிட்டுப் போவதற்காக நான் இவ்வளவெல்லாம் செய்யவில்லை என்றாராம். நாராயணன் அஸ்திரத்துக்கு பதிலாக, பிரதியாக நம்மிடம் பெரிய அஸ்திரம் ஒன்று உள்ளது. அதை ஒன்றும் வசிஷ்டரிடத்திலோ அல்லது விஸ்வாமித்திரரிடத்திலோ போய்க் கற்றுக்கொண்டு வரவேண்டும் என்பதில்லை. நமக்கே தெரியும் அந்த அஸ்திரம் என்னவென்பது. இதைப் பற்றி அர்ஜுனனுக்கு உபதேசித்தான் கண்ணன். கிரீடத்தைக் கழற்று. கீழே வை. காண்டீபத்தைக் கீழே போடு. கவசத்தைக் கழற்றிக் கீழே வை. பாதுகையைக் கழற்று. மண்டியிட்டுக்கொண்டு கையைக் கூப்பிக்கொள்! அஞ்சலி பண்ணு. அது ஒன்றுதான் அதற்கு பிரதி அஸ்திரம். நீ கை கூப்பும் செய்கையைச் செய்துவிட்டாயானால், நாராயணாஸ்திரம் உன்னை எதுவும் பண்ணாது. அஞ்சலி ஒன்றுதான் அதற்குப் பிரத்யஸ்திரமாகும்.”
ஸ்வாமி வேதாந்த தேசிகன் இப்படி வணங்குவது பற்றி, ‘அஞ்சலி வைபவம்’ என்ற ஒன்றையே செய்திருக்கிறார். விசேஷமான நூல் அது.
பகவானே நீயே என் பேரில் அஸ்திரத்தைத் தொடுத்துவிட்டாயானால், இனிமேல் நான் கவலைப்படப் போவதில்லை. இப்போது புரிந்துகொண்டுவிட்டேன், சூட்சுமம் என்ன, ரகசியம் என்ன என்று! கையைக் கூப்பிவிட்டால் உன் அஸ்திரம் என்னை ஒன்றும் பண்ணாது. ஆக உன்னுடைய நிக்ரஹாஸ்திரம் என்னும் அஸ்திரத்தைப் பிரயோகப்படுத்தினால், அதற்கு நான் பிரத்யஸ்திரம் வைத்திருக்கிறேன். அதுதான் கைகூப்பு செய்கை” என்றான் அர்ஜுனன்.
நம் பிரஹ்லாதன்தான் எப்போதும் கைகூப்பிக் கொண்டே இருக்கிறானே. அவனை எந்த அஸ்திரமும் எதுவும் செய்யவில்லை. அவை வீழ்ந்தும் மாய்ந்தும் போயின.
பிரஹ்லாதனைப் பார்த்து ‘இவனுக்கு பயமே ஏற்படவில்லையே’ என்று ஹிரண்யகசிபு நினைத்தான்.
ஏதோ சஸ்திரத்திலே ஜெயித்துவிட்டாய். என் காலில் விழுந்து கேள். நான் உனக்கு அபயப் பிரதானம் பண்ணுகிறேன். பயமில்லாமல் இருப்பதற்கு உன்னை மன்னித்து விட்டுவிடுகிறேன். பிரஹ்லாதா என் காலில் விழு” என்று கேட்டான் ஹிரண்யகசிபு.
பாலப்பிரஹ்லாதன் சிரித்துக்கொண்டே சொன்னான். “நான் என்னமோ ஏற்கனவே பயப்பட்டாற்போலேயும், உன் காலில் விழப்போகிறேன் என்று சொன்னாற்போலேயும் சொல்கிறீர்களே? நீங்கள் தகப்பனார் என்பதற்காக, நான் காலில் விழத் தயாராக இருக்கிறேன். இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக பயந்துபோய்க் காலில் விழமாட்டேன். நான் ஒருநாளும் பயந்தது கிடையாது. ஏன்? பயங்களையெல்லாம் போக்குபவனான கண்ணன் என் மனத்திலே இருக்குங்கால் பயப் பிராப்தி எனக்குக் கிடையவே கிடையாது.”
தைத்ரிய உபநிஷதம் சொல்கிறது, ‘பகவானுக்கு அருகிலே போகப்போக, பயம் நம்மிடத்திலிருந்து விலகிவிலகிப் போய்விடும். அவனை விட்டுப் பிரியப்பிரிய, பயம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.’
முன்பெல்லாம் பெரியதாய் ஒரு வீடு இருக்கும். எல்லோரும் தரையில் உள்ள தளத்திலேயே இருப்பார்கள். இப்போது அப்படி இல்லை. மாடிமாடியாக வீடுகள் கட்டிக் கொண்டே போகிறார்கள். ஏன் அப்படியாம்? ஒருவர் சொன்னார்; ‘பயம் ஏற ஏற மாடி ஏறுமாம்.’ பகவானுக்கு அருகில் போகப்போக நமக்கு பயம் வராது. முன்பெல்லாம் வாசலில் கட்டில் போட்டுக் கொண்டு தூங்கிக்கொண்டிருந்த காலம். அப்போது பெருமானுக்கு அருகில் இருந்தோம். இப்போது அவனிடமிருந்து விலகி விலகிப் போகிறோம். பயம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வாசலில் வருவதற்கு பயமாக இருக்கிறது. எதைக் கண்டாலும் பயமாக இருக்கிறது. பகவானுக்கு அருகில் போனால்தான் பயம் வராமல் இருக்கும்.
‘மாடமீமிசைக் கஞ்சன்’ என்று பாட்டு. அந்தக் கம்சனைத்தான், கண்ணன் கீழே இழுத்து வந்து தள்ளினான். கம்சன் ஏன் மேலே ஏறி உட்கார்ந்தான்? கிருஷ்ணரிடத்தில் அன்பிருந்திருந்தால் கீழே இருந்திருப்பான். அன்பில்லை. பயம் ஏற்பட்டு விட்டது. அதனால், மாடியின் மீது ஏறி உட்கார்ந்துவிட்டானாம் கம்சன்.
(வைபவம் வளரும்
ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 14 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்
பக்தனின் தன்மை!
கண்ணன் நம்முடைய உள்ளத்திலே இருந்தால் பயப் பிராப்தி கிடையாது. ஏன் பயம் கிடையாது? தன்னுடைய பக்தனை, சரணாகதி செய்தவனை ரக்ஷிப்பேன் என்று வாக்களித்தவன் ஸ்ரீகிருஷ்ணன். அதனாலே, கண்ணனை நினைத்தவர்க்கு பயமென்பது இல்லை. அதேதான் பிரஹ்லாதன் வாக்கும். ‘பயம் காரணமாக என்றைக்கும் நான் உன் காலில் விழப்போவதும் இல்லை. நீ எனக்கு அபயப் பிரதானமும் பண்ண வேண்டாம்’ என்று பிரஹ்லாதன் மறுத்துவிட்டான்.
அடுத்ததாக என்ன பண்ணலாம் என்று பார்த்தான் ஹிரண்யன். சர்ப்பங்களை யெல்லாம் கூப்பிட்டு, இவனைப் போய்க் கடித்துவிட்டு வாருங்கள்” என்று சொன்னான். பெரிய பெரிய தக்ஷகன் முதலான சர்ப்பங்களெல்லாம், இவனைப் போய்க் கடிக்க வேண்டும் என்று பார்த்தனவாம். அதைப் பார்த்தவுடன், குழந்தை நினைத்துக்கொண்டதாம். ‘ஆதிசேஷன் எதற்காக நம்மிடம் வருகிறார்? ஒருவேளை அனுக்கிரஹம் செய்ய வருகிறாரோ?’ என்று நினைத்ததாம்.
பிரஹ்லானுக்கு சர்ப்பமும் புரியவில்லை. கடிக்கப் போவதும் புரியவில்லை. பகவானின் பள்ளியாகிய ஆதிசேஷன் நம்மை நோக்கி வருகிறாரே என்று நினைத்து, “வாரும்…வாரும்” என்று அழைக்கிறான். உடனே, சர்ப்பமெல்லாம் அவனைப் பிரதட்சிணம் செய்துவிட்டுக் கடிக்க முடியாமல் திரும்பிப் போகின்றன.
பக்தன் கலங்கிப் போய்விட்டானென்றால், அவன் என்ன பண்ணுகிறான் என்று அவனுக்கே தெரியாது. நமக்கெல்லாம் பாம்பைப் பார்த்தால் பாம்பாகத் தோன்றும். பக்தனுக்குப் பாம்பைப் பார்த்தால் படுக்கை என்று தோன்றும். நமக்கெல்லாம் கருடனைப் பார்த்தால், பக்ஷி என்று தோன்றும். பக்தனுக்கு கருடனைப் பார்த்தால், வாகனம் என்று தோன்றும்.
நமக்குத் தண்ணீரைப் பார்த்தால், மூழ்கிப் போய்விடுவோமோ என்று தோன்றும். பக்தனுக்கு அது பாற்கடல் என்றும் பகவான் படுக்கும் இடம் என்றும் தோன்றும். ஒவ்வொன்றும் நமக்குத் தோன்றும் விதம் வேறு; பக்தனுக்குத் தோன்றும் விதம் வேறு. அதுபோலவே பாம்பைப் பார்த்ததும், ஆதிசேஷன் வருவதாக நினைத்துக் கொண்டான் பிரஹ்லாதன்.
ஆழ்வார் பார்க்கிறார். மண்ணைத் துழாவித் துழாவிப் பார்க்கிறாராம். இந்த மண்ணைத்தானே வாமனன் பிரார்த்தித்துப் பெற்றான்? என்று தோன்றுகிறது.
மண்ணை இருந்து துழாவி
வாமனன் மண் இதுவென்னு
நம் வீட்டு மண்ணை, நாம் துழாவிப் பார்த்துவிட்டு வாமனன் மண் இது என்று சொல்வோமா? பக்தன்தான் சொல்வான்!
மண்ணைத் துழாவிப்பார்த்துவிட்டு பக்கத்தில் இருந்த கன்றுக்குட்டியைப் போய் ஆலிங்கனம் பண்ணிக்கொண்டாராம். ‘கோவிந்தன் மேய்த்த கன்று இதுதான். எங்கள் கோவிந்தன் கறந்த பசுமாடு இதுதான்’ என்று ஒவ்வொன்றையும் பார்த்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதேபோல் பக்கத்தில் நாகப்பாம்பு இருந்ததாம்.
‘இள நாகத்தின் பின் போய் அவன்
கிடக்க ஈதென்னும்’
நாகப் பாம்பின் பின்னால் ஓடுகிறார். பகவான் படுத்த நாகப்பாம்பு இதுதானே என்று பார்க்கிறார்.
இதுபோல் பிரஹ்லாதன் பாம்புகளைப் பார்த்து நினைக்க, ஒன்றும் பண்ண முடியாமல் அவை அத்தனையும் திரும்பிப் போயின.
அடுத்ததாக, ‘நிறையத் தீ மூட்டி, அந்தத் தீக்குள்ளே இவனை விட்டுவிடுங்கள்’ என்று ஆணையிட்டானாம் ஹிரண்யன்.
கம்பநாட்டாழ்வார் சொல்கிறார்:
குழியில் இந்தனம்
அடுக்கினர், குன்றென
குடந்தொறும்
கொணர்ந்தனர்
எண்ணை இழுது
நெய்…
பெரிய குழி வெட்டினார்களாம். நிறைய விறகுக் கட்டைகளை அதில் அடுக்கினார்களாம். குடம் குடமாக நெய்யைக் கொண்டு வந்து அதில் கொட்டினார்களாம். அதில் பிள்ளையைப் போட்டு எரித்து மூடிவிட வேண்டும் என்றான் ஹிரண்யன்.
பெருமாளுக்கு அகிற் புகைக்கு ஒரு நாளும் ஒரு கட்டையும் எடுத்து வர மாட்டான்; பெருமாளுக்கு தீபம் ஏற்றுவதற்காக அவன் ஒரு சொட்டு நெய்யையும் சேர்க்க மாட்டான், ஹிரண்யன். ஆனால், இந்தப் பிள்ளையை முடிப்பதற்காக இத்தனை கட்டை! இத்தனை நெய்! குடம் குடமாய் விட்ட நெய்யில் அந்தத் தீ கொழுந்து விட்டு எரிகிறதாம். குழந்தை பிரஹ்லாதன் அதைப் பார்க்கிறான்.
அரி என்று தொழுது
நின்றனன் நாயகன்
தாளினை
குளிர்ந்தது சுடு தீயே
சிவப்பாக எரியும் தீயைக் குழந்தை பார்த்தானாம். இதேபோல சிவந்த திருமேனிதானே எங்கள் பெரிய பிராட்டியார் ஸ்ரீதேவி நாச்சியாருக்கு! அவளை ஆலிங்கனம் பண்ணிக்கொள்ளும் பெருமான், அவன் எப்படி இருப்பான் என்றால் சாஸ்திரம் சொல்கிறது: ‘திருவடியிலிருந்து திருமுடி வரைக்கும் எரிகிற பொன் நிறமாக இருப்பான் பகவான்.’
ஆக, அக்னியைப் பார்த்தவுடனேயே பகவானின் தோற்றம் நினைவுக்கு வருகிறது குழந்தைக்கு. ‘ஓஹோ… அவரின் வண்ணத்தை நமக்கு நினைவு படுத்த வேண்டும் என்பதற்காக, பகவான் அக்னியாய் வந்திருக்கிறார் போலிக்கிறது’ என்று நினைத்துக் கொள்கிறானாம். ஆகவே, அக்னி அவனை எதுவுமே பண்ணவில்லையாம்.
ஆழ்வாரின் பாசுரமும் அதேதான்.
அரியும் செந்தீயைத் தழுவி
அச்சுததன் என்னு மெய்வேவாள்
அக்னியைப் போய் நம்மாழ்வார் ஆலிங்கனம் பண்ணிக் கொள்கிறார். இதுதான் அச்சுதன். அப்படி சொன்னவுடன் என்ன ஆயிற்று? மெய்வேவாள் – அதாவது உடம்பு சுடவே இல்லை.
‘குளிர்ந்தது சுடு தீயும்’ என்கிறார் கம்பர். ஆக, குழந்தையை முடிப்பதற்குத் தீயாலும் முடியவில்லை.
பார்த்தார்கள் புரோகிதர்களெல்லாம். இந்தக் குழந்தையை முடிப்பதற்கு இப்போது முடியாது போலிருக்கிறது. “கொஞ்ச காலத்துக்கு எங்களிடத்தில் விட்டுவிடுங்கள்.” என்றார்களாம். ஏற்கனவே, கல்வி கற்பதற்கு அனுப்பியவர்களிடமிருந்து எந்தவிதப் பிரயோஜனமும் இல்லை. வேறு சிலர் கற்றுக் கொடுப்பதாக சொல்கிறார்களே, அவர்களிடத்தில் விட்டுப் பார்ப்போம் என்று நினைத்து, அவர்களிடம் குழந்தையை விட்டான் ஹிரண்யன். அங்கே போய் என்ன பண்ணினான் பிரஹ்லாதன்? மறுபடியும் உபதேசம் செய்ய ஆரம்பித்துவிட்டானாம்!
(வைபவம் வளரும்
ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 15 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்
ஏற்றச்சால் வாழ்க்கை!
குருகுலத்துக்கு வந்த பிரஹ்லாதன், அங்கு உள்ள எல்லாக் குழந்தைகளையும் ஒன்றாக உட்கார வைத்துக் கொண்டான். அங்கும் உபதேசத்தை ஆரம்பித்துவிட்டான்.
ஏய் குழந்தைகாள். பிறக்கிறீர்கள். வளர்கிறீர்கள். இறக்கிறீர்கள். மறுபடியும் பிறக்கிறீர்கள். வளர்கிறீர்கள். இறக்கிறீர்கள். என்ன கண்டீர்கள்? இப்படிச் சுற்றிச் சுற்றி வருவதனாலே எந்த லாபத்தையாவது நீங்கள் கண்டீர்களா?” என்று கேட்டான்.
நாம் கிராமத்துப் பக்கம் போனோமானால், உழவுத் தொழிலுக்காக ஒரு பெரிய எந்திரம் வைத்திருப்பார்கள். ஏற்றசால் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? நடுவில் ஒரு கட்டையைக் கொடுத்து, நீண்ட ஒரு மரக்கட்டையைக் கட்டியிருப்பார்கள். பெரிய கங்காளம் போன்ற பாத்திரம் ஒன்றைக் கட்டி வைத்திருப்பார்கள். அதன் மேல் ஒருவர் நின்று கொண்டு நடப்பார். அவர் அந்தப் பக்கம் நடந்தால் இது முங்கும். முங்கியவுடன் தீர்த்தத்தை முழுவதும் எடுத்துக் கொள்ளும். அவன் இன்னொரு புறம் நடந்தானானால், அது ஜலம் மொத்தத்தையும் வயல் வரப்பில் கொட்டிவிடும். மறுபடியும், அவன் மாற்றி நடந்தால் மறுபடியும் அது முழுகி தீர்த்தத்தையெல்லாம் எடுத்துக்கொள்ளும்.
ஏற்றச்சால் இந்த இரண்டு வேலையைத் தவிர வேறு எதையும் செய்யவே முடியாது. ஒன்றாய் அப்படிப் போனால் உள்ளே மூழ்கும், ஜலத்தை எடுத்துக்கொள்ளும். இல்லையா இப்படிப் போனால் ஜலத்தைக் கொட்டும். கொட்டிவிட்டேனே என்று அதனால் பேசாமல் இருந்துவிட முடியாது. மறுபடியும் போய் ஜலத்தை எடுத்துத்தான் ஆக வேண்டும். நாமும் இந்த ஏற்றச்சால் போன்றவர்கள்தான். சம்சாரத்துக்குள் வருவோம்; பாவ புண்ணியங்கள் என்ற தீர்த்தத்தை நிறைய எடுத்துக் கொள்வோம்.
இதை முடிப்பதற்காக ஒன்று சொர்க்கத்துக்குப் போய்ப் புண்ணியத்தைத் தீர்த்துவிடுவோம் அல்லது நரகத்துக்குப் போய்ப் பாவத்தைத் தீர்த்துவிடுவோம். தீர்த்துவிட்டாலும் மறுபடியும் சம்சாரத்துக்குள் வந்து விடுவோம். ஆகவே, நாமும் ஏற்றச்சாலைப் போலே பாவ புண்ணியங்களை முகந்து எடுத்துக் கொள்கிறோம். அங்கே போய் அவற்றைக் கொட்டிவிட்டு வருகிறோம். வந்துவிட்டு சும்மா இருக்கிறோமோ? மறுபடியும் பாவ புண்ணியங்களை முகந்து எடுக்க ஆரம்பித்து விடுகிறோம்.
இதுபோல் மாற்றி மாற்றி எத்தனை நாட்கள் போய்விட்டு வரப் போகிறீர்கள் குழந்தைகளே? இதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும். அதற்கு என்ன வழி? ஒரே வழி நாராயணன் நாமத்தைச் சொல்லுவதுதான்” என்று உபதேசம் பண்ண ஆரம்பிக்கிறான் பிரஹ்லாதன். இவர்களுக்குப் பசி, பிணி, மூப்பு, துன்பம் இவை வேண்டாம். கர்ப்பத்தில் இருக்கும்போது எவ்வளவு கஷ்டம்? வெளியில் வந்தவுடன் எவ்வளவு கஷ்டம்? பாவத்தைத் தொலைப்பதற்கு எவ்வளவு கஷ்டங்கள்?
ஒரு சின்னக் குழந்தையை எடுத்துக் கொள்வோம். தனக்குப் பால் வேண்டும் என்றால்கூட அதற்குக் கேட்கத் தெரியாது. தனது மல மூத்திராதிகளைப் பார்த்துக் கொள்ளக்கூட அதற்குத் தெரியாது. ஆகவே, அதற்கு பகவத் விஷயங்கள் எதுவும் தெரியாது. சரி போகட்டும்; ஒரு ஆறு வயதுக்குமேல் எல்லாம் தெரிந்துகொண்டு விடுகிறது அல்லவா? ஆறு வயதிலிருந்து, பன்னிரண்டு வயதுக்குள் தெரிந்துகொண்டு விடலாமே என்றால்.. ‘பால்யே க்ரீடனகா சக்த:’ விளையாட்டில்தான் அப்போது புத்தி போகுமே தவிர, ஞானத்தில் புத்தி போகாது. சரி; பன்னிரண்டிலிருந்து இருபது இருபத்தியிரண்டு வயது வரைக்கும் தெரிந்துகொள்ளலாமே என்றால், ‘நவ யௌவன பருவம்’. இப்போது தெரிந்துகொள்ளலாமே? எதுவும் சீக்கிரமாகப் புரியுமே என்றால், முடியாது!
‘யௌவனே விஷயேசினாம்’. விஷய சுகத்தை அனுபவிக்கும் ஆசை அப்போதுதான் வருகிறது. முதல் ஆறு வயது ஒன்றுமே தெரியவில்லை. அப்புறம் பத்து வயதுவரை விளையாட்டில் ஆசை. அப்புறம் ஏதேதோ விஷய சுகங்களை அனுபவிக்கும் ஆசைகள். ஆக, ஆகிவிட்டது முப்பது வயதுக்கு மேலே. இனியாவது தெரிந்து கொள்ளலாமே என்றால், பிள்ளையைக் காப்பாற்றியாக வேண்டும். பத்தினியைக் காப்பாற்றியாக வேண்டும். பிள்ளை குட்டிகளுக்கு உபநயனம் பண்ணியாக வேண்டும். கல்யாணம் பண்ணிக் கொடுத்தாக வேண்டும். இதுவரைக்கும் கடமைகளை முடித்தேன் என்றான்.
சரி… இப்போதுதான் கடமைகள் முடிந்துவிட்டதே, இனியாவது பகவானைப் பற்றித் தெரிந்து கொள்வது பற்றி யோசிக்கலாமே என்றால், ஆம் இப்போது ஆசை வந்துவிட்டது… ஆனால், கண்கள் பார் என்றால் பார்க்கமாட்டேன் என்கின்றன. காதுகள் கேள் என்றால் கேட்க மாட்டேன் என்கின்றன. இப்போது, நாம் சொல்கிறபடி இந்திரியங்கள் கேட்காது. இந்திரியங்களெல்லாம் சரியாக இருந்த அன்றைக்கு மனசு கேட்கவில்லை. மனம் சரியாக இருக்கும்போது இந்திரியங்கள் கேட்கவில்லை.
எப்போதுதான் பகவானை அறிவது? பாவ புண்ணியங்களைத் தொலைக்க வேண்டாமா? சரி; பகவானை அறிவது, பகவானை அறிவது என்கிறோமே… அப்படி என்றால் என்ன?
ஒரு சமயம் வேதாந்தங்களெல்லாம் யார் பரதேவதை என்று தேட ஆரம்பித்தனவாம். விசாரிக்க ஆரம்பித்தன. ஒவ்வொருவருடைய நெஞ்சையும் பார்த்துக் கொண்டே போயினவாம். இந்திரனைப் பார்த்ததாம். இவர் இல்லை. குபேரனைப் பார்த்ததாம். இவர் இல்லை. சந்திரனைப் பார்த்ததாம். இவர் இல்லை. பிரம்மாவைப் பார்த்ததாம். இவர் இல்லை. இவ்வாறாக ஒவ்வொருவரையாகப் பார்த்துப் பார்த்து இவர் இல்லை என்று சொல்லிக்கொண்டே வந்ததாம். எந்தத் திருமார்பில் மகாலட்சுமி எழுந்தருளியிருக்கிறாளோ அந்தத் திருமார்வை உடையவன்தான் பராத்பரன். அவன்தான் பரமாத்மாவாக இருக்கமுடியும். வேதாந்தம் அதைத் தேடிக்கொண்டே போகிறது. நல்ல வேளையாக ரமா என்கிற மகாலட்சுமியை ஸ்ரீமன் நாராயணனுடைய திருமார்பிலே கண்டது.
திகழ்கின்ற திருமார்பில் திருமங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடந்தான் வாட்டாறு
ஆக, திருமாலின் திருமார்புக்கு எதனால் ஏற்றம்? மகாலட்சுமி அமர்ந்திருப்பதனாலேதான் ஏற்றம். லட்சுமிக்கு எதனாலே ஏற்றம்? அவர், திருமாலின் திருமார்பில் உட்கார்ந்திருப்பதனாலே ஏற்றம்!
‘ராமன் ஸ்வாமி வீடு எது?’ என்று கேட்டான். கிருஷ்ணன் ஸ்வாமி வீட்டுக்குப் பக்கத்தில் என்றார்களாம். ‘கிருஷ்ணன் ஸ்வாமி வீடு எது?’ என்று கேட்டான். ராமன் ஸ்வாமி வீட்டுக்குப் பக்கத்தில் என்றார்களாம். அப்போது, இப்படிப் பார்த்தால் அதனால் ஏற்றம்; அப்படிப் பார்த்தால் இதனால் ஏற்றம். அப்போது சாத்திரம் விசாரித்தது. யாருடைய திருமார்பில் பிராட்டி அமர்ந்திருக்கிறாளோ அவனேதான் முழு முதற்கடவுள். இதற்கு மேல் வேத விசாரம் பண்ண வேண்டாம் என்று, அதோடு தன் தேடலை நிறுத்திக் கொண்டதாம்.
ஆக, நரசிம்மன் பரதேவதை என்று எதைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்? திருமார்பில் இருக்கிற நாச்சியாரைப் பார்த்தாலும் அல்லது திருமடியிலே அமர்ந்திருக்கிற லக்ஷ்மிதேவியைப் பார்த்தாலும் தெரிந்துகொள்ளலாம். அப்படி அமர்ந்திருந்த லக்ஷ்மிதேவியே பயப்படும்படியாக ‘பொன் பெயரோன் மார்பிளந்த’ என்கிறார் ஆழ்வார்.
பொன் பெயரோன் என்றால் ஹிரண்ய கசிபு. ஹிரண்ய என்றால் பொன். ஏன் அந்தப் பெயர் என்றால், பொன்னை உருக்கி வார்த்தாற்போல் இருப்பானாம் ஹிரண்ய கசிபு. ஹிரண்யாக்ஷன், ஹிரண்ய கசிபு இரண்டு பேருமே அசுரர்கள். பிரம்மாவின் மானச குமாரர்கள். சனகர் முதல் சனத் குமாரர் ஈறாக நான்கு பேர்கள். இந்த நான்கு பேரும், வைகுண்ட வாசலில் காவல் காக்கும் ஜயன் விஜயன் என்ற இரண்டு துவாரபாலகர்களுக்கும் சாபம் இட்டுவிட்டார்கள். (என்ன சாபம்? ராட்சஸப் பிறவிதான்!) அந்த சாபத்தால், முதல்முறை இரண்டு பேரும் ஹிரண் யாக்ஷன், ஹிரண்ய கசிபு என்று பிறந்தார்கள். அடுத்தமுறை ராவணன், கும்பகர்ணன் என்று பிறந்தார்கள்! கடைசி முறை, சிசுபாலன், தந்த வக்த்ரன். இவர்களில் ஹிரண்யாக்ஷனை வராகப் பெருமான் வதம் செய்தார். ஹிரண்ய கசிபுவை நரசிம்மப் பெருமான் அழித்தார். ராவண, கும்பகர்ணனை ராமன் முடித்தான். சிசுபாலன், தந்த வக்த்ரன் இருவரையும் கண்ணன் முடித்தான்!
(வைபவம் வளரும்
*ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 16 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்*
அலங்கார ஆயுதம்!
ராமர் கண்ணன் போன்ற அவதாரங்களால் முடிக்கப்பட்டு பிற்பாடு சாப விமோசனம் ஏற்பட்டு பிறகு மறுபடியும் அவர்கள் ஜெயவிஜயர்களாகவே பிறந்தார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவன் அல்லவா ஹிரண்யன். பொன்னை உருக்கி வார்த்தாற்போலே உருவம் கொண்டவன். மிகவும் சிறந்த பலம் படைத்தவன். அவன் பிரம்மாவைக் குறித்து தபஸ் பண்ணி, நீண்ட வரங்களைப் பெற்றிருக்கிறான். அகோர தபஸ் செய்தான். பிரம்மா வந்து “என்ன வேணும்"னு கேட்டார். “எனக்கு எதாலும் மரணம் கூடாது. மனுஷனால் கூடாது. மிருகத்தால் கூடாது. ஆகாசத்தில் கூடாது. பூமியில் கூடாது. உள்ளே கூடாது. வெளியில் கூடாது. பகல் பொழுதில் கூடாது. ராத்திரியில் கூடாது. பிராணன் இருக்கும் ஆயுதத்தால் கூடாது. பிராணன் இல்லாத ஆயுதத்தால் கூடாது." இதைவிட என்ன மிச்சம் இருக்கிறது? எல்லாவற்றையுமே கேட்டுவிட்டான். பிரம்மா பயந்தே போய்விட்டார். ‘அப்படியானால் இவனை என்ன அழிக்கவே முடியாதா?’ என்று. நல்ல வேளையாகக் கடைசியாக ஒன்று கேட்டான்: பிரம்மனே, உன்னால் படைக்கப்பட்ட எதுவும் என்னைக் கொல்லக் கூடாது" என்று கேட்டான்.
பெருமூச்சு விட்டார் பிரம்மா. ‘நல்ல வேளை. என்னால் படைக்கப்பட்டதுதானே கொல்லக் கூடாது? என்னைப் படைத்தவர் கொல்லலாம் அல்லவா!’ என்று. அவர்தான் பூவில் நான் முகனைப் படைத்ததேவன். திருவனந்தபுரத்துக்குப் போனால் அனந்த பத்மநாப சுவாமியை சேவிக்கிறோம். அவருடைய நாபி கமலத்திலிருந்து பிரம்மா தோன்றுகிறார். ‘பூவில் நான்முகனைப் படைத்த தேவன்’ என்பது ஆழ்வாரின் பாசுரம். மேற்கொண்டு எல்லா தேவதைகளையும் படைப்பதற்காக நாபி கமலத்தில் பிரம்மாவை பகவான் படைத்தார். நான்முகன் மேற்கொண்டு மற்றபேர்களையெல்லாம் படைக்கிறார் என்கிறது உபநிஷதம். அப்படியானால் அனைவருக்கும் முழு முதற்கடவுள் பகவான்.
திருமாலின் மார்பில் ஸ்ரீமகாலட்சுமி இருப்பதைப் பார்த்தவுடனேயே வேதாந்தம் விசாரத்தை முடித்துக் கொண்டுவிட்டது. ‘இனி விசாரம் செய்வதற்கு எதுவும் இல்லை. இவர்தான் பரதேவதை. இவர் தான் சர்வாதிகன்’ என்று. திருமாலின் மார்பில் மகாலக்ஷ்மி இருக்கும் தழும்பைப் பார்த்தவுடனேயே வேதாந்தம் தன் விசாரத்தை முடித்துக்கொண்டுவிட்டதாம்.
பொன் வண்ணத்தில் இருக்கும் திருமகளை, கருநீல வண்ணனாகிய திருமால் மார்பில் தரித்தாராம். கருநீலத்துடன் சிவப்பான ஒன்றை சேர்த்தால் அழகிய வர்ண சேர்க்கை உண்டாகும். ‘வீங்கோத வண்ணன்’ என்கிறார் ஆழ்வார். பிராட்டி எழுந்தருளியிருப்பது ஒரு அழகு. அவள் சிவந்த நிறம் கொண்டவள். பகவானோ ஓத வண்ணன். அதாவது கருநீலவண்ணன். சிவப்பையும் கரு நீலத்தையும் சேர்த்தால் வர்ண சேர்க்கை எப்படி இருக்கும்? நாம் புடைவை, வேட்டி சட்டை ஆகியவற்றை எந்தெந்த வர்ணங்களில் போட்டுக் கொள்ள வேண்டும் என்று வர்ண சேர்க்கை உள்ளது அல்லவா? கருப்பா உள்ளவர்களும் வெளுப்பா உள்ளவர்களும் அதற்குத் தகுந்தாற் போன்ற வர்ணத்தில்போட்டுக் கொள்ள வேண்டும். இடுப்புக்குக் கீழேயும் மேலும் உள்ள உடைகளை ஒன்றோடு ஒன்று சேர்க்கும்போதும் அதற்குத் தகுந்த வண்ணத்தில்தான் சேர்க்க வேண்டும். முண்டாசு ஒரு நிறத்தில் இருந்தால் அங்க வஸ்த்திரம் வேறு நிறத்தில் இருக்க வேண்டும். அததற்குத் தகுந்த வர்ணம் இருந்தால்தானே எடுக்கும்? அதே போலத்தான் இங்கும். பெருமாள் நீல வர்ணத்தில் இருக்கிறார். பிராட்டி செக்கச் செவேல் என்று இருக்கிறாள். அது பார்ப்பதற்கு எப்படி இருக்கிறதாம்? தங்கத் தகட்டில் வைரத்தைப் பதித்து அட்டிகை செய்தாற்போலே இருக்கிறதாம்! அது மாதிரி ஆச்சர்யமாக இருக்கிறதாம்.
அந்த எம்பெருமானின் பலத்தை... சக்தியை என்னவென்று சோல்வோம்! ஒரு நிமிஷநேரத்துக்குள் ஹிரண்யனையே முடித்துவிட்டான் அல்லவா நரசிம்மப் பெருமான்? அந்தத் தழும்பை சேவிப்போம். இந்தப் பாசுரப்படி மூன்று தழும்புகள் உள்ளன. ஒன்று திருத்தோள்களில் வில்லை ஏந்தி ஏந்தி, அந்த நாணினுடைய சொரசொரப்புத் தழும்பு. இரண்டாவது சகடாசுரனை முடித்தபடியால் திருவடிகளில் இருக்கும் தழும்பு. மூன்றாவது பெரிய பிராட்டியாரை மார்பிலே அமர்த்தி அமர்த்தி அதனால் ஏற்பட்ட தழும்பு. இப்படிப்பட்ட லக்ஷ்மி நரசிம்மனை நாம் வணங்குவோம் - என்று பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதிப் பாசுரத்தில் தெரிவிக்கிறார்.
அதே ஆழ்வார் அதே திருவந்தாதியில் அடுத்தொரு பாசுரத்தில் என்ன விண்ணப்பிக்கிறார் தெரியுமா?
புரியொரு கை பற்றி ஓர் பொன்னாழி ஏந்தி
அரியுருவம் ஆளுருவம் ஆகி எரியுருவ வண்ணத்தான்
மார் பிளந்த மாலடியை அல்லால்
மற்றெண்ணத்தானாலாகுமோ இமை?
லக்ஷ்மி நரசிம்மருடைய திருவடிகளைத் தவிர மற்றொரு திருவடி நமக்கு ஒருநாளும் தஞ்சமாகாது என்பது முதலாழ்வாருடைய பாசுரம். புரி ஒரு கை பற்றி என்றால் வலம்புரி சங்கை ஒரு கையில் ஏந்தி என்று பொருள். சங்கை இடது கையாலே பற்றியிருக்கிறார். வலக்கையில் பொன்னாழி அதாவது பளபளப்பான சக்ராயுதம் ஏந்தியிருக்கிறார். ஆயிரம் சூரியர்களை ஒரே சமயத்தில் எரித்தால் என்ன ஒளி இருக்குமோ அந்த அளவு பளபளப்பு உள்ளது சக்கராயுதம். ‘அரியுரவம் ஆளுருவம் ஆகி’ என்றால் சிங்கத்தின் உருவமும் மனிதனின் உருவமும் கொண்டு என்ற பொருள். எரிகின்ற நெருப்பைப் போன்ற உருவம் படைத்த ஹிரண்யகசிபுவின் மார்பைப் பிளந்தாராம். அப்படிப்பட்ட பெருமானின் திருவடியை இமைப் பொழுதாவது எண்ணத் தோன்றுமோ? இமை என்பதை இமைப் பொழுது அல்லது அல்பக்ஷணம் என்று இங்கே கொள்ள வேண்டும்.
நரசிம்மப் பெருமான் சங்கு சக்கரம் பிடித்துக் கொண்டிருந்தாரா அதை வைத்துக்கொண்டுதான் கொன்றாரா என்ன? ஏன் முதல் ஆழ்வார் இதைப் பாசுரத்தில் சொல்கிறார்?
இன்றைக்கு நாம் எங்கு சேவித்தாலும் அந்தப் பெருமான் சங்கு சக்கரத்துடன்தான் இருக்கிறார்! ஆனால் ஹிரண்யகசிபுவைக் கொல்வதற்காக வந்தபோது சங்க சக்கரத்துடன் வந்தாரா? வந்திருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். இரண்டு திருக்கைகளோடு இருந்திருக்கலாம். நான்கு திருக்கைகளோடு சேவை சாதித்திருக்கலாம். ஏனெனில் கண்ணன் அவதரித்த போதே நான்கு திருத்தோள்களோடுதான் அவதரித்தார்.
பாகவதத்தில் சுகாச்சாரியார் பரீட்சித்துக்கு சொல்லும்போது, ‘சங்கு சக்கர கதையுடன் நான்கு தோள்களுடன் அவதரித்தார் என்றும் தேவகியும் வசுதேவரும் சேவித்தார்கள்’ என்றும் சொல்கிறார். அவர்கள் பயப்பட்டதனால் அதிகப்படியான இரண்டு தோள்களை மறைத்துக்கொண்டு சாமான்ய உலகக் குழந்தையைப் போல் சாதாரணமாகக் காட்சி அளித்தாராம்.
அதேபோலவே ஒருவேளை நரசிம்மப் பெருமானும் நான்கு தோள்களுடன் சங்க சக்கரங்களைப் பற்றியிருந்திருக்கலாம். அவற்றை வைத்துக்கொண்டு இந்த அவதாரத்தில் என்ன செய்தார் என்று கேட்டால், அலங்காரத்துக்குப் பிடித்துக் கொண்டிருந்தார் என்றார் ஆழ்வார். ஆயுதமாக அல்ல! அலங்காரமாக. நீங்கள் எங்கு லக்ஷ்மி நரசிம்மனை சேவித்தாலும் சங்கு சக்கரத்தை வைத்திருப்பார்.
இதை ஏன் அவர் பயன்படுத்தவே இல்லை? ஹிரண்யகசிபுவை சக்கராயுதம் விட்டுக் கொன்றிருக்கலாம் அல்லவா? ஏன் நகத்தால் கொன்றீர்கள் என்று கேட்டால், அவன்தான் வரம் வாங்கிக்கொண்டு வந்திருக்கிறானே? ‘பிராணன் இருக்கும் எதுவும் என்னைக் கொல்லக்கூடாது, பிராணன் இல்லாத எதுவும் என்னைக் கொல்லக்கூடாது’ என்று கேட்டிருக்கிறானே. சங்கு சக்கரம் இரண்டும் பிராணன் இல்லாத ஆயுதங்கள். எனவே, அவற்றை உபயோகப்படுத்தவில்லை. நகத்தை வைத்து மார்பைக் கிழிக்கும்போது கரகரவென்று சத்தம் வருகிறதல்லவா? கூரத்தாழ்வார் அந்த சத்தத்தை வைத்தே ஒரு பாடல் எழுதியிருக்கிறார். கரகரவென்று கிழிந்து ரத்தம் பீறிட்டு மேல்நோக்கி எழுந்ததாம்.
நகத்தாலே மரணம் சம்பவிப்பதை மட்டும் ஒத்துக் கொண்டானா ஹிரண்ய கசிபு? நகத்துக்கு இரண்டு தன்மைகள் உண்டு. ஒரு தன்மை வெட்ட வெட்ட வளர்தல். அப்படியானால் உயிர் இருக்கிறது என்று அர்த்தம். வெட்டினால் வலிக்கவில்லை அல்லவா? உயிர் இல்லை என்று அர்த்தம்.
(வைபவம் தொடரும்)
*ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 17 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்*
துரும்பால் கிளறியவன்!
ஆகவே... உயிர் இருக்கும் ஒன்றும் கொல்லக்கூடாது; உயிர் இல்லாத ஒன்றும் கொல்லக் கூடாது என்று ஹிரண்யன் வரம் கேட்டதற்குப் பொருத்தமான ஆயுதம் நகம்தானே? வெட்டினால் வளர்கிறது. உயிர் உள்ளது என்று வைத்துக் கொள். வெட்டினால் வலிக்காது. உயிர் இல்லை என்று வைத்துக்கொள். நாம் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். பகவான் எதை ஆயுதமாகப் பயன்படுத்தினாலும் அது சக்கரத்தின் அம்சமாகும். இதுதான் பூர்வர்களுடைய நிர்வாகம்.
இதேபோல் வாமனமூர்த்தி சுக்கிராச்சாரியாரின் கண்களைக் கிளறினான் அல்லவா?
‘சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக்கையனே அச்சோ அச்சோ’ என்பது பெரியாழ்வாருடைய பாசுரம். மகாபலி சக்கரவர்த்தி கமண்டல தீர்த்தத்தை வாமனமூர்த்தியின் கையில் தெளித்து மூன்றடி மண்ணை தானம் கொடுக்கப் போகிற சமயம்.
‘இவன் பைத்தியக்காரன். மூன்றடி மண் கொடுக்கிறேன் பேர்வழி என்று மொத்தத்தையும் இழக்கப்போகிறான்’ என்று கமண்டலத்தின் துவாரத்தை அடைத்தார் அவனுடைய ஆசார்யன் சுக்கிராச்சாரியார். ஒரு பூச்சி வடிவெடுத்து அதைச் செய்தார் அவர். உடனே வாமன மூர்த்தி என்ன செய்தார்? மடியில் இருந்த தர்பத்தை எடுத்தார். அந்த துவாரத்தில் கிளறினார். ஒரு கண் போய் வெளியில் வந்து விழுந்தார் சுக்கிராச்சாரியார். அதனால்தான் ‘துரும்பால் கிளறிய’ என்றார் ஆழ்வார். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். துரும்பால்தானே கிளறினார். ’சக்கரக்கையனே அச்சோ அச்சோ’ என்றாரே ஆழ்வார். துரும்புக் கையனே என்றுதானே பெரியாழ்வார் பாடியிருக்க வேண்டும்.
இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால், பகவான் துரும்பை ஆயுதமாகப் பயன்படுத்தினாலும் சக்கரக்கையன்தான். அது சக்கரம்தான். அவர் எதை வாகனமாகப் பயன்படுத்தினாலும் அது கருடனின் அம்சம். அவர் எதைப் படுக்கையாகப் பயன்படுத்தினாலும், அது ஆதிசேஷனின் அம்சம் என்று நாம் கொள்ள வேண்டும்.
ஆகவே, சங்க சக்கரங்களை பகவான் கையில் பிடித்திருக்கிறார் என்றால், முதல் காரணம் அவர் பகவான் என்று அடையாளம் தெரிவதற்காக. இரண்டாவதாக, அழகாய் இருக்கிறது. அலங்காரத்துக்காக. மூன்றாவது காரணம், அன்றைக்காவது பரவாயில்லை; ஒரு ஹிரண்யனைத்தான் முடிக்க வேண்டியிருந்தது. இப்பேர்ப்பட்ட ஸ்ரீநிதியாகிய பெரிய பிராட்டியைப் பக்கத்தில் வைத்திருக்கிறாரே, அவரை ரக்ஷிக்க வேண்டாமா! அதற்காக சங்க சக்கரம் பிடித்திருக்கிறாராம்.
மடியில் ஒரு சொத்து இருக்கிறதல்லவா? நம்மிடம் ஒரு சொத்து இருந்தால் பூட்டு சாவி என்று எவ்வளவு ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ள வேண்டும்? அதற்காகத்தான் சங்க சக்கரம் என்ற ஆயுதங்களை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறார்.
ஆழ்வார் சாதித்தார்,
புரியொரு கை பற்றி ஓர் பொன்னாழி ஏந்தி
அரியுருவம் ஆளுருவம் ஆகி
எரியுருவ வண்ணத்தான்
மார்பிளந்த மாலடியை அல்லால்
மற்றெண்ணத்தானாலாகுமோ
இமை?
என்றார். அப்பேர்ப்பட்ட திருமாலின் திருவடித் தாமரையைவிட்டு விட்டு, வேறு எதைத்தான் இமைப் பொழுதும் எண்ணுவோம்? இமைப் பொழுதும் பெருமானை மறந்திருப்பது கூடாது. இதை ஆழ்வார்கள் எல்லோருமே வலியுறுத்துகிறார்கள். நாம் தியானம் தியானம் என்கிறோம். ஓஹோவென்று உட்கார்ந்து தியானமெல்லாம் எப்படிப் பண்ண முடியும் என்றெல்லாம் நமக்குத் தெரியாது.
மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம் மாநிலத்தெய்வ்வுயிர்க்கும்.
சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்
நான் எல்லோருக்கும் ஒரு வழி சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள். அது சுலபமான வழி. சிற்ற வேண்டாம். அதாவது பதற வேண்டாம். இதைப் பண்ணலாமா அதைப் பண்ணலாமா? எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று... என்ன பிராயச்சியத்தம் என்று ஓடவே ஓடாதீர்கள். திணற வேண்டாம். ‘மற்றொன்றில்லை சுருங்கச் சொன்னோம்’ என்றால், எல்லாவற்றுக்கும் ஒரே வழி சொல்கிறேன் என்கிறார். பகவானை சிந்தனையில் கொண்டாலே போதும். நாம் சிந்திக்க சிந்திக்க அவர் நம் மனசில் இருக்கிறார். அதுகூட வேண்டாம். நம் மனசுக்கு வந்தவரையாவது சிந்திக்க வேண்டாமா?
வந்துனதடியேன் மனம் புகுந்தா
புகுந்ததற்பின்
வணங்கும் என் சிந்தனைக்கு
இனியா
என்று திருமங்கையாழ்வார் ஆச்சர்யமாகப் பாடுகிறார். முதலில் பெருமாள் நம் மனசுக்குள் வந்து இருந்துவிடுவாராம். வந்த பிறகாவது கைகூப்ப வேண்டாமா! நாமே கைகூப்பி அவரை வரவழைத்திருக்க வேண்டும். நாம் செய்யமாட்டேன் என்கிறோம். அவரே வந்துவிடுகிறார். வந்தவரையாவது நாம் கைகூப்பி வணங்கி நினைக்க வேண்டாமோ? அப்படி நரசிம்மப் பெருமானை நினைத்தால் சிற்ற வேண்டாம். சிந்திப்பே அமையும்.
அவனை நினைப்பது கஷ்டமா என்ன? பாகற்காயையே நினைத்துக் கொண்டு தூங்கு என்று சொன்னால் கஷ்டம். அது கசக்கிறது என்று நான் சின்ன வயசில் எவ்வளவு பாடுபட்டிருக்கிறேன் என்று எனக்கல்லவா தெரியும் என்று சொல்லலாம். இப்போது அதையே நினைத்துக்கொண்டு தூங்கு என்றால் தூங்குவேனா என்ன? ஒரு மரத்தின் மீது பயங்கரமான ஒரு பேய் நின்று கொண்டிருக்கிறது. அதையே நினைத்துக் கொண்டு தூங்கு என்றால் தூங்குவேனா? இதையெல்லாம் மாட்டவே மாட்டேன். அழகாய் இருப்பவரை நினைத்துக் கொண்டு தூங்கு என்றால் தூங்குவேனல்லவா? அந்தப் பெருமான் அவ்வளவு ஆச்சர்யமாய் இருக்கிறார். லாவண்யமே வடிவெடுத்தவர். சௌந்தர்யமே உடையவர். அவரை நினைக்க வேண்டுமே. அவரை ஒரு நிமிஷப் பொழுது நினைக்காமல் போனால் அன்றெனக்கவை பட்டினி நாளே!
நாம் ஏகாதசி அன்றைக்குப் பட்டினி கிடக்க வேண்டும். ஆனால் ஆழ்வார்களுக்கு அந்த நாள் பட்டினி கிடப்பதாகத் தோன்றமாட்டேன் என்கிறது. என்றைக்கு பகவானை நினைக்காத நாளோ அன்று தான் பட்டினி நாளாம். அவன் நாமத்தைச் சொல்லாத நாள், அவன் திருமேனி நினைக்காத நாள், அன்றுதான் பட்டினி. மற்றபடி ஏகாதசி அன்றைக்கு நாம சங்கீர்த்தனம் பண்ணிக் கொண்டே இருந்து விட்டால் அன்றைக்குப் பட்டினியே அல்ல. நன்றாக சாப்பிட்டுவிட்டோம் என்று அர்த்தம். இது சாத்திரப்படி நியாயமா என்று கேட்டால், வாயால் சோறு உண்ணக் கூடாது என்றுதானே தர்ம சாத்திரம் சொல்கிறது? மனத்தால் பகவான் என்ற அமுதத்தைப் பருக வேண்டாம் என்று அது என்றைக்காவது சொல்லிற்றா? அப்படியானால் ஒரு இமைப்பொழுதுகூட, ஒரு விநாடிப் பொழுது கூட அவனை மறக்காமல் இருக்க வேண்டும் என்று சொல்லும் அதே ஆழ்வார், மற்றொரு பாசுரத்தில் சொல்கிறார்.
வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்காநாம் என்னே
உரத்தினால் ஈரரியா நேர்வலியோனாய
இரணியனை ஓரரியா நீஇடந்ததூண்
ஓரறியா என்றால் ‘நரத்வம் சிம்மத்வம் (மனிதன் மற்றும் சிங்க உரு) இரண்டும் ஒன்றானவரா’ என்று பொருள். இரண்டையும் பெருமாள் கலந்துவிட்டார். உலகத்தில் இதுபோல் நரமும் சிங்கமும் கலந்தது வேறு இருக்கிறதா சுவாமி? கேள்வியேபட்டதில்லை! இதற்கு சமானமாய் இன்னொரு நரசிங்கம் கிடையாதே!
(வைபவம் தொடரும்)
*ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 18 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்*
மாதவன்!
நரசிங்கத்துக்கு சமானமாய் இன்னொன்றாவது! உனக்கு சமமான இன்னொரு ஆளரி இல்லை என்பதைத்தான் ஆழ்வார் ஓரரியா என்றார். உனக்கு சமமான இன்னொரு அரி இல்லை. நீ ஓரரி என்கிறார்.
இப்போதுதான் பெருமாளுக்குக் கோபம் வருகிறது. அந்தக் காட்சியை மறுபடியும் பார்க்கிறோம். ஹிரண்யனை மடியில் போட்டுக் கிழித்துவிட்டார் பெருமாள். அந்த இடத்தில் ரத்தம் குட்டையாய்த் தேங்கியிருக்கிறது. அதைக் குனிந்து பார்க்கிறார். ரத்தக் குட்டையில் அவருடைய பிரதி பிம்பம் தெரியுமில்லையா? அதாவது இன்னொரு நரசிங்கம் தெரிந்தது. அதைப் பார்த்தவுடனே கோபம் இரண்டு மடங்காகி விட்டது. உலகத்தில் இன்னொரு நரசிம்மமா! ஒரு ராஜாங்கத்துக்கு இரண்டு ராஜாக்கள் இருக்கவே கூடாது. ஒரே ஒரு ராஜாதான் இருக்கலாம் என்று கோபத்துடன் இன்னும் நேராக எழுந்தாராம். அடியார்களெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ‘கோபம் கண்ணை மறைக்கும் என்பது சரியாகத் தான் இருக்கிறது. இது இவருடைய பிரதிபிம்பம் என்பது கூட இவருக்குத் தெரியவில்லையே! பகவானைப் பார்த்து சர்வக்ஞன் சர்வக்ஞன் என்கிறோமே, இவர் என்ன சர்வக்ஞன்? தன் பிரதிபிம்பம் கூடத் தெரியவில்லையா’ என்று கேட்கக் கூடாது!
பக்தனிடத்தில் உள்ள பாசம் அவர் கண்களை மறைத்தது என்பதுதான் உண்மை. இல்லையென்றால் அவருக்கு இல்லாத ஞானமா? அவருக்கு அந்த பிம்பத்தில் உள்ளது தான்தான் என்பது தெரியாதா? ஆக நரசிங்கத்திற்கு சமானமாய் இன்னொரு நரசிங்கம் கிடையாதல்லவா? இதைத்தான் பிரம்மாத்வைதம் என்கிறோம். பிரம்மத்துக்குத் திருமேனி உண்டு. பிரம்மத்துக்குக் கல்யாண குணங்கள் உண்டு. பிரம்மத்துக்கு விபூதி உண்டு. பிரம்மம் சகுணமாகத்தான் இருக்கும். அவருக்குத் திருமேனி உண்டு. குணமும் உண்டு. எல்லாமும் உண்டு. பின்னே இரண்டாவது இல்லை... இரண்டாவது இல்லை என்றால் என்ன அர்த்தம்?
இப்பேர்ப்பட்ட லக்ஷ்மியுடன், இப்பேர்ப்பட்ட பிரஹ்லாதனுடன், இப்படிப்பட்ட சங்க சக்கரங்களுடன், இப்பேர்ப்பட்ட ஆபரணங்களுடன், இப்படிப்பட்ட ஆழ்வார்களுடன் பக்தர்களுடன் பாசுரங்களுடன், இவற்றையெல்லாம் பெருமாள் சேர்த்திருக்கிறார் அல்லவா? அப்படி சேர்ந்திருக்கும் விசிஷ்ட பிரம்மத்தைப் போல மற்றொரு பிரம்மம் கிடையாது. ஆகவே, பிரம்மத்துக்கு இன்னொன்று கிடையாது என்பதில்லை. பிரம்மத்தைப் போல இன்னொன்று கிடையாது என்பதுதான் உண்மை. இதைத்தான் பிரம்மாத்வைதம் என்று சொல்கிறார்கள்.
இந்தப் பாசுரத்தில் ஒரு வேடிக்கை பாருங்கள். நாம் இப்போது லக்ஷ்மி நரசிம்ம வைபவம் பார்க்கிறோம். ஆனால், ஆழ்வார் என்ன சொல்லி அழைக்கிறார்? ‘மாதவ’ என்று அழைக்கிறார். நரசிம்மப் பெருமாளுக்கு, முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வார் கொடுக்கும் பெயர் ‘மாதவ!’ மா என்றால் மகாலக்ஷ்மி. தவ: என்றால் சுவாமி. மகாலட்சுமிக்கு சுவாமி யாரோ அவரை அழைக்கிறார். அவரேதான் லக்ஷ்மி நரசிம்மன்.
ஹே மாதவ. வரத்தை ரொம்பவும் பெரிசாய் மதித்துவிட்டான் ஹிரண்ய கசிபு. உன்னை மதிக்காமலேயே போனான். உன்னிடத்தில் அபசாரப்பட்டிருந்தாலாவது சரி. மாதவனிடத்திலே படலாமா?
நாராயணனிடத்தில் அபசாரப்படலாமாம். கேசவனிடத்தில் அபசாரப்படலாமாம். மாதவனிடத்தில் படக்கூடாதாம். அதிலென்ன வித்யாசம் என்று கேட்கிறீர்களா? கேசவப் பெருமானும் மாதவப் பெருமானும் ஒருவர் தானே? வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை... என்று தானே பாடினார் ஆண்டாள்?
கேசவப் பெருமான் என்றால் நல்ல கேசவாசம் அழகு உள்ளவர். கேசி என்ற அரக்கனைக் கொன்றவர். பிரம்மா, சிவன் இவர்களுக்கெல்லாம் முதலிலே தோன்றியவர். எனினும் கேசவன் என்றால், பிராட்டி சம்பந்தமே அந்தப் பெயரின் சப்தத்தில் இல்லை அல்லவா? ஆனால், மாதவன் என்று சொன்னால் லக்ஷ்மிக்குத் தலைவன் என்று அர்த்தம். வெறும் பெருமானிடத்தில் அபசாரப் பட்டால்கூடப் பரவாயில்லை. ஆனால் பிராட்டியுடன் சேர்ந்திருக்கிற பெருமாளிடம் என்றைக்கும் அபசாரப்படவே கூடாது. ஆனால், ஹிரண்ய கசிபு என்ன செய்தான்? லக்ஷ்மியுடன் சேர்ந்திருக்கும் பெருமானிடத்தில் அல்லவா அபசாரப்பட்டுவிட்டான்?
‘தனக்குத் தவ வலிமை நிறைய இருக்கிறது. தன்னை யாரும் ஜெயிக்க முடியாது’ என்று தப்புக்கணக்குப் போட்டுவிட்டான். உன்னுடைய திருவடித் தாமரையைத் தலையால் வணங்க மாட்டேன் என்று சொல்லிவிட்டானாமே! உன் திருவடியை வணங்கிவிட்டால் எல்லோருக்கும் உஜ்ஜீவனம். பக்தர்கள் செய்த குற்றங்களை நீ மன்னித்துவிடுகிறாய். ஆனால் அவன் உன் திருவடியை வணங்க மறந்தான்.
உரத்தினால் என்றால் பலத்தால் என்று அர்த்தம். வரத்தை வாங்கி வாங்கி சக்தியை சேர்த்து வைத்திருக்கிறான் அல்லவா! பெருமாளுடன் சண்டை போடுமளவுக்கு ஒருவரைக் கொண்டு நிறுத்தியிருக்கிறார்களே! இல்லையென்றால் பெருமாளுக்கு வற்றலும் தொற்றலுமாய் ஏதாவது ஒன்றைக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தால், நரசிம்மனுக்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும்? என் தோளுக்குத் தகுந்த மாதிரி ஒரு ஆளைக் கூட்டிக் கொண்டு வா என்றால், எலும்பும் தோலுமாய், ஒருவரைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறாயே என்று சொல்லும் படியாகவாய் ஒருவரைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள்? இல்லை இல்லை. இவருடன் சண்டை போடுமளவுக்கு வலிமை மிக்கவன். எனவே, வரத்தில் பலம் நினைந்தவன் என்று நினைத்துவிட்டான். அது வரத்தினால் ஏற்பட்ட பலம் அல்ல! வரம் கொடுத்த பிரம்மாவைக்கூடப் படைத்த பகவானின் திருவடியின் பலம் ஆகும் என்பதை மறந்தே போனான். லட்சுமி நரசிம்மரிடத்திலேயே அபசாரப்பட்டுவிட்டானே!
இதே விஷயத்தை ராமாயணத்தில் மாரீசன் தெரிவிக்கிறார். ராவணன் மாரீசனிடத்தில் சென்று, மாய மானாகவா... சீதையைக் கவர்ந்து கொண்டு வரவேண்டும். எனக்கு உதவி செய்" என்று கேட்டான். அப்போது மாரீசன் ராவணனுக்கு ரொம்பவும் உபதேசிக்கிறார்.
ராவணா, நீ அபசாரப்படுகிறாய். ராம வைபவம் தெரியாமல் பேசுகிறாய். ராமரிடத்தில் அபசாரப்படால்கூடத் தப்பித்து வந்துவிடலாம். ஆனால் சீதாராமரிடத்தில் அபசாரப்படாதே. பகவானைக்கூட நாம் புத்தியால் தெரிந்து கொண்டுவிடலாம். ஆனால் லக்ஷ்மி நரசிம்மன், லக்ஷ்மி நாராயணன், ஸ்ரீயஹ்பதி என்பவரை அறிந்து கொள்வது நடவாத காரியம். அவன் பெருமை நம்மால் சொல்லொணாது.
“சீதையுடன் கூடிய ராமரிடத்தில் அபசாரம் செய்யக்கூடாது" என்று அன்றைக்கு மாரீசன் சொன்னதையேதான் இன்று இவர் சொல்கிறார்.
பிராட்டி பக்கத்தில் இருக்கும்போது பெருமானைப் பற்றிக்கொண்டு நாம் தைரியமாகக் காரியங்ளை முடித்துக் கொள்ளலாம். அதைவிட்டுவிட்டு அவரையும் விரோதித்துக் கொண்டு அவளையும் விரோதித்துக் கொண்டாரல்லவா, அதுதான் பெரிய குற்றம்!
(வைபவம் தொடரும்)
ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 19 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்
திருவன்!
ஆக, இமைப்பொழுதும் மறக்காமல் பெருமானையே நினைக்க வேண்டும், அவன் திருவடிகளையே பற்ற வேண்டும். லக்ஷ்மியுடன் கூடியிருக்கும் நரசிம்மப் பெருமானையே நினைவில் கொள்ளவேண்டும் என்பன முதல் ஆழ்வாருடைய பாசுரம்.
அடுத்ததாக பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி பாடியிருக்கிறார். அதில் ஒரு பாசுரத்தில் தெரிவிக்கிறார்.
வரம் கருதி தன்னை வணங்காத வன்மை
உரங்கருதி மூர்க்கத்தவன்மை
நரங்கலந்த சிங்கமாய்க் கீண்ட திருவன்
அடியிணையே அங்கண் ஞாலத்து
அமுது
லக்ஷ்மி நரசிம்மப் பெருமானின் திருவடித் தாமரைகள்தான் நமக்கு அமிர்தம் போன்றவை. முந்தைய ஆழ்வார் மாதவன் என்று பிராட்டியுடன் சேர்த்தே சொன்ன மாதிரி, இந்த ஆழ்வாரும் திருவன் என்று குறிப்பிட்டுள்ளார். திருவன் என்றால் லக்ஷ்மியுடன் கூடியிருக்கும் பெருமான் என்று அர்த்தம். வரத்தை முக்கியமாகக் கருதாதவராம் பெருமாள். ஸ்ரீமன் நாராயணனை நோக்கித் தவம் இருந்து வரம் பெற்றார் என்று நாம் அதிகமாகக் கேள்விப் பட்டிருக்க மாட்டோம். பிரம்மாவைக் குறித்து தபஸ் பண்ணினார் என்றும், சிவனைக் குறித்துத் தவம் பண்ணினார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம். வரங்கள் பெற்றதாக அறிந்திருக்கிறோம். அப்படியானால், ஏன் ஸ்வாமி, உங்கள் பெருமான் வரமே தரமாட்டாரா?" என்று கேட்பார்கள். கொடுப்பார். இவர் கொடுக்கும் வரத்தை வாங்கிக் கொள்வதற்கு யாரும் தயாராக இல்லை. இவர் கொடுக்கும் ஒரே வரம் மோக்ஷம்! வைகுந்தத்தை உடனே கொடுத்து விடுவார்.
அப்படியானால் நாம் முன்வருவோமா? ஏதோ இந்த உலகத்திலேயே நன்றாய் வாழ்வதற்கான வரம் ஏதாவது இருந்தால், அதைப் பெற்றுக் கொள்ள முன் வருவோமே தவிர, மோக்ஷத்தை யார் விரும்பி ஏற்போம்?
பகவான் பகவத் கீதையில் சொல்கிறார்: எல்லோரும் எங்கெங்கோ ஓடி பிராயச்சித்தங்களெல்லாம் செய்கிறார்களே, எல்லோரும் எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்? எல்லோரும் ஏன் உன்னிடம் வரவில்லை?" என்று கேட்டால், அதற்கு அவர் சொல்கிறார்... அதையெல்லாம் பண்ணினால் அவர்களுக்குப் பலன் கைமேல் கிடைக்கிறது. சின்னச்சின்னத் தேவதைகள் எல்லாம், எதை எதைக் கேட்கிறார்களோ அதையெல்லாம் கொடுக்கின்றனர். ஆனால் அர்ஜுனா, நான் அதுபோல் கொடுப்பதில்லை. பார்த்துப் பார்த்து இவர்களுக்கு இதைக் கொடுக்கலாமா கொடுக்கலாமா என்று யோசித்துக் கொடுப்பேன்!" நாம் கேட்கும் ஐஸ்வர்யங்களையெல்லாம் அவரால் கொடுக்க முடியும். கொடுப்பார். ஆனால், அவர் கொடுப்பதோ மோக்ஷானந்தம்!
அதற்கு எந்த வயதில் முன்வருவோம்? சதாபிஷேகம் ஆன பிற்பாடு போனால் போகிறது என்று வருவோம். பின்னே, பதினைந்து வயதிலும், இருபது வயதிலும் வருவோமா? ‘பகவானே எனக்கு எண்பத்தைந்து வயதில் மோக்ஷத்தைக் கொடு’ என்றுகூட ஒருவன் வேண்டமாட்டான்! ஒருவேளை அவனுக்கு வயது தொண்ணூற்றைந்து என்றிருந்து, அவன் பாட்டுக்கு, ‘எனக்கு எண்பத்தைந்தில் மோக்ஷம் கொடு’ என்று கேட்டு வைத்தால், அபத்தம் அல்லவா! அதனால் கேட்க மறுக்கிறான்!
ஆனால், ஆழ்வார் என்ன சொல்கிறார் தெரியுமா? “கூவிக் கொள்ளும் காலம் இன்னும் குறுகாதோ” என்கிறார். பிறந்த அன்றையிலிருந்து, ‘என்றைக்கு மோக்ஷம் கிடைக்கும்’ என்று எண்ணிக் கொண்டே இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
என்றைக்கோ மோக்ஷம் என்று இருக்க வேண்டியதில்லை. இன்றைக்குக் கூப்பிடுகிறாரா? அப்படியானால், உடனே இன்றைக்கே கிளம்பத் தாயராக இருக்க வேண்டும். அப்படிக் காத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், இந்த ஹிரண்ய கசிபு பட்ட அபசாரத்தை அவர் சொல்கிறார்.
நரம் கலந்த சிங்கமாகிய திருமால், லக்ஷ்மி நரசிம்மமா இருந்தபோது, இவன் வரத்தைப் பெரிதாக நினைத்து விட்டான்! அவரைப் போய் சேவித்தால் என்ன கொடுத்துவிடப் போகிறார்? மோக்ஷம் என்ற வரத்தை அளிப்பார். ‘சுவாமி எங்கள் குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகள் தீரவே தீராதா?’; ‘என் பெண்ணுக்குக் கல்யாணம் ஆகாதா?’; ‘பதவி உயர்வு கிடைக்காதா?’ என்றெல்லாம் கேட்டால்... நிச்சயமாக நடக்கும். இவை அனைத்தையுமே பெருமாள் பண்ணுகிறார். எந்த வரத்தைக் கேட்டாலும் கொடுப்பார். ஆனால், நாம் அந்தத் தாழ்ந்த பலன்களைக் கேட்கலாமா? என்பதுதான் கேள்வி.
மிக உயந்த பலனைப் பெற்றுக் கொண்டுவிட்டால், மற்றதெல்லாம் தானே வந்து சேருமே! ஆனால், தாழ்ந்த ஒன்றைக் கேட்டால், உயர்ந்தது கிடைக்காது அல்லவா?
நான் ஒருவரிடம் போனேன். ஸ்வாமி அடியேனுக்கு லட்ச ரூபாய் வேண்டும். கோயில் கைங்கர்யம் செய்ய வேண்டும்" என்று பிரார்த்தித்துக் கொண்டேன். அவர் உடனே, அதனால் என்ன? கொடுத்து விடுகிறேன்" என்றார். நான் ஒரு பைத்தியம். அப்படியானால் பத்தாயிரம் ரூபாய் கொடுப்பீரா?" என்று கேட்டேன். இது என்ன பைத்தியக்காரத்தனம்! அவர்தான் லட்சமே கொடுக்கிறேன் என்கிறாரே? அவரால் பத்தாயிரம் ரூபாய் கொடுக்க முடியுமே?
ஆகவே, உயர்வான ஒன்றைக் கொடுப்பவரால், அதற்குக் கீழே உள்ளவற்றைத் தன்னிச்சையாகக் கொடுக்க முடியும் இல்லையா?
அப்படிப்பட்ட பெருமாளிடம், சாதாரண விஷயங்களை, லௌகீகமான தேவைகளைக் கேட்கலாமா?!
(வைபவம் தொடரும்)
*ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 20 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்*
துருவனின் தவம்!
அதிகமாய் ஒருவர் கொடுக்க முடியும் என்றால், அதற்குக் கீழே உள்ள எதையும், அவரால் சுலபமாகக் கொடுக்க முடியும் என்றுதானே அர்த்தம்! ஒரு தேவதை ஆரோக்கியத்தைக் கொடுக்கும். ஒரு தேவதை பணம் காசு கொடுக்கும். ஒரு தேவதை புத்திரப்பிராப்தி கொடுக்கும். ஒரு தேவதை கல்யாணம் செய்து வைக்கும். ஒரு தேவதை மோட்சத்தைக் கொடுக்கும்.
அப்படியானால், கீழே உள்ள தேவதைகள் எல்லாம் சேர்ந்து, மேலே உள்ள தேவதைக்கு உட்பட்டு ஒவ்வொன்றைக் கொடுக்கும். ஆனால், கீழே உள்ள தேவதையால் மோட்சத்தைக் கொடுக்க முடியாது. மோட்சத்தையே கொடுக்க முடிந்த ஒருவரால், கல்யாணம் செய்து வைக்க முடியாதா? மோட்சத்தையே கொடுக்க முடிந்த ஒருவரால், பதவி உயர்வு வாங்கித் தர முடியாதா? தாராளமாகத் தருவார்தான். ஆனால், அவர் லட்சம் கொடுக்கத் தயாராய் முன் வரும்போது, நாம் ஐயாயிரம் கொடு என்று கேட்கலாமோ? நம்முடைய புத்தி ஹீனமான தன்மையை அவரிடமாய் காண்பிப்பது? இருந்தாலும் வரம் வரமென்று எல்லோரும் கேட்கிறார்கள்!
பக்த துருவன் பகவானைக் குறித்து தபஸ் பண்ணிக் கொண்டிருக்கிறான். அவன் உத்தானபாதன் என்கிற அரசனுடைய பிள்ளை. ஸ்வயம்புவ மனுவை பிரம்மா படைத்தார். ஸ்வயம்புவ மனுவுக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் ப்ரியவிரதன். இன்னொருவன் உத்தான பாதன். உத்தானபாதனின் மகன்தான் பக்த துருவன். துருவன் தன் தகப்பனார் மடியில் ஏறி உட்கார வேண்டும் என்று விரும்பினான். ஆனால், மாற்றாந்தாய் வந்து தடுத்தாள். “என் குழந்தைக்குத்தான் அந்த உரிமை உண்டு. நீ எப்போது என் வயிற்றில் பிறக்கவில்லையோ, உனக்கு அந்த உரிமை கிடையாது" என்று சொல்லித் தடுத்து விட்டாள்.
பிள்ளைக்குக் கோபம் வந்துவிட்டது. அடிபட்ட பாம்பைப்போல நேராகக் காட்டுக்குப் போனான். பகவானைக் குறித்து தபஸ் பண்ணினான். கோரத்தவம். ஐந்தே மாதங்கள். அவன் வலது காலைக் கீழே வைத்தால் பூமி இந்தப் பக்கம் சாய்கிறதாம். அவன் இடது காலைக் கீழே வைத்தால் பூமி அந்தப் பக்கம் சாய்கிறதாம். தேவர்களுக்கெல்லாம் பயம் வந்துவிட்டது. உடனே, இந்திரன் தன் நாற்காலிக்கு ஆபத்து என்று நினைத்து பயப்பட ஆரம்பித்து விட்டான். அவனுக்கு எப்போதும் அந்த பயம் தான். அந்த நாற்காலியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பான் போலிருக்கிறது. யாராவது தபஸ் செய்ய ஆரம்பித்தால் போதும். ரம்பா, திலோத்தமை, ஊர்வசி, மேனகை இவர்களில் யாரையாவது அனுப்பி, அந்தத் தவத்தைக் கலைக்கத் திட்டமிட்டு விடுவான். எப்படியாவது தன் பதவியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமல்லவா! அதுபோல இந்திரனும் மற்ற தேவர்களும் பகவானிடத்தில் ஓடிப்போய், “உன்னைக் குறித்து ஒரு பிள்ளை தபஸ் பண்ணுகிறார். உடனே அதை நிறுத்தி, எங்கள் ராஜ்ஜியத்தையும் பதவிகளையும் மீட்டுக் கொடு" என்றார்கள்.
பகவான் சொன்னார்: “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்களே, அதுபோல நீங்கள் எல்லோரும் இப்போது பயந்து போய்க் கிடக்கிறீர்கள். அவன் முதலில் எதற்காகத் தபஸ் பண்ணுகிறான் என்று பார். தேவர்களே... என்னைக் குறித்துத் தபஸ் பண்ணுகிறவன் என்னைத் தவிர மற்ற எதையும் கேட்பதில்லை. மற்றதைக் கேட்டால் நான் கொடுப்பதில்லை. முதலில் அப்படிக் கேட்பவன் என் பக்தனே இல்லையே!" என்றார்
யார் பகவானுக்கு பக்தனாகிறான்? அவரை மட்டுமே விரும்புகிறவன்தான் பக்தன். பிரயோஜனாந்தர சம்பந்தத்தைத் தொலைத்தவன். அதாவது பலன்களின் மீது பற்று வைக்காதவன்.
அப்படியானால் என்னதான் வேண்டுமாம் துருவனுக்கு என்று கேட்டார்கள்.
அதற்கு பகவான் சொன்னான்: “தேவர்களே, உங்களுக்கு அது புரியவே போவதில்லை. அவனுக்கு என்ன வேண்டுமோ, அதைக் கொடுக்க எனக்குத் தெரியும். நீங்கள் தைரியமாகப் போய்விட்டு வாருங்கள். உங்கள் பதவிக்கெல்லாம் எந்த ஆபத்தும் இல்லை" என்று சொல்லி, பகவான் அவர்களை அனுப்பி வைத்தார்.
கருடவாகனாரூடனாக வந்து துருவனின் முன்னால் பகவான் நிற்கிறார். அப்போதும் அவன் கண்களைத் திறக்காமல் இருக்கிறான். பகவானே கண்முன் நிற்கும்போது அவன் கண்மூடி தபஸ் செய்கிறான். அவன் யோக மார்க்கத்தில் உள் புறமாக பகவானைப் பார்த்து சேவித்தவன். ஆகவே, வெளியில் உள்ள பெருமாள் தெரியவில்லை. ஆகவே, பகவான் என்ன செய்தார் தெரியுமா? அவன் உள்ளத்துக்குள் இருக்கும் தன் உருவத்தை மறைத்தார். மறைத்தவுடனே, அவர் எங்கே என்று தேடுவதற்காகக் கண்களைத் திறந்தான். அதே உருவத்துடன் அவன் முன்னால் நின்று சேவை சாதித்து விட்டார் பெருமான். ஆஸ்ச்சர்யமாக சேவித்துவிட்டான். அவன் கேட்ட வரம் என்ன?
பகவான் கேட்கிறார்: “நான் உனக்கு தரிசனம் கொடுத்து விட்டேனப்பா... என்ன வரம் வேண்டும்?" என்று கேட்கிறார்.
“அதைத்தான் கொடுத்துவிட்டீர்களே!" என்றான் அவன்.
“நான் வந்திருக்கிறேனே! ஏதாவது வரம் கேளேன்" என்று சொல்லிப் பார்த்தார்.
“நீ வந்ததே பெரிய வரம்" என்றான். வேறு எதையுமே நான் பிரார்த்தித்ததில்லை. உன் சேவையைத் தவிர, மற்றொரு வரத்தை நாங்கள் பிரார்த்திக்கப் போகிறோமா?
உன் திருவடித் தாமரைகள் கிடைத்தவனுக்கு மற்றதெல்லாம் எப்படி இருக்கும்? அச்சுதனுடைய திருவடித் தாமரை கிடைத்தால் அது பொற்றாமரை அடிகள். இது கிடைத்துவிட்டால், யாரும் பொன்னை விரும்பமாட்டார்கள். அவன் மற்ற அத்தனையையும் புல்லுக்கு சமமாக மதிப்பான்.
அப்படி இருக்கும்போது நேரிலேயே பெருமானைப் பார்த்த பக்தன் பிரஹ்லாதன், பக்தன் துருவன் ஆகியவர்கள் மற்றொரு வரத்தை எதிர்பார்ப்பார்களா?
ஆனால், அதைப் புரிந்து கொள்ளவில்லை இந்த ஹிரண்யகசிபு. தான் பெற்ற வரத்தைத்தான் பெரிதாய்க் கருதி விட்டான். அந்த வரமே பகவான்தான் என்று நினைத்துக் கொள்ளாமல் போய் விட்டானல்லவா?
அதைத்தான் ஆழ்வார், ‘வரம் கருதித் தன்னை வணங்காத வன்மை’ என்றார். தன்னை வெற்றி கொள்வதற்கு இந்த உலகில் ஒரு ஆள் கூட இல்லை என்று இறுமாந்திருந்தான். பெருமானை வணங்காதிருந்தான்.
உரங்கருதி மூர்க்கத்தவனை... அதாவது, தனக்கு எவ்வளவு பலம் இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக மூர்க்கமாக நடந்து கொண்டு விட்டான்.
அப்படிப்பட்டவனை ‘நரம் கலந்த சிங்கமாய்க் கீண்ட திருவன்...’ அதாவது மனிதத் தன்மையும் மிருகத் தன்மையையும் கலந்து கொண்டு வந்தவன் ஹிரண்யனை கீண்டு கிழித்துப் போட்டான். திருவன் என்றால் (திரு = மகாலட்சுமி) லட்சுமி நரசிம்மன் என்று அர்த்தம்.
இந்த இடத்திலும் சேராத இரண்டை சேர்த்திருக்கிறார் பாருங்கள் பெருமான்! நரத்துவம், மனிதத்துவம் இரண்டையும் சேர்த்த பெருமை ஒரு பக்கம் இருக்கட்டும். கோபமும் பிரசாதமும் எங்கேயாவது ஒன்று சேருமோ? அதைச் சேர்த்தார் பாருங்கள்.
ஒருவர் மிகவும் கோபப்பட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் சிரித்துக் கொண்டே கோபப்படுவது சாத்தியமா? அழுது கொண்டே இருக்கும் ஒருவன், அதே சமயத்தில் சிரிக்க முடியுமா? ஒருவன் நன்றாத் தூங்கிக் கொண்டே இருக்கிறான். உபன்யாசம் நன்றாய் இருந்தது என்று எப்படி சொல்ல முடியும்? ஒன்று தூங்க முடியும் அல்லது உபன்யாசத்தைக் கேட்க முடியும்! ஆனால், இவர் சேராத இரண்டை சேர்த்து வைத்தாரே!
அது எப்படி?
(வைபவம் தொடரும்)
*ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 21 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்*
சிரிப்பையும் கோபத்தையும் சேர்த்தவர்!
மத்யான வேளையில் ஒருவர் சாப்பிட்டுவிட்டு உபன்யாசம் கேட்க உட்காரும் போது, லேசாகக் கண்ணை அசத்தும்! அதைத் தூங்குகிறார் என்றெல்லாம் நாம் சொல்லிவிடக் கூடாது! அதற்கு பிரம்மானுபாவம் என்று பெயர். ஆத்மா பிரம்மத்துடன் அனுபவிக்கிறது அல்லவா! ஆத்மா பிரம்மத்துடன் அனுபவிப்பதற்காகத்தான், இரவில் நாம் தூங்குகிறோம். அதனால்தான் காலையில் தூங்கி எழுந்தவுடன் இந்திரியங்கள் எல்லாம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஆக... உபன்யாசம் என்பதும் பிரம்மானுபவத்தைப் பெறுவதற்காகத்தானே?
இதை எதற்காக சொல்ல வந்தேன் என்றால், தூங்கிக் கொண்டு இருக்கும் ஒருவரால், உபன்யாசம் செய்து கொண்டும் இருக்க முடியுமோ? தூங்கிக் கொண்டு இருக்கும் ஒருவரால், உபன்யாசம் கேட்டுக் கொண்டும் இருக்க முடியுமோ? நடந்துகொண்டே இருக்கும் ஒருவர், படுத்துக்கொண்டும் இருக்க முடியுமோ? இவற்றையெல்லாம் போலத்தான் கோபமும் அருளும் சேரவே சேராது. கோபித்துக் கொண்டால் கோபிக்கத்தான் முடியும். அருள் புரிந்தால் அருள் புரியத்தான் முடியும்.
ஆனால், இங்கு ஒரு ஆச்சர்யம் பாருங்கள். ஒரு கண் சூரியனைப்போல கோபத்தைக் காண்பிக்கிறது. தகிக்கிறது. மற்றொரு கண் சந்திரனைப்போலே அனுக்கிரகத்தைப் பொழிகிறது. குளிர்கிறது. ‘சந்திர சூர்யௌச நேத்ரே’ என்று உபநிஷதம் சொல்கிறது அல்லவா? குளிர்ச்சி ஒரு பக்கம். தகிப்பு ஒரு பக்கம். கோபம் ஒரு பக்கம். பிரசாதம் மறுபக்கம். இது நடக்குமா? ஹிரண்ய கசிபுவினிடத்திலே ஒரு பக்கம் கோபத்தைக் காட்டுகிறார். பிரஹ்லாதனிடத்திலே மறுபுறம் பிரசாதமாகிய அருளைக் காட்டுகிறார். நாம்கூட அவற்றை ஒரு உருவத்தில் சேர்த்துவிடலாம். எப்படி என்று கேட்கிறீர்களா? ஒரு பொம்மை பண்ணினால் சேர்த்துவிடலாம்! ஆனால், நிஜ உருவத்தில் சேராத... சேர முடியாத கோபத்தையும் பிரசாதத்தையும் சேர்த்தார் அல்லவா? இது நடக்குமா? ஒரு உதாரணத்தையும் பார்க்கலாம்.
ஒரு குகை இருக்கிறது. அதில் ஒரு சிங்கம் படுத்திருக்கிறது. அது பெண் சிங்கம். அது இப்போதுதான் குட்டிகளைப் போட்டிருக்கிறது. தன்னுடைய மார்பகத்திலிருந்து அது பால் ஊட்டிக் கொண்டிருக்கிறது. அப்போது வாசலில் ஒரு யானை வந்து நிற்கிறது. அந்த யானை பிளிறுகிறது. எப்போதுமே யானையின் பிளிறலை மட்டும் சிங்கத்தால் பொறுத்துக் கொள்ளவே முடியாது! ஒரே கோபமாக வந்தது. அந்தக் கோபத்துடன் எழுந்தது அந்தப் பெண் சிங்கம். அப்படியே எழுந்து குகையின் வாசலை நோக்கிச் சென்றது. அப்போது குட்டிகள் எல்லாம் பால் சாப்பிட்டுக் கொண்டே இருந்தன. அந்தப் பக்கம் கண்ணைப் பார்த்தால் கோபம் கொப்பளிக்கிறது யானையைப் பார்த்து. இந்தப் பக்கம் தன்னுடைய மார்பகத்திலிருந்து பால் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆக, ஒரு பக்கம் குட்டிகளுக்குப் பால் ஊட்டிக் கொண்டிருப்பது அருள். பிரசாதம். இன்னொரு பக்கம் யானையைப் பார்த்து கோபமாக கர்ஜித்துக் கொண்டிருக்கிறது. இதை ஒரு சாதாரண சிங்கமே பண்ணும் போது, சிங்கப் பிரானால் பண்ண முடியாதா என்ன?
இவ்வாறாக ஒரு பக்கத்தில் கோபமும் ஒரு பக்கத்தில் பிரசாதமுமாக இரண்டும் உள்ளன என்பதற்கு என்ன சாட்சி? திருவன்! திருவன் என்று சொன்னாலே லக்ஷ்மியை பிரசாதத்துக்காக... அருள் பொழிவதற்காக மடியில் வைத்துக் கொண்டிருக்கிறார். தன்னைக் கோபத்துக்காக வைத்துக் கொண்டார்! லக்ஷ்மி தேவி என்றால் திரு அல்லவா? திருவை உடையவன் திருவன்.
எந்த மடத்தில் வேண்டுமானாலும் போய் சேவித்துப் பாருங்கள். பெரிய பெரிய ஆசார்ய புருஷாளின் எந்தத் திருமாளிகையில் வேண்டுமானாலும் போய் சேவித்துப் பாருங்களேன். அழகியசிங்கர்தான் திருவாராதனப் பெருமாளா இருப்பார். எந்த மடாலயத்திலும் ஆசிரமத்திலும், அப்படித்தான் சேவை சாதிப்பார் பெருமாள். ஏன் அவரே இருக்கிறார் என்று கேட்கிறீர்களா? சேராததை சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டுமல்லவா?
சாஸ்திர வாக்கியங்கள் இருக்கின்றனவே... அவற்றை மேலெழுந்த வாரியாகப் பார்க்கக்கூடாது. அப்படிப் பார்த்தால், ஒவ்வாமை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஒன்றோடு ஒன்று ஒத்து வரவே வராது. இந்த வாக்கியம் இப்படி சொல்கிறது. ஆனால், அந்த வாக்கியம் அப்படி சொல்கிறதே? இதனோடு அது ஒத்துப் போகவே இல்லையே! பிரம்மம் சகுணமா? பிரம்மம் நிர்க்குணமா? பிரம்மம் ஜகத் காரணமா? பிரம்மம் உபாதான காரணமா? நிமித்த காரணமா? ஒன்று சொல்லும் பேத ஸ்ருதி. மற்றொன்று சொல்லும் அபேத ஸ்ருதி.
மேலெழுந்த வாரியாகப் பார்த்தால், ஒன்றுக்கொன்று முரண்பாடு இருந்து கொண்டே இருக்கிறதல்லவா? இந்த முரண்பாடுகளையெல்லாம் களைவதுதான் பூர்வாசார்யர்களுடைய வேலை. அந்த சாஸ்திர வாக்கியமும் சரிதான். அந்த சாஸ்திர வாக்கியமும் சரிதான். இரண்டும் ஏக அபிப்ராயம். இரண்டும் ஐக்கியம். இரண்டும் ஏகமானதாகத்தான் சொல்கிறது.
இதனால்தான் ஸ்ரீராமானுஜர், தனது ஸ்ரீபாஷ்யத்தின் இறுதியில் ‘இதி ஸர்வம் சமஞ்சஸம்’ என்று சாதித்தார். அதாவது, “இப்படியாக ஒன்றுக்கொன்று பேத வாக்கியங்களெல்லாம், முரண்பாடில்லாமல் ஒருங்கவிடப்பட்டன” என்றார். அப்படியானால் முரண்பாடில்லாமையைப் பண்ணுவதே ஆசார்யர்கள்தானே? முரண்பாட்டை சரிப்படுத்திவிட்டது யார்? லக்ஷ்மி நரசிம்மன்; அழகிய சிங்கப் பெருமான்தானே? அதனால்தான் அவரையே எல்லோரும் திருவாராதனம் பண்ணுகிறார்கள், சேராத இரண்டை சேர்த்துக் கொடுப்பதற்காக.
நம்மிடமும் எத்தனையோ பொருந்தாத விஷயங்கள் இருக்கும். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கல்யாணம் பண்ணிக் கொள்கிறோம். எல்லாம் பொருந்திவிடுகிறதா என்ன? அதிலும் இப்போதெல்லாம் ரசாயனம் ஒத்து வர வேண்டும் என்று ஒன்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஆங்கிலத்தில் ஏதோ வாக்கியம்கூட சொல்கிறார்கள். அப்படியானால்தான் மேற்கொண்டு கல்யாணம் செய்து கொள்வோம் என்கிறார்கள். கல்யாணம் ஆன பிற்பாடு ஏதோ ஒரு பிணக்கு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதனால் ஒவ்வாமை என்று ஏற்படுகிறது. அவள் பிறந்து வளர்ந்தது எங்கேயோ. இவன் பிறந்து வளர்ந்தது எங்கேயோ. ஒருவருடைய மனசு மற்றொருவருக்குத் தெரியாது. அவன் மனசு இவளுக்குத் தெரியாது. இவள் மனசு அவனுக்குத் தெரியாது. கல்யாணம் பண்ணிவிடுகிறோம்.
‘அந்த மாதிரி இருந்தாலே ஆபத்தாயிற்றே! அப்படிப் பண்ணிக் கொள்ளலாமா?’ என்று கேட்டால், தாராளமாப் பண்ணலாம் சுவாமி! நரசிம்மப் பெருமாளை சேவித்துக் கொண்டே பண்ணிக் கொள்ளலாம். அவர்தான் பொருந்தாததை, உடனே பொருத்தி விட்டுவிடுகிறார் அல்லவா!
இரண்டு விஷயங்கள் பொருந்தவில்லையே என்று கவலையே பட வேண்டாம். உடனே, நரசிம்ம ஸ்வாமியிடம் போய் வேண்டிக் கொண்டால் பொருந்திவிடும். “ஸ்வாமி... தேவரீர்தான் பொருந்தாததைப் பொருத்தியவர். எங்களுக்கும் என்ன பொருத்தம் என்று புரியவில்லை. நீர்தான் பொருத்தி வைக்க வேண்டும். நீர்தான் ரக்ஷிக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டால், அவர் பொருத்திவிட்டுப் போகிறார்.
கோபத்தையும் பிரசாதத்தையுமே பொருத்திய நரசிம்மருக்கு, ஒரு ஆணையும் பெண்ணையும் பொருத்துவதா கஷ்டம்! அது பெரிதா என்ன?
மேலும் அவர் காட்டுகிறார். இத்தனை கோபத்துடன் நான் இருக்கிறேன். பிராட்டியைப் பார்! நேர் எதிர்!
முதலில் அவர்கள் இருவருக்குள் எப்படி ஒத்துப்போயிற்று என்று நாம் தெரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில் நமக்கு ஒத்துப்போகிறதா, ஒத்துப் போகிறதா? என்று பார்க்கிறோமே தவிர, கருணையே வடிவெடுத்தவள் அவள், கோபமே வடிவெடுத்தவர் இவர்! இவர்கள் இரண்டு பேருக்கும் எப்படி ஒத்துப்போகிறது என்று கேட்டீர்களானால், அவளுடைய தாக்கம்... பாதிப்பு அதிகம் இவரிடத்தே! எப்படி என்ற கேட்கிறீர்களா?
(வைபவம் தொடரும்)
*ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 22 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்*
அம்மான்!
பெருமாள் காரியமெல்லாம் தாயாரிடத்தில் ஒன்றும் செல்லுபடியாகாது. நாம் இந்த விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். பெருமாளுடைய காரியம் சுமாராத்தான் செல்லுபடியாகும்! பிராட்டி நினைப்பதுதான் எப்போதும் நிறைவேறும்! பங்குனி உத்திரத் தன்றைக்குப் பெருமாளுக்கும் பிராட்டிக்கும் சேர்த்தி நடக்கிறதல்லவா? அப்போது ஸ்ரீரங்கத்தில் பார்த்தீர்களானால், ஸ்ரீரங்க நாச்சியார் உட்கார்ந்திருப்பாள். நம்பெருமாள் நின்று கொண்டிருப்பார். எப்போதுமே யார் உட்கார்ந்திருக்கிறார்களோ அவர்கள்தானே ஆணையிடப் போகிறார்கள் என்று அர்த்தம்! யார் நின்று கொண்டிருக்கிறார்களோ அவர்கள்தான் வேலை செய்யப்போகிறார்கள் என்று அர்த்தம்.
இதிலிருந்தே நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா! அமரிக்கையா அமர்ந்த திருக்கோலத்தில் ஸ்ரீரங்க நாச்சியார். நடத்துவதற்காக… ஆணையை நிறைவேற்றுவதற்காக… நம்பொருமாள் எழுந்தருளியிருக்கிறார். இருவரும் சேர்ந்து நம்மை ரக்ஷிக்கிறார்கள் அல்லவா? அவள் ஆசைப்பட்டபடியெல்லாம் அவர் நடத்தி விடுகிறார். ஆனால் ஒரு விஷயம் தெரியுமா? அவர் திருவுள்ளத்தில் என்ன ஆசை இருக்குமோ அதைத்தாள் இவள் பேசுவாள்! அதுதான் அவர்கள் இரண்டு பேருக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமை. இவள் பேசினால் அவர் செய்து முடித்துவிடுவார். அவர் என்ன நினைக்கிறாரோ அதைத்தான் இவர் பேசுவார் என்பதுதான் ஆச்சர்யமான உண்மை. அதன் பெயர்தான் ஒற்றுமையான தாம்பத்யம்.
நம்மையெல்லாம் தம்பதிகள் என்பார்கள். ஆனால் பெருமாளையும் பிராட்டியையும் திவ்ய தம்பதிகள் என்பார்கள். ஏனெனில், அவர் நினைப்பதை அவள் பேசுகிறாள்; அவள் பேசுவதை அவர் செய்துவிடுகிறார் அல்லவா! அந்த லக்ஷ்மி நரசிம்மனான பெருமானின் திருவடிகளை நாம் பற்றுவோம். இவர் கோபமே வடிவெடுத்திருந்தாலும், அவள் கருணையே வடிவெடுத்தவளாக இருப்பதால் அந்த பாதிப்பு ஏற்பட்டு ஏற்பட்டு இவரே ஸ்வாதந்த்ரியத்தை இழந்துவிட்டார். அவளைப் போலவே ஆகிவிட்டார். கோபத்தை மறந்து இவரே கருணை வள்ளலாக இருக்கிறார். அப்படிப்பட்ட பெருமாளைப் பற்றாமல் போய் ஹிரண்யன் தவறிழைத்தான். லக்ஷ்மி நரசிம்மனாகிய பெருமானின் திருவடிகளே அமிர்தம். சம்சாரம் என்பது பெரும் விஷம். சம்சாரம் என்னும் பெரும் பாம்புக்கும் அமிர்தமாகவே லக்ஷ்மி நரசிம்மன் இருக்கிறான். இது பூதத்தாழ்வாருடைய பாசுரம்.
அடுத்ததாக, ஐப்பசி மாதத்திலே சதய நட்சத்திரத்திலே, மைலாப்பூரிலே திரு அவதாரம் செய்த பேயாழ்வார் சாதிக்கிறார்.
அங்கற்கிடரின்னி அந்திப் பொழுதத்து
மங்க இரணியன் தாகத்தை
பொங்கி அரியுருவமாப்பிளந்த அம்மானவனே
கரியுருவம் கொம்பொசித்தான் காய்ந்து
ஒருத்தர் நரசிம்மப் பெருமான். ஹிரண்ய கசிபுவை முடித்தவன். இன்னொருத்தன் கண்ணன். அவன் கரியுருவன் கொம்பொசித்தான். அதாவது, குவலயா பீடம் என்ற யானையை வதைத்தவன். கொம்பொசித்தான் என்றால் தந்தத்தை முறித்தான் என்று அர்த்தம் அல்லவா? அங்கே அரியுருவமாக முடித்தான். இங்கே கரியுருவத்தை முடித்தான். அரியுருவமே கரியுருவத்தை முடித்தது என்கிறார் ஆழ்வார். அரி என்றால் சிங்கம். கரி என்றால் யானை. சிங்கத்துக்கு யானையைக் கண்டாலே பிடிக்காதல்லவா? சிங்கமும் யானையும் ஜென்மப் பகை அல்லவா?
ஆனால், நரசிங்க அவதாரத்தில் யானையைக் கொன்றதாக நாம் படித்ததில்லையே! கேள்விப்பட்டதில்லையே? கிருஷ்ணாவதாரத்தில்தான் குவலயா பீடம் என்ற யானையைக் கொன்றார் என்று தெரிகிறது. அப்படியானால் நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்? பழைய அவதார வாசனை! அந்த நரசிம்மனே கண்ணனாக அவதாரம் பண்ணியிருக்கிறார். அப்போதே யானையைக் கொன்றிருக்க வேண்டும். விட்டு விட்டு விட்டு இந்த அவதாரத்தில் ஒரு வழியாக் கொன்றிருக்கிறார். சிங்கம் என்றால் யானையைக் கொன்றிருக்க வேண்டுமல்லவா? பழைய ஞாபகத்தில்தான் இப்போது கொன்றிருக்கிறார் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அங்கற்கிடறின்றி என்பதில் அங்கன் என்றால் மகன் என்று அர்த்தம். ஹிரண்யகசிபுவின் அங்கத்திலிருந்து தோன்றியவன். ‘அங்கஜ’ என்பார்கள். எனவே, அங்கன் என்று பெயர் கொடுத்தார். அங்கற்கிடறின்றி என்றால் அந்தக் குழந்தை பிரஹ்லாதனுக்கு எந்த ஓர் இடருமில்லாமல் - அதாவது ஒரு கஷ்டமும் வராமல், அந்திப் பொழுதத்து என்றால் மாலைப் பொழுதில் பெருமாள் தோன்றினார். எப்போதும் நரசிம்மப் பொருமானுக்கு எது சொன்னாலும் மாலைப் பொழுது முக்கியமல்லவா? அவரை மாலை வேளையிலும் ஸ்தோத்திரம் பண்ண வேணும். ஏனென்றால் அவர் அவதாரம் பண்ணினதே மாலைப் பொழுதில்தான். ராமாவதாரம் பகல் அவதாரம். கிருஷ்ணாவதாரம் ராத்திரியில் பண்ணினார் - இருட்டோடு இருட்டாகக் கரிய உருவத்தில் பிறந்து மறைந்து ஒளிய வசதியாக! பகலில் பிறந்திருந்தால் கம்சன் உடனே கண்டுபிடித்துவிடுவான். ராத்திரியிலேயே கிளம்பிப் போய்விட்டான். எனவே, கண்ணன் இருளன்ன மாமேனி வண்ணன். வெய்ய கதிரோன் குலத்திற்கோர் விளக்கு என்பது ராமரின் பெருமை. சூரிய குலத்தவன் என்பதால் ராமர் பகலில் அவதாரம் செய்தார்! கண்ணன் பிறந்தது சந்திர குலத்தில். சந்திரன் உலவும் இரவு வேளையில் அவதாரம் பண்ணினார்.
நரசிம்மர் என்ன செய்தார்? அதுதான் ஹிரண்யன் வரம் கேட்டிருக்கிறானே! உள்ளே மரணம் கூடாது. வெளியில் மரணம் கூடாது. மனிதரால் மரணம் கூடாது. விலங்கினால் மரணம் கூடாது. பகலில் மரணம் கூடாது. இரவில் மரணம் கூடாது. என்றெல்லாம் கேட்டிருக்கிறான் அல்லவா? அவர் உள்ளேயும் உட்கார்ந்து கொள்ளவில்லை, வெளியிலும் உட்கார்ந்து கொள்ளவில்லை. ரேழியில் உட்கார்ந்து கொண்டார். இடை கழி என்று சொல்வோமல்லவா. அந்தப்பகுதி தான் ரேழி. நரங்கலந்த சிங்கமாய் இருந்ததால் மனிதனும் அல்ல. மிருகமும் அல்ல. சாயங்காலத்தில் தான் கிழித்தார். பிராணன் இருக்கும் ஆயுதமும் இல்லை. பிராணன் இல்லாத ஆயுதமும் இல்லை. ஆகாயத்திலும் இல்லை பூமியிலும் இல்லை. நகத்தையே ஆயுதமாக வைத்துக் கொண்டுவிட்டார்.
அவர் நினைத்தாராம். தன்னுடைய பிள்ளை பிரம்மா. அவன் ஒன்றை சொல்லிவிட்டான். அதிலிருந்து துளியும்மாறக் கூடாதாம். ஒன்றுகூட வீணாய்ப் போய்விடக் கூடாதாம். எனவே ரொம்பவும் ஜாக்கிரதையாகப் பிறக்கிறாராம். பெருமாள் பிறவியே இல்லாதவன். அப்படி இருக்கும்போது, தன் பக்தனுக்காக எத்தனை பாடுகள் பட்டு சிரமங்களுடன் பிறக்கிறார் பாருங்கள்! நாம்தான் கர்மாதீனமா மிகுந்த சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுப் பிறக்க வேண்டும். அவர் பிறக்கவே வேண்டாம். இருந்தாலும் ஆசையாகப் பிறக்கிறார். அப்படி இச்சாதீனமாய் பிறப்பதற்கு இத்தனை சட்டம். இவ்வளவு நியமங்கள்!
அது மட்டுமில்லாமல் அங்கற் கிடறின்றி… குழந்தையாகிய... பிள்ளையாகிய பிரஹ்லாதனுக்கு சிரமம் இல்லாமல், அந்திப் பொழுதத்து அதாவது, மாலைப் பொழுதிலே, மங்க இரணியனதாகத்தை அதாவது இரணியன தாகத்தை மங்க என்று நாம் படிக்க வேண்டும். இரணியனின் உடம்பு மங்கிப் போகும்படி என்று அர்த்தம். பொங்கி அரியுருவாப்பிளந்த அம்மானவனே. பொங்கி, அதாவது கோபத்துடன் பொங்கி எழுந்து, அம்மான் அதாவது ஸ்வாமி. அவனே அம்மான். நமக்கு ஸ்வாமி. ஒரு குழந்தைக்கு இடர் வந்ததென்றால் பெருமாள் பொறுத்துக் கொண்டிருப்பதில்லை. யானைக்கு இடர் ஏற்படுகிறது என்று கஜேந்திரவரதன் ஓடோடி ரக்ஷித்தான். ஒரு சிறுவனான, அசுரனாகிய ஹிரண்ய கசிபுவின் குழந்தைக்கு இடர் ஏற்பட்ட அன்றும் ஓடோடி வந்தான். பெற்ற தந்தையே கைவிட்டாலும் எல்லாருக்கும் தந்தையான பகவான் கைவிடுவதேயில்லை!
(வைபவம் தொடரும்)
ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 23 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்
பிதா!
பகவான்தான் அனைவருக்கும் பிதா. இங்கே பெற்ற பிதாவான ஹிரண்யன், இந்த இடத்தில் கைவிட்டு விட்டானே! கொல்வதற்கல்லவா பார்த்தான். கைகேயி பெற்ற தாயார். ஆனால், பரதனுக்கு எவ்வளவு கஷ்டம் கொடுத்தாள்? அப்போதும் ராமன் கைவிட வில்லை. நம் உற்றார், உறவினர், தாய், தந்தை இவர்களெல்லாம் ரட்சகன்... ரட்சகன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே! இவர்கள் எல்லோராலும் கைவிடப்பட்ட போதும் பகவான்தான் வந்து ரட்சிக்கிறான்.
அங்கற்கிடறின்றி என்று பாடினார் ஆழ்வார். பிறந்த குழந்தைக்குக் கஷ்டம் கொடுக்காமல் நடத்தினாராம் பகவான். ஆனால், ஹிரண்யகசிபு எவ்வளவு கஷ்டம் கொடுத்தான்! மலை முகட்டிலிருந்து பிடித்து உருட்டிவிட்டான். குழந்தை உருண்டு உருண்டு வரும்போது, தனது ஹ்ருதயத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டானாம். இந்த இடத்தில்தான் பகவான் வசிக்கிறார். ‘நான் உருண்டு விழும்போது, என் உடம்பு உருண்டு அவரும் உள்ளே உருண்டு விழுந்துவிட்டால்,’ என்ன செய்வது என்றானாம்.
நாம் கோயிலாழ்வார் வைத்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா? அதற்குள் சாளக்கிராம மூர்த்தியாக பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். அவர் உருளவே கூடாது. நாம் எங்கேயாவது ஊர்ப் பிரயாணம் செல்ல வேண்டுமென்றால், அதை ஜாக்கிரதையாகக் கட்டி எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்தவுடனேயே, அவரவர் நேராக இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும். நாம் பாட்டுக்கு ஏதோ ஒரு பொருள் எடுத்துக்கொண்டு செல்வது போல் அவரை எடுத்துக்கொண்டு போகக் கூடாது. அவரை, அவராக எடுத்துக் கொண்டு போக வேண்டும். அவரைப் பற்றிய எண்ணத்தோடேயே எடுத்துக் கொண்டு போக வேண்டும். போனவுடனேயே தீர்த்தமாடிவிட்டு, ‘பத்திரமாக் கொண்டு போனோமா’ என்று திறந்து பார்க்க வேண்டும். நாம் செய்வோமோ இல்லையோ, பிரஹ்லாதன் செய்தான்.
பகவான் என்னுடைய ஹ்ருதய கமலத்தில் எழுந்தருளியிருக்கிறார். ‘நான் உருளப்போக, அவர் உருண்டுவிட்டால் என்ன செய்வது’ என்று கெட்டியாகப் பிடித்துக் கொண்டாராம். மலையிலிருந்து பிடித்து உருட்டிவிட்டால், கீழே வந்து பெருமாள் ஏந்திக் கொள்கிறார். மலையைப் பார்த்தவுடனேயே அவனுக்கு பயமே வரவில்லையாம்.
‘நீலமலையிரண்டு....திண்டோள்’ என்கிறார் ஆழ்வார். பெருமாளுடைய தோள்களைப் போன்று, இந்த மலையிருக்கிறதே... என்று நினைத்துக் கொள்கிறான். அவனை நெருப்பில் போட்டு அழுத்தப்போனால், அந்த நெருப்பைப் பார்க்கிறான். ‘என் பிரபுவுக்கு இப்படித் தான் ஒளி இருக்கும்’ என்று நினைக்கிறான். ‘அவருடைய திருமேனி ஒளியைப் போல் இருக்கிறதே’ என்று நினைக்கிறான். விஷத்தைக் கொடுத்தால், ‘இது என் கண்ணனுடைய கருமேனி வர்ணத்திலிருக்கிறதே’ என்று நினைத்துக் கொள்கிறானாம். யானைக் காலில் இடற வைத்தால், இதைப்போல ஒரு யானையை ரக்ஷிக்கத்தானே எம்பெருமாள் ஓடோடி வந்தார்’ என்று நினைக்கிறான். பாம்பை விட்டுக் கடிக்க வைத்தால், ‘இந்தப் பாம்பில்தானே சயனித்துக் கொண்டிருப்பார் பெருமாள்’ என்று நினைக்கிறான்.
கடலில் போட்டு அழுத்தப்பார்த்தால், ‘மனத்துள்ளான், மா கடல் நீருள்ளான் மலராள் தனத்துள்ளான்’ என்று தோன்றுகிறதாம். ‘இந்தக் கடலில் தானே அவன் சயனித்துக் கொண்டிருக்கிறான்’ என்று நினைத்தான். ஆக ஒன்றுமே அவனுக்குத் தீங்கு செய்ய மறுக்கிறது. இப்படியே எல்லாவற்றையும் பகவானுடைய சம்பந்தத்தோடேயே நினைத்துக் கொண்டிருந்தாராம். இவற்றையெல்லாம் பார்த்தும், இவை தன் பிள்ளையின் பெருமை என்று ஒத்துக் கொள்வதற்கு, ஹிரண்ய கசிபுவுக்கு மனசு வரவில்லை. என்ன ஒரு இறுமாப்பு. இந்தக் குழந்தை, நல்ல குழந்தை பக்தன் என்று நினைப்பதற்கு அவனுக்கு மனசு வரவில்லை. அவன் ‘என்னைக் கண்டு எமனுக்கு பயமல்லவா? அதனால் என் பிள்ளையையும் பார்த்து பயப்படுகிறான். அவனையும் நெருங்க மாட்டேன் என்கிறான்,’ என நினைத்துக் கொண்டான். தன் பிள்ளைக்கு உயிர் போகாமல் இருப்பதற்குக் காரணம் இறைவனாலே என்று ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்கு செருக்கு. தன்னாலே என்று நினைக்கிறான்.
கொல்லப் பார்த்தான். அடிக்கப் பார்த்தான். சிறையில் அடைக்கப் பார்த்தான். இந்தச் சிரமங்களைப் பெற்ற தகப்பனே கொடுத்தபோதும்கூட, பகவான் வந்து ரக்ஷித்துவிட்டான். பொங்கினான். அரி உருவமாகப் பிளந்தான். ஹிரண்ய கசிபுவை முடித்த நரசிம்மப் பெருமான் என்று பெயர் பெற்றான். இதைப் பாடிய இதே பேயாழ்வார் கடைசியில் மூன்றாம் திருவந்தாதியில் அற்புதமாய் சொல்கிறார்.
புகுந்திலங்கும் அந்திப் பொழுதத்து அரியா
இகழ்ந்த இரணியனதாகம் சுகிர்ந்தெங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே!
வந்தித்தென் நெஞ்சமே வாழ்த்து!
வந்தித்து என்றால் சேவித்து என்று அர்த்தம். நெஞ்சமே பெருமானை வணங்கு. அவனை சேவித்து வாழ்த்த வேணும். ‘நமஹ நமஹ’ என்று போற்ற வேண்டும். பல்லாண்டு பல்லாண்டு என்று சொல்லு. அதனால்தான் லக்ஷ்மியும் பெருமாளும் சேர்ந்திருப்பது பல்லாண்டு. எல்லோரும் மனசார அவனுக்கு மங்களா சாசனம் பண்ண வேண்டுமாம்.
ஆழ்வார் சொல்கிறார், ‘சிந்தப் பிளந்த திருமால் திருவடியே’ என்கிறார். சிந்தப் பிளந்த மால். சிந்தப் பிளந்த நரசிங்கன். சிந்தப் பிளந்த திருமால் திருவடியே என்றார். ஆளரி என்று சொல்லாமல் திருமால் என்று சொன்னதிலிருந்து லக்ஷ்மியுடன் கூடிய நரசிம்மன் என்று ஆகிறதல்லவா! அந்திப் பொழுதத்து என்கிறார். அந்த மாலைப் பொழுது மிகவும் சிறப்பாக இருந்ததாம். என்ன சிறப்பு என்று கேட்டால், ஹிரண்ய கசிபுவே செக்கச் செவேல் என்றிருக்கிறானாம். பெருமாளுக்குக் கோபம் கொப்பளிப்பதால் சிவப்பாய் இருக்கிறார். அவர் பிடரிமயிரை சிலிர்த்துக் கொண்டிருக்கிறார். அது சிவப்பாக உள்ளது. இவனைக் கிழித்தவுடனேயே, உடம்பிலிருந்து ரத்தம் பீறிட்டெழுகிறது. அது சிவப்பாக உள்ளது. சாயங்கால வேளை. ஆகாயம் வேறு சிவப்பாக உள்ளது. இந்த மொத்த சிவப்பும் சேர்ந்து, எந்த சிவப்பு எதில் உள்ளது என்றே தெரியவில்லையாம். ஒரே பளபளப்பு. ஒரே சிவப்பு.
இகழ்ந்த இரணியன் என்றால் பெருமாள் இல்லை என்று நாத்திக வாதம் செய்த இரணியன் என்கிறார். சுகிர்ந்து எங்கும் சிந்தப் பிளந்த என்றால், அவனுடைய மார்பைப் பிளந்து ரத்தம் சிந்தும்படியாக கிழித்துப் பிளந்தார் என்கிறார். திருமாலே - லக்ஷ்மி நரசிம்மனுடைய திருவடியே. வந்தித்து - என் நெஞ்சமே வாழ்த்து. இது பேயாழ்வார் பாசுரத்தில் சாதித்தது.
பொய்கையார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் பார்த்து விட்டோம்.
இனி அடுத்தது திருமழிசையாழ்வார். அவர் இரண்டு திவ்யப் பிரபந்தங்கள் பாடினார். ஒன்று நான்முகன் திருவந்தாதி. மற்றொன்று திருச்சந்த விருத்தம். அதில் நான்முகன் திருவந்தாதியில் பதினெட்டாவது பாசுரத்தில்,
மாறு ஆய தானவனை வள் உகிரால்
மார்வு இரண்டு கூறாகக்
கீறிய கோள் அரியை வேறாக
ஏத்தியிருப்பாரை வெல்லுமே
மற்று அவரைச்
சார்த்தியிருப்பார் தவம்
என்று பாடினார்.
நரசிம்மப் பெருமானை யாரெல்லாம் போற்றுகிறார்களோ, யாரெல்லாம் ஸ்தோத்திரம் செய்கிறார்களோ, அவர்களுக்கு இருக்கும் வைபவத்தைச் சொல்கிறார் இந்தப் பாசுரத்தில். அது என்னவென்று பார்ப்போமே!
(வைபவம் தொடரும்)
ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 24 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்
ஆழ்வார் எழுப்பிய வினா !
நரசிம்மப் பெருமானுக்கு இருக்கும் வைபவத்தைவிட, அவனைச் சார்ந்திருக்கும் பக்தர்களுக்கு வைபவம் அதிகம். அந்த பக்தர்களைவிட, அந்த பக்தர்களின் பக்தர்களுக்குப் பெருமை.
எப்படி?
மாறாய தானவனை - மாறாய - பகவானுக்கு மாற்றுக் கருத்து கொண்ட, அவனை எதிர்த்த - தானவனான ஹிரண்ய கசிபுவை, வள் உகிரால் மார்பிரண்டுக் கூராகக் கீறிய - வள் உகிரால் - கூரான நகத்தால் இரண்டு கூராகக் கிளறிய, கோள் அரியை வேறாக ஏத்தியிருப்பாரை வெல்லுமே - அந்தப் பெருமாளை யாரெல்லாம் ஏத்திக் கொண்டு இருப்பார்களோ, யாரெல்லாம் ஸ்தோத்திரம் பண்ணுகிறார்களோ, மற்று அவரைச் சார்த்தியிருப்பவர் தவம் - அவனை யார் சார்ந்து இருக்கிறார்களோ, அவர்கள் செய்யும் தவம் இன்னும் உயர்ந்தது என்கிறார்.
அப்படியானால் பெருமாளை ஸ்தோத்திரம் பண்ணுகிறவர்கள் ஒரு கோஷ்டி. ஸ்தோத்திரம் பண்ணுகிறவர்களை ஸ்தோத்திரம் பண்ணுகிறவர்கள் இன்னொரு கோஷ்டி. இந்த கோஷ்டியைவிட, அந்த கோஷ்டி உயர்ந்தது என்கிறார்.
அடுத்து பார்க்கப் போகிற பாசுரம்தான் லக்ஷ்மிநரசிம்மனுடைய அழகைச் சொல்லும் பாசுரம். பகவானுக்கு, ‘நாரசிம்ஹ வபுஹு,’ ‘ஸ்ரீமான்’ என்று இரண்டு திருநாமங்கள். விஷ்ணு சகஸ்ரநாமத்தில், நாரசிம்ஹ வபுஹு - விஷ்ணு நரசிம்மப் பெருமான் உருவத்தை எடுத்துக் கொண்டார். ஸ்ரீமான் - பார்த்தவுடனேயே பயம் ஏற்படும் உருவம் அல்லவா. இந்த இடத்தில் லக்ஷ்மி நரசிம்மன் என்று மட்டும் அல்ல, அழகுடைய ஸ்ரீ, அழகுதான் ஸ்ரீ. அழகே வடிவெடுத்தவன் பெருமானாம்.
இவையா திலவாத் திலந்தெரி காண்
இவையா எரிவட்டக் கண்கள் -இவையா
எரிபொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரிபொங்கிக் காட்டும் அழகு
பெருமாள் வாயைப் பெரிதாகத் திறந்தார் அல்லவா - இவையா திலவா - பெரிய பிலத்துவாரத்தைப் போல, குகையைப் போல இருந்தது. எரி காண் - நாக்கு வெளியே வந்து எரிவதுபோல இருக்கிறது - இவையா எரிபட்ட கண்கள் - கொழுந்து விட்டு எரியும் துண்டங்களைப் போன்ற இரண்டு கண்கள் - அங்கண் ஞால மஞ்ச அங்கோர் அரியா அவதரித்தவன். இவையா எரிபொங்கு காட்டும் இமையோர் பெருமான் - இமையவர்களுக்கெல்லாம் பெருமான், சர்வேஸ்வரன். சர்வ வியாபகன், - அரி பொங்கிக் காட்டும் அழகு - அரி, நரசிங்கப் பெருமான், சிங்கத்தின் பொங்கும் அழகு. அதனால் பெருமாள் பயங்கரமானவர் என்று நினைக்கக் கூடாது. பயங்கரம்தான்!
நான் ஹிரண்யகசிபுவாக இருந்தால் பெருமாள் பயங்கரமாகத்தான் இருப்பார். நான் பிரஹலாதனாக இருந்தாலோ, அதே பெருமாள் அழகாக இருப்பார். ஆகவே, நான் யாராக இருக்கிறேன் என்பது முக்கியம். நான் ஹிரண்யகசிபுவாக இருந்தால், அவர் பயங்கரமாக இருப்பார். நான் பிரஹலாதனாக இருந்தால், அவர் பிரியங்கரமாக இருப்பார். என் உள்ளத்தில் நல்ல சிந்தனையுடன் போனேனா, அல்லது தீய சிந்தனையுடன் போனேனா என்பதுதான் முக்கியம். இதை அடுத்த பாசுரத்தில் திருமழிசை ஆழ்வார் சாதிக்கிறார்.
அழகியான் தானே அரி உருவன் தானே
பழகியான் தாளே பணிமின் -
குழவியாத் தானேழுலகும் தன்மைக்கும்
தன்மையனே
மீனா உயிரெடுக்கும் வித்து
அழகியான் தானே அரி உருவம் தானே - அரி உரு, சிங்க உரு. சிங்க உரு ரொம்ப அழகாக இருக்கிறது. இருக்குமா? பார்த்தால் பயங்கரமாக இருக்கிறதே. எப்படி அழகாக இருக்கும்? சிங்கம் காட்டுக்கே அரசன். நாம் எல்லோரும் மிருகக்காட்சி சாலையில் பார்க்கிறோமே! என்னதான் மற்ற மிருகங்களுக்கு என்று ஒரு அழகு இருந்தாலும், சிங்கத்தின் அழகு அழகு தான். திரும்பத் திருப்பத் தன்னைப் பார்க்க வைக்கும் சிங்கம். கூண்டுகிட்டே அது வந்தா ஓடி வந்துவிடுவோம்.
ஆனால், தூர நின்று பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றுகிறது, அல்லவா? அது சிங்கத்துக்கே இருக்கும் பெருமை. அது அவருக்கே இருக்கும் அழகு. அதனால் தான் - அழகியான் தானே அரி உருவம் தானே என்றார். பழகியான் தாளே பணிமின் - நம்முடன் எப்போதுமே பழகி அணுகுவதற்குப் பரம சுலபராக இருப்பவர் பகவான். அதனால்தான், அவரது திருவடித் தாமரைகளைப் பற்றுங்கள் என்று, திருமழிசை ஆழ்வார் நான்முகன் திருவந்தாதியில் ரொம்ப ஆச்சரியமாகப் பாடினார். அவரே திருச்சந்தவிருத்தத்தில் ஒரு பாசுரம் பாடி இருக்கிறார்.
வரத்தினில் சிரத்தை மிக்க வாளெயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர்த் தலத்தை ஊன்றினாய்
இரத்திநீ இதென்ன பொய்? இரந்த மண் வயிற்றுளே
கரத்தி உன் கருத்தை யாவர் காண வல்லர் கண்ணனே!
கண்ணனே உன் கருத்து யாருக்குத் தான் தெரியும்? உன்னுடைய வயிற்றில் அனைத்து உலகத்தையும் ஒரு நாள் வைத்தாய். காப்பாற்றினாய். அப்படி என்றால் அது உன்னுடைய சொத்தாகி விட்டதல்லவா? எப்போது உலகத்தையெல்லாம், ‘மஞ்சாடு வரையேழும் கானகமும் மண்ணகமும் எஞ்சாமல் வயிற்ற டக்கினா’ என்று உன் வயிற்றில் வைத்து ரட்சித்தாயோ, அப்போதே அதெல்லாம் உன்னுடையது.
உன்னுடையதை மகாபலிச் சக்கரவர்த்தி பறித்துக் கொண்டு போய்விட்டான் என்றவுடன், அவனிடம் நீ சென்று யாசித்தாயாமே? பிச்சை எடுத்தாயாமே? யாராவது தன் சொத்தை, தானே பிச்சை எடுத்துத் திரும்பிப் பெறுவார்களா? இதென்ன எங்கும் இல்லாத அதிசயமாக இருக்கிறது? எங்கும் இல்லாத கூத்தாக இருக்கிறது? என்று வியக்கிறார்.
இதேபோல, கூரத்தாழ்வான் ஒரு ஸ்லோகத்தில் பகவானை விசாரிக்கிறார். ‘உன்னால் படைக்கப்பட்ட உலகம், உன்னால் காக்கப்படும் உலகம், உன்னால் அழிக்கப்படும் உலகம். அந்த உலகத்தில் ஒரு சின்னப் பகுதியை மகாபலி எடுத்துக் கொண்டு போய்விட்டானாம்! அதை நீ பிச்சை எடுத்துக் கேட்கிறாயாம்! என்ன கதை என்றே எனக்குத் தெரியவில்லை. போ! இதை மீட்பதற்கு பிச்சை எடுப்பதைத் தவிர, உனக்கு வேறு வழியே தெரியவில்லையா?’
அங்கு அவர் கேட்டதைப் போலவே, இங்கு இவர் கேட்கிறார், - இரத்தினி இதென்ன பொய் இரந்த மண் வயிற்றுளே கரத்தி - இந்த மண்ணை நீதானே வயிற்றில் வைத்திருந்தாய்? உன் கருத்தை யார் தான் அறிவார்கள்? என்ன கருத்து என்பதை முதல் வரியில் சொல்கிறார்! - வரத்தினில் சிரத்தை மிக்க வாளெயிற்று மற்றவன்.
உரத்தினில் கரத்தை வைத்து உகிர்த் தலத்தை ஊன்றினாய் - வரத்தால் இறுமாய்ந்து போனான். வரத்திலேயே சிரத்தையாக இருந்து விட்டான். வாளைப் போன்ற எயிறு கொண்ட மற்றவனான ஹிரண்யகசிபு. ஹிரண்யகசிபுவின் மார்பினில் கரத்தை வைத்தாய்.
பக்த பிரகலாதனுக்காக ஹிரண்யகசிபுவை முடித்தான். அவனுக்குத் தன் தரிசனத்தையே வரமாகக் கொடுத்தான். பிரகலாத வரதனாக பெருமான் சேவை சாதிக்கிறார்.
குழந்தைக்கு நல்லது நடந்தால் யாருக்கு முதலில் சந்தோஷம்? தாய்க்கு! தாயின் திருப்தி அடைந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே லக்ஷ்மி நரசிம்மனாக பெருமாள் சேவை சாதித்துக் கொண்டு இருக்கிறார்.
(வைபவம் தொடரும்)
ஸ்ரீ நரஸிம்ம வைபவம்! - 25 - வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன்
பிரம்மாவின் பாட்டி!
நம்மாழ்வாரின் பாசுரங்களைக் கொண்டு, இப்போது நரசிம்மப் பெருமானை அனுபவிக்க வேண்டும். நரசிம்மாவதாரம் என்பதே ஓர் அடியவனுக்காக ஏற்பட்டது. பிரஹ்லாதன் தன் தந்தையிடமே அபசாரப்பட்டான். தன் பக்தன் பட்ட அபசாரத்தைப் பொறுக்க முடியாமல், ‘ஸ்தம்பே சபாயாம் ன ம்ருகம் ன மானுஷம்’ அதாவது சபையிலே... ராஜ சபையிலே… தூணிலிருந்து தோன்றினான். மிருக உருவமும் இல்லாமல், மனித உருவமும் இல்லாமல் நரம் கலந்து சிங்கமாகத் தோன்றினான். ஏன்? மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ, இரவிலோ, உயிருள்ள ஆயுதத்தாலோ, உயிரற்ற ஆயுதத்தாலோ, தனக்கு மரணம் நேரக்கூடாது என்று, பிரம்மாவிடம் தான் பெற்ற வரத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்த ஹிரண்யனை மாய்க்க. அந்த நம்பிக்கையைக்கூட, பிரம்மாவைப் படைத்த ஸ்ரீமன் நாராயணனிடம் வைக்கவில்லை அவன்! அதைத்தான்,
வரத்தினில் சிரத்தைமிக்க வாள் எயிற்று மற்றவன்
உரத்தினில் கரத்தை வைத்து உகிர்த்தலத்தை ஊன்றினாய்
என்கிறார் திருமழிசையாழ்வார். வரத்தினில் சிரத்தை வைத்தான். ஆனால், அந்த வரம் மட்டுமே போதாது. விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் ராமரைக் குறிக்கப் பின்வரும் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பரர்தி, பரம ஸ்பஷ்ட, துஷ்ட, புஷ்ட, சுபேக்ஷண, ராம, விராம.
விராமம் என்றால் ஓய்வு. (விடுமுறை) பள்ளிக்கூடம் பத்து மாதங்கள் நடக்கிறது. இரண்டு மாதங்கள் ஓய்வு. அதைப் போன்றுதான் விராமம் என்பது. யார் ஓய்வெடுத்துக் கொள்வார்களாம்? பகவான் வந்து நம்மை ரக்ஷிக்க வேண்டும் என்றாலோ சிக்ஷிக்க வேண்டும் என்றாலோ, வரம் பெற்றவன் வரம் கொடுத்தவன், கொடுக்கப்பட்ட வரம் மூவருக்கும் ஓய்வு. ராவணன் வரம் பெற்றான். அதற்காக? இல்லை! ராவணனே உயிரிழந்து போனான். ராவணன் சாகமாட்டான் என்னும் வரம் பிழைத்ததா? அதுவும் போய்விட்டது! ஏனெனில் அவனுக்குப் பிராணன் போய்விட்டது. வரம் கொடுத்தவராவது நிலைத்தாரா? அதுவும் இல்லை. இவை எல்லாமே ஓய்வெடுக்கப் போய்விடுமாம்.
ராமனுக்கு முன்பாகவும் நரசிம்மனுக்கு முன்பாகவும் வந்தால், வரமும் நிற்காது. வரத்தைப் பெற்றவனும் நிற்க மாட்டான். வரத்தைக் கொடுத்தவனும் நிற்கமாட்டான்.
வேதாந்த தேசிகன் காமாசிகாஷ்டகம் என்ற அற்புதமான பிரபந்தம் பாடியிருக்கிறார். வேளுக்கை ஆளரி பெருமாளுக்காகப் பாடினார். காஞ்சிபுரத்தைச் சுற்றிப் பல திவ்ய தேசங்கள் உள்ளன. பெருமாளும் திவ்ய தேசங்களை சட்டென்று சௌகர்யமாக சேவித்துவிட்டு வரும் படியாகத்தான் அமைத்திருக்கிறார். அவர் ஒருவேளை நூறு நூறு மைல் தள்ளி ஒவ்வொரு திவ்ய தேசத்தையும் அமைத்திருந்தாரானால் அடியார்கள் மிகவும் கஷ்டப்பட்டிருப்போம்.
நீங்கள் காஞ்சிபுரத்துக்குச் சென்றால், ஒன்றரை இரண்டு நாட்களுக்குள், பதினைந்து திவ்ய தேசங்களை சேவித்து விடலாம். சீர்காழிக்குப் போனால் ஒன்றரை இரண்டு நாட்களுக்குள் பதினைந்து திவ்ய தேசங்களை சேவித்து விடலாம். மதுரைக்குப் போனால், இரண்டு நாட்களுக்குள் பத்து திவ்ய தேசங்களை சேவித்து விடலாம். ஆழ்வார் திருநகரிக்குப் போனால், ஒரே நாளுக்குள் பத்து திவ்ய தேசங்களை சேவித்து விடலாம். அதை விட்டுவிட்டு, தமிழகத்தின் வரைபடத்தைப் பிரித்துப் போட்டு, நூறு நூறு மைல் இடைவெளி விட்டு, பெருமாள் அவற்றை அமைத்திருந்தாரானால், நாம் அங்கு போவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
அவருக்கும் தெரிகிறது; நாம் அருகருகில் அமைத்தாலன்றி, இவன் வரமாட்டான் என்று ஏற்பாடு செய்திருக்கிறார். காஞ்சிபுரத்தைச் சுற்றிப் பல திவ்ய தேசங்கள் உள்ளன. அவற்றில் வேளுக்கை என்பது ஒரு திவ்ய தேசம். ஆளரி - அதாவது நரசிம்மப் பெருமானாக சேவை சாதிக்கிறார். எம்பெருமானுக்கு சமஸ்கிருதத்தில் ஸ்தோத்திரம் பண்ணினார் ஸ்ரீவேதாந்த தேசிகர்.
‘நீ ரக்ஷிக்கிறேன் என்று வரும்போது, வேறு யாரும் ரக்ஷிக்கிறேன் என்று வர வேண்டிய தேவை இல்லை. அதேசமயம், நீ சிக்ஷிக்கிறேன் என்று - அதாவது தண்டிக்கிறேன் என்று வந்தாயானால், நான் யாரை ஒத்தாசைக்குக் கூட்டிக் கொண்டு வந்தும் பிரயோஜனம் இல்லை.’
உண்மைதானே? பெருமாள் சிக்ஷிக்கிறேன் என்று வரும்போது, இந்திரனைத் துணைக்கு அழைக்கிறேன் என்றோ, பிரம்மாவைத் துணைக்கு அழைக்கிறேன் என்றோ அழைத்து ஜெயிக்க முடியுமா? அல்லது, பெருமான் ரக்ஷிக்கிறேன் என்று வரும்போது, வேறு யாரையாவது அழைத்து, ‘ஸ்வாமி பெருமாள் ரக்ஷிக்கிறேன் என்று வந்திருக்கிறார். நீரும் கொஞ்சம் ஒத்தாசைக்கு வந்து ரக்ஷியுங்களேன்’ என்று துணைக்கழைப்போமா? அது பைத்தியக்காரத்தனம். எம்பெருமான் ரக்ஷிக்க வேண்டும் என்று வந்துவிட்டால், வேறு ஏதும் தேவை இல்லை. சிக்ஷிக்க வந்தால், அந்த வரங்கள் ஓய்வு பெற்றுவிடுகின்றன.
அதைத்தான் ‘விராம:’ என்ற ஆச்சர்யமான திருநாமத்தாலே பார்த்தோம்.
தேசிகர் சாதிக்கும்போது, ‘பெருத்த அசுரன்... பொன் பெயரோனான ஹிரண்ய கசிபு... அவனுடைய அரண்மனையில் இருக்கும் தூண்... பிதாமஹி ஆயிற்று’ என்றார். பிதாமஹி என்றால், பாட்டி என்று அர்த்தம். தூண் பாட்டியாகிவிட்டது என்கிறார். தூண் எப்படி பாட்டியாகும்? தூண் என்பது அஃறிணை. அது போய்த் தாத்தா பாட்டியாகவெல்லாம் ஆகுமா? என்றால், உலகத்துக்கே தாத்தா யாரோ அவருக்குத் தாத்தா - அதாவது, பிதாமஹர் என்பது பிரம்மாவுக்குப் பெயர். பிரம்மாவைப் படைத்தவன் பகவான். ‘நான்முகனை நாராயணன் படைத்தான்’ என்று திருமழிசை ஆழ்வார் பாசுரத்தில் குறிப்பிடுகிறார்.
நாராயணாத் பிரம்மா ஜாயதே
நாராயணாத் ருத்ரோ ஜாயதே
என்று உபநிஷதங்கள் ஓதுகின்றன. ஆக, நாபி கமலத்தில் பிரம்மாவைப் படைத்தவன் திருமால். அவர் தந்தை யார். அந்த பகவானே இப்போது இந்தத் தூணுக்குள் கர்ப்பமாக இருக்கிறார் அல்லவா! அப்படியானால் பெருமாளுக்குத் தாயார் இந்தத் தூண்தானே? பிரம்மாவுக்குத் தகப்பனார் பெருமாள். பெருமாளுக்குத் தாயார் இந்தத் தூண். அப்படியானால் தூண் பாட்டிதானே?
(வைபவம் தொடரும்)
No comments:
Post a Comment